சீமாந்திரா முதல்வராக பதவி யேற்றுக்கொண்ட விழாவில் தனது நீண்டகால நண்பரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து கவுரவித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
சீமாந்திரா முதல்வராக சந்திர பாபு நாயுடு கடந்த 8-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களோடு தனது நண்பர் வைகோவையும் சந்திரபாபு நாயுடு அழைத்திருந்தார். இதை ஏற்று, பதவியேற்பு விழாவில் வைகோவும் கலந்துகொண்டார்.
போராட்டத்திலும் கைகோத்தவர்
இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். 2000-ம் ஆண்டு ஜூலையில் ஈரோட்டில் நடந்த மதிமுக மாநாட்டில் அப்போது ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண் டார். இதன்பிறகு 2010-ல் ஆந்திராவில் விவசாயிகள் பிரச் சினைகளுக்காக சந்திரபாபு நாயுடு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது அதில் கலந்து கொண்ட வைகோ, ஆங்கிலத்தில் அரை மணி நேரம் உரை நிகழ்த்தினார். உணர்ச்சிமிக்க அந்த உரை, அப்போதே தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
‘மறக்க முடியுமா வைகோ?’
இந்நிலையில், சீமாந்திரா பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட வைகோவை கைகுலுக்கி முகம் மலர வரவேற்றார் சந்திரபாபு நாயுடு. விழா பந்தலில் இருவரும் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர். அப்போது, 2010 உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் கலந்துகொண்ட போட்டோவை நாயுடுவிடம் காட்டிய வைகோ, ‘‘இந்த போட்டோ ஞாபகம் இருக்கிறதா?’’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘அந்த போராட்டத்தை மறக்கமுடியுமா?’’ என்று விழிகள் விரித்துக் கேட்டுள்ளார்.
காஞ்சிப் பட்டு வேட்டி பரிசு
தொடர்ந்து அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடிய வைகோ, ‘’10 ஆண்டுகள் கடும் போராட்டம் நடத்தி இந்த சிலுவைப் போரில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்களது இடைவிடாத போராட்டத்தால்தான் மகத்தான வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. உங்களது இந்த வெற்றி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் வலு சேர்க்கும். எதிர் காலத்தில் நீங்கள் இன்னும் பல சாதனைகள் படைக்க மனமார வாழ்த்துகிறேன்’’ என்று வாழ்த்தியதுடன் காஞ்சிபுரம் பட்டு வேட்டி ஒன்றையும் அவருக்கு போர்த்தினார் வைகோ.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் வைகோ கூறியதாவது:
நான் விழாவில் கலந்துகொண்டதற்கு சந்திரபாபு நாயுடு எனது நண்பர் என்பது மட்டுமே காரணமல்ல. தெலுங்கு தேசமும் சிரோமணி அகாலி தளம் கட்சியும் மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் வலுவான கட்சிகள். அதனால்தான் அந்த கட்சிகளோடு நல்லுறவு வைத்திருக்கிறோம். இந்த கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது. அந்த அடிப்படையில் சீமாந்திரா விழாவில் கலந்துகொண்டது மனதுக்கு நிறைவாக உள்ளது.
இந்திய ஜனநாயகத்தில் கூட்டாட்சி தத்துவம் வலுப்பெற மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும். அதேசமயம், தமிழகத்தை ஆளும் அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாவிட்டாலும் அந்த கூட்டணியில் உள்ள அண்டை மாநில ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்துடன் நட்புறவில் இருப்பது தமிழகத்துக்கு பல வகைகளில் நன்மை பயக்கும். 2 மாநிலங்களுக்கும் இடையே நல்லுறவு இருந்ததால்தான் என்.டி.ஆர். காலத்தில் தெலுங்கு - கங்கை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்தது.
இவ்வாறு வைகோ கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago