உலக சாதனை முயற்சியாக இந்தியா முழுவதுமிலிருந்து பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக்கோள்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பள்ளி மாணவர்கள் மத்தியில் செயற்கைக்கோள் தயாரிப்பு, விண்வெளி துறையில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த பயிற்றுவித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டு துவங்கின.
இதற்காக இந்தியா முழுவதுமிலிருந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் சுமார் 1,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தலா 10 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவாக 100 குழுவினருக்கு ஆன் லைன் மூலமும் நேரடியாகவும் கையடக்க பெம்டோ செயற்கைக்கோள்களின் (Femto satellite) வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான அறிவுத் திறன்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த 1000 பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தி கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு ரெக்கார்டு, ஏசியா புக் ஆப் ரெக் கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என 5 சாதனைகள் செய்யும் முயற்சி நேற்று ராமேசுவரத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் தயாரித்த ஒவ்வொரு செயற்கைகோளும் 40 கிராம் முதல் அதிகப்பட்சமாக 50 கிராம் வரையிலும் எடை கொண்டது.
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மார்டின் குரூப்ஸ் அறங்காவலர் லீமா ரோஸ், கலாம் பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலிம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறியதாவது,
”நாங்கள் எல்லாம் ஒரு செயற்கை கோளை தயாரிக்க வருடங்கள் ஆயின. ஆனால் இன்று குறைந்த நாட்களில் மாணவர்கள் 100 செயற்கைகோள்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார்கள்.
இதில் அரசுப் பள்ளியை சார்ந்த மாணவர்கள் அதிகமாக பங்கேற்று இருப்பதும், குறிப்பாக தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிகளவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக தன்னிறைவு பெற்ற நாடாக்கா கலாம் அயராது முயன்றார். அவரது கனவு முழுமையாக நிறைவடையவில்லை.
அவரது கனவை நனவாக்க அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் மூலம் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது,
”சிறிய கரங்களில் பலூன்களை வைத்து விளையாட வேண்டிய குழந்தைகள் பலூன் மூலம் விண்வெளிக்கு செயற்கைகோள்களை மாணவர்கள் அனுப்பி உள்ளார்கள். அப்துல் கலாமின் கனவை நனவாக்கி உள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி அடைகின்றேன். விண்வெளியை பற்றி நமக்கெல்லாம் தெரிய காரணமாக இருந்தவரும் அப்துல் கலாம் தான்.
விண்வெளியில் பல சாதனைகளை கலாம் நிகழ்த்தியது போல் மருத்துவத்துறைக்கு மிகக் குறைந்த செலவில் இருதய நோயாளிகளுக்கு பயன்பெறக் கூடிய ஸ்டெண்ட் எனும் கருவி, போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்தார்.
கலாம் அமைத்துக் கொடுத்த இந்த அடித்தளம் தான் இன்று நமது மருத்துவ விஞ்ஞானிகள் கரோனாவிற்கு சொந்த தடுப்பூசி உருவாக்க வைத்தது” என்றார்.
தொடர்ந்து ஹீலியம் நிரப்பப்பட்ட இரண்டு ராட்சத பலூனில் 100 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஹீலியம் பலூன் சுமார் 38 ஆயிரம் மீட்டர் உயரம் வரையிலும் செல்லக் கூடியது.
ஹீலியம் பலூன் இலக்கினை அடைந்த பின்னர் செயற்கைகோள்கள் பாராசூட் மூலமாக பூமியை வந்தடையும். இந்த செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட ஓசோன் படலம், கதிர்வீச்சு, விவசாயம், காற்றின் வேகம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல விவரங்கள் கணிணிகளில் பதிவு செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 800 மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago