மாணவி பலாத்காரம்: ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை - திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் மணலி பகுதியைச் சேர்ந்த மாலா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2009-ம் ஆண்டு பிளஸ் 2 படித்து வந்தார். இவர் மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரான செல்வராஜ் (38) என்பவரிடம் கணித பாடத்துக்கு டியூஷன் சேர்ந்தார்.

இந்நிலையில், வழக்கம் போல் செல்வராஜ் வீட்டுக்கு சென்ற மாலாவுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார் செல்வராஜ். அதுமட்டுமல்லாமல், அக்காட்சிகளை தன் செல்போனில் பதிவு செய்து, இணையதளத்திலும் உலவ விட்டார்.

இதுகுறித்து, மணலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் சவுந்தரராஜன் வாதிட்டார். விசாரணையில் செல்வராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி முருகன் செவ்வாய்க்கிழமை அளித்தார். அதில், மாணவி மாலாவை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அக்காட்சிகளை இணையதளத்தில் உலவவிட்ட குற்றத்துக்காக செல்வராஜுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1.05 லட்சம் அபராதம் விதித்தும், இந்த தொகையை பாதிக்கப்பட்ட மாலாவுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE