ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அமமுக பேனர்கள் அகற்றம்: ஆளும்கட்சியினர் அழுத்தமே காரணம் என குற்றச்சாட்டு

By ந. சரவணன்

தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை காவல் துறையினர் அவசர, அவசரமாக இன்று அகற்றினர். ஆளும் கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பேனர்கள் அகற்றப்பட்டதாக அமமுகவினர் குற்றம்சாட்டினர்.

தண்டனை காலம் முடிந்து பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலா நாளை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் வழியாக சென்னை செல்ல உள்ளார். இதை கொண்டாடும் வகையில் அமமுகவினர் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகளை வைத்தனர்.

இது ஒரு புறம் இருக்க தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்காக நாளை மறுநாள்(9ம் தேதி) ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்துக்கு வர உள்ளார்.

10-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதையொட்டி அதிமுகவினரும் பல்வேறு இடங்களில் பேனர்கள், கட்-டவுட்கள் வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியில் தொடங்கி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அதிமுகவினரும், அமமுகவினரும் போட்டிப்போட்டு டிஜிட்டல் பேனர்களை வைத்தனர்.

சசிகலா வருகை ஒருபுறம், முதல்வர் தேர்தல் பிரச்சாரம் ஒருபுறம் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமே களைக்கட்ட தொடங்கியது.

இதற்கிடையே, முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்யும் இடங்களை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு, சோளிங்கர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடம், முதல்வர் வந்து செல்லும் வழிதடங்களை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

அதன்பிறகு, வேலூர் மாவட்டம், இறைவன்காடு, கே.வி.குப்பம், காட்பாடி,வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே நாளை மறுநாள் இரவு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு நடத்தச் சென்ற பாதைகளில் எல்லாம் அதிமுகவுக்கு இணையாக அமமுகவினரும் பல்வேறு கோணங்களில், பிரம்மாண்டமாக பேனர்களை வைத்ததை அதிமுகவினர் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.

வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனையை நடத்திவிட்டு அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புறப்பட்டார்.

அதன்பிறகு, சிறிது நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டைமற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்ட அமமுக பேனர்களை காவல் துறையினர் அவசர, அவசரமாக அகற்றினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

வேலூர் கிரின்சர்க்கிள், சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பேனர்களும் அகற்றப்பட்டன. புதிதாக பேனர்களை வைக்கவும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. அனுமதி இல்லாததால் பேனர்கள் அகற்றப்படுவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலும், ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்த அமமுக பேனர்கள் அவசர,அவசரமாக இன்று மாலை அகற்றப்பட்டன. இதைகண்ட அமமுகவினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஆளும்கட்சியினர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக காவல் துறையினர் அமமுகவினரின் பேனர்களை அகற்றி வருவதாகவும், இது எதிர்பார்த்த ஒன்று தான், யார் தடுத்தாலும் சசிகலாவின் மக்கள் செல்வாக்கை யாராலும் பறிக்க முடியாது என அமமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்