அதிமுக அரசின் அவசரக் கோல டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சிக் காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரத்து செய்யப்படும்: ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

அதிமுக அரசின் அவசரக் கோல டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சிக் காலத்தில் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் ஆற்றிய உரை:

இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கின்ற பொழுது 25,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த அந்தரங்கத்தில் இருக்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது. இதை ஒரு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தோம். ஆனால் அது நிகழ்ச்சியாக இல்லாமல் பெரிய மாநாடு போல இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

மருது சகோதரர்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மருது சகோதரர்களாக இருந்து, பெரிய மருது - சின்ன மருது போன்று காட்சி தந்து கொண்டிருப்பவர்கள் தான் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும்.

இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு, எழுச்சியோடு, உணர்ச்சியோடு வந்திருக்கிறீர்கள். எதற்காக இந்த நிகழ்ச்சி என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நம்முடைய கழக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் உங்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஒரு அற்புதமான திட்டத்தை நாம் தீட்டியிருக்கிறோம்.

உங்களுடைய சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் மனுவாக கொடுக்கலாம், நேரடியாக வந்து பதிவு செய்யலாம் என்று சொன்னோம்.

திமுக வெற்றி பெற்று நாம் ஆட்சிக்கு வந்து, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட மறுநாள் இந்தப் பெட்டியைத் திறப்போம். இந்த பெட்டியில் இருந்து மனுக்களை எல்லாம் எடுத்து உங்கள் கோரிக்கைகளை, பிரச்சினைகளை எல்லாம் அதிகாரிகளிடம் எடுத்துச்சொல்லி 100 நாட்களுக்குள் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம், இந்த நிகழ்ச்சி.

ஒருவேளை அந்த 100 நாட்களுக்குள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதைத் தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. இந்த அடையாள அட்டை இருந்தால், எங்கள் பணி முடியவில்லை என்று நேரடியாக சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளே நீங்கள் வந்துவிடலாம். கோட்டையில் இருக்கும் முதலமைச்சர் அறைக்குள் வரும் உரிமையிருக்கிறது.

இவ்வாறு அவர் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ கண்ட தி.மு.க. என்று பெயர் எடுத்து கொடுத்தேன்.இப்போது அந்த உள்ளாட்சித்துறையில் வேலுமணி என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை லஞ்சத்தில், ஊழலில் அமைச்சர் வேலுமணி மிஞ்சிவிட்டார். அவரை உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று சொல்லக்கூடாது. அவரை ஊழலாட்சித்துறை அமைச்சர் என்று தான் சொல்லவேண்டும். எல்லாவற்றிலும் கொள்ளை.

கரோனா காலத்தில் கொள்ளை அடித்த ஆட்சி தான் இந்த ஆட்சி. துடைப்பம், பிளீச்சிங் பவுடர், மாஸ்க்கில் கொள்ளையடித்த ஆட்சி தான் இந்த ஆட்சி. உள்ளாட்சித் துறையை அப்படி ஒரு மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.

அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் வாதாடி 50 சதவீதம் தேர்தல் நடந்தது. ஊராட்சி பகுதியில் மட்டும் தேர்தல் நடந்தது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இன்னும் நடக்காமல் இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக மீதம் இருக்கும் அத்தனை ஊராட்சிப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும், மாநகராட்சிப் பகுதிகளிலும் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்போம் என்ற உறுதியை நான் சொல்லுகிறேன்.

இந்தத் தொகுதியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயரைச் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஃபபூன் மந்திரி என்று சொல்வதா, பலூன் மந்திரி என்று சொல்வதா அவர் பெயரை சொன்னால் எனக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் இந்த மேடைக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இழுக்கு. அதனால் அவர் பெயரை சொல்லவில்லை.இந்த தேர்தலில் அவர் படுதோல்வியடைவார்.

விருதுநகர் மாவட்டத்தின் நீண்ட நாள் பிரச்சினையான அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை. நிச்சயமாக நிறைவேற்றுவேன்.

பட்டாசு தொழில்துறை ஜி.எஸ்.டி.யாலும் மற்றும் பல பிரச்சனைகளாலும் கஷ்டமான நிலைக்கு சென்று விட்டது. கரோனா காலத்திலும் நீங்கள் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால் தான் போன தீபாவளி அன்று ராஜஸ்தான் அரசு பட்டாசு வெடிக்க தடை விதித்த போது அதை நீக்க கோரி அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் நான் கடிதம் எழுதி அதை வற்புறுத்தினேன். பட்டாசு தொழிலாளர்களை பொறுத்தவரையில் உங்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம். நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

பெட்ரோல் விலை உயர்வு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு ஏறிய போதும் அந்த அளவுக்கு விலை ஏற்றத்தை நாம் செய்யவில்லை. ஆனால் இப்போது உலக அளவில் அந்த விலை குறைந்தாலும் மானியங்களை குறைத்து, பல வரிகளை விதித்து பெட்ரோல் - டீசல் விலைகளை கூட்டியிருக்கிறது

இப்போது இருக்கும் அரசு. அதனால்தான் பெட்ரோலின் விலை ஏற்றத்தால் விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. மக்களை மிகவும் பாதித்த பெட்ரோல் - சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.மத்தியில் உள்ள ஆட்சியை அகற்றிவிட்டால் இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு காண முடியும். இதற்கு மக்களாகிய நீங்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும், அதற்குப்பின் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருந்தால் நாம் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இன்றைக்கு வங்கிக்கடன் இல்லை. மானியத்தொகை இல்லை. சுழல்நிதி இல்லை. அவர்கள் எல்லாம் திக்கற்ற நிலையில் இருக்கிறார்கள்.

கலைஞருடைய ஆட்சியில் தான் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டது. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியராக நியமிக்க வேண்டும், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால் அந்த திருமணத்திற்கு உதவித்தொகை இப்படிப் பெண்களுக்கான திட்டங்களை வழங்கிய ஆட்சி - இந்தியாவிலேயே தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சிதான்.

அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தான் இந்த மகளிர் சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அது சின்னாபின்னம் ஆக்கப்பட்டிருக்கிறது. அனாதையாக ஆதரவற்ற நிலையில் அந்த குழுவினர் இருக்கிறார்கள். எங்கு சென்றாலலும் இந்த புகார்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பது போல விரைவில் 3 மாதத்திற்குள் நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவ்வாறு வந்ததற்குப் பிறகு இதெல்லாம் சரி செய்யப்பட்டு ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் எப்படி நடந்ததோ அதை விட அதிகமான அளவிற்கு உங்களுக்கு சலுகைகளும், வசதிகளும், உதவிகளும் நிச்சயம் வழங்கப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

உங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்கள் அத்தனையும் உள்ளே போடப்பட்டு விட்டது. இப்போது இந்கப்பெட்டியை பூட்டி, அதற்கு ஒரு சீல் வைக்கப்போகிறேன். சீல் வைத்து அதற்கு பிறகு இந்த பெட்டியை சென்னைக்கு கொண்டு சென்று விடுவேன். அண்ணா அறிவாலயத்தில் கொண்டு சென்று வைத்து விடுவேன்.

அண்ணா அறிவாலயத்தில் இருக்கும். 3 மாதத்திற்குள் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்து, 234 இடங்களிலும் தி.மு.க. அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது என்ற செய்தி வரப்போகிறது. அவ்வாறு ஆட்சிக்கு வந்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அடுத்த நாள் இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும்.

100 நாட்களுக்குள் இந்த மனுவில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நிறைவேற்றியே காட்டுவான் இந்த ஸ்டாலின். கவலைப்படாதீர்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதலளித்து உரையாற்றினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியை நிறைவு செய்து ஸ்டாலின் ஆற்றிய உரை:

அதிமுக அரசு கடைசி நேரக் கொள்ளையில் மும்முரமாக இறங்கிவிட்டது. ஆட்சி முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டும இருப்பதால் - மக்களுக்கு ஏதாவது நன்மை செய்துவிட்டுப் போவோம் என்று நினைக்காமல் - கடைசி நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவோம் என்று அலைகிறது பழனிசாமி கும்பல்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், வசூல் வேட்டையை நடத்தி முடித்துக் குவித்து விட வேண்டும் என்பதற்காக பழனிசாமி துடித்துக் கொண்டு இருக்கிறார். தனது பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையை சூறையாடி வருகிறார்.

கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்றே மாதங்களில் 2,855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை விட்டுள்ளார். டெண்டர் விடுகிறார் என்றால், அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல. அரசு பணத்தை சுருட்டுவதற்காக டெண்டர் விட்டுள்ளார்.

பத்தாண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் ஒரே வேலை டெண்டர் கொள்ளை தான்! தேர்தல் வரவுள்ள இந்த நேரத்திலும் “கடைசி நிமிட” கையெழுத்துப் போட்டு டெண்டர் விடும் தீவிர நடவடிக்கையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டிருக்கிறார்.

பொதுமக்கள் கோரிக்கை வைத்த போதும், சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட போதும், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அறிவிக்கத் தயங்கிய முதலமைச்சர், இப்போது கமிஷனுக்காகவே புதிய திட்டங்களை அறிவிக்கிறார்.

5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது தமிழகம். கடன் வாங்கி கொள்ளையடிப்பவர்கள் இவர்கள் தான்.

இந்த ஒரு மாதத்திற்குள் எப்படியாவது முடிந்தவரை கஜானாவை சுரண்டி காலி செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டு, இப்படி முதலமைச்சரும், அமைச்சர்களும் டெண்டர்களை விடுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேபோல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பிறப்பிக்கப்பட்ட சட்டவிரோத டெண்டர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கழக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் மனு தரப்பட்டுள்ளது.

அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளும் தங்களுக்கு வேண்டியப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள வசதியாக எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அந்த புகாரில் சொல்லி இருக்கிறோம்.

முதியோர் நிதியுதவி வழங்கப் பணமில்லை; 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் தாய்மார்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லை; ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய பணிப்பயன்களைக் கொடுக்க நிதியில்லை; கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிவர் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்கக் கூட நிதியில்லை; ஆனால் டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதில் பணம் இருக்கிறது என்றால் இது மக்களுக்கான ஆட்சி அல்ல. டெண்டர்களுக்கான ஆட்சி என்பதை மக்கள் உணர வேண்டும்.

“திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து டெண்டர்கள் குறித்தும் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவசர கோலத்தில், கமிஷனுக்காக விடப்பட்டுள்ள அந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்" என்று நான் அறிவித்துள்ளேன்.

மக்கள் பணத்தை சுயநலத்துக்காக சூறையாடியவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவேன் என்பதை விருதுநகர் கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்