ரூ.500 கோடியில் பைனான்ஸ் தொழில் செய்வதாகச் சமூக வலைதலத்தில் வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக நிர்வாகியும், மூத்த தலைவர்களில் ஒருவர், தனது கட்சிப் பிரமுகருடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த ஆடியோவில், “நிகழ்ச்சியில் என் பெயரைச் சொல்லும்போது கை தட்டவில்லை. ஆனால், அப்பா பாதுகாப்பில் உள்ள எ.வ.வேலு மகன் கம்பன் பெயரைச் சொன்னால் கை தட்டுகிறார்கள். இவ்வளவு காலம் நாங்கள் உழைத்த உழைப்பு எல்லாம் வீண்.
கம்பன் அப்பா(எ.வ.வேலு), 8 கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளார். தமிழகத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி உள்ளது. மெடிக்கல் காலேஜ் கட்டுகிறார். கரூரில் 500 கோடி ரூபாய் பைனான்ஸ் விட்டுள்ளார். சினிமா படத்துக்கு பைனான்ஸ் செய்கிறார். சினிமா பட விநியோகிஸ்தராக உள்ளார். டிவி தொடர் எடுக்கிறார். ஒரு முறை மந்திரியாக இருந்துள்ளார். 6-வது முறை எம்எல்ஏவாக உள்ளார். 20 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக உள்ளார். ரத்தம் சிந்திக் கட்சிக்காக உழைத்தவர்கள் செத்துப் போகிறார்கள். ஆனால் அப்பாவும், பிள்ளையும் வாழ்க்கையை அனுபவிக்கனும் என நினைக்கிறார்கள். இவ்வளவு பிழைப்பு இருக்கிறது, அதில் பிழைக்க வேண்டியதுதானே. மற்றவர்கள் பிழைப்பை ஏன் கெடுக்கிறார்கள்?
எழுதிக் கொடுத்த அடிமையா?
கஷ்டப்பட்டு உழைத்துத் தொண்டனாக இருப்பவன் மேலே வரலாம். இது கருணாநிதியா இருந்தாலும், அவர் பிள்ளையா இருந்தாலும் சேர்த்துத்தான் சொல்றேன். கம்பனுக்கு ஜால்ரா அடிக்கிற கூட்டம் இருக்கிறது. ப.உ.ச, தருமலிங்கம் எம்.பி. போன்றவர்கள், வாரிசுகளை அறிமுகம் செய்யவில்லை. மேடையில் உட்கார வைக்கவில்லை. ரத்தத்தை சிந்திக் கட்சியை வளர்த்தவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வரவில்லை. எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர், மந்திரியாக இருந்த எ.வ.வேலுக்கும், அவரது வாரிசுக்கும் பணிவிடை செய்ய வேண்டுமா?. திமுக கட்சியா அல்லது நாங்கள் எல்லாம் அடிமை என எழுதிக் கொடுத்துவிட்டோமா?” என்றார். அவரது கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்துத் திருவண்ணாமலையில் உள்ள மாவட்டத் திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் எ.வ.வேலு இன்று கூறும்போது, “அண்ணாதுரை கூறியதுபோல், எனக்கு எதையும் தாங்கும் இதயம் உள்ளது. பொது வாழ்வில் நான் செய்யும் தூய்மையான தொண்டைத் தொடர்ந்து செய்வேன். கருப்புப் பூனையை இருட்டில் தேடியது போல், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளத்தில் கடந்த 2 நாட்களாகச் செய்திகள் வெளியாகின. உண்மையில் அதுபோன்று எதுவும் இல்லை என எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.
என் குடும்பத்தாருக்கு ஒரு பள்ளிக்கூடம், ஒரு பாலிடெக்னிக், ஒரு மகளிர் கல்லூரி, ஒரு ஆடவர் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி உள்ளது. இவை அனைத்தும், நான் திரைப்படங்கள் மூலமாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, திமுகவில் இணைவதற்கு முன்பாகவே, சம்பாதித்த பணத்தால் அறக்கட்டளை மூலமாக என் குடும்பத்தினர் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள். மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்.
நான் நேர்மையானவன்
எனக்கு தமிழகத்தில் நூற்றாலை இல்லை, 6 ஆயிரம் ஏக்கர்கள் நிலம் இல்லை. ரூ.500 கோடியில் பைனான்ஸ் செய்வதாக சொல்லப்படுகிறது. 50 கோடி ரூபாயில் கூட பைனான்ஸ் இல்லை. வருமான வரித்துறையிடம், நான் கணக்கு காட்டியதில் இருந்து, ஒரு சென்ட் இடம் அல்லது பணமோ கூடுதலாக என்னிடமும், என் குடும்பத்திடமும் இல்லை. கருணாநிதியின் தயவால் உணவுத் துறை அமைச்சராக 5 ஆண்டு காலம் இருந்துள்ளேன். 2011-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.11 லட்சம் மதிப்பில் சென்னையில் குடியிருப்பு கட்டியுள்ளார் என ஜெயலலிதா மூலம் என் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டது. அந்த வழக்கை, அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்யான வழக்கு எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. நான் நேர்மையானவன் எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றமே விடுவித்துள்ளது.
மக்களுக்குத் தொண்டாற்றுகிறேன்
என்னைப் பற்றித் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும். என் மீது பொதுமேடையில் யாரும் குற்றச்சாட்டு கூறியது கிடையாது. எனது பொது வாழ்வில் நான் அப்பழுக்கற்ற, நேர்மையாக, மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பணியாற்றுகிறேன். கல்வித் தொண்டு மூலம் ஏழைகளுக்கு உதவி வருகிறேன். தமிழை வளர்க்க அருணை தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, சமுதாயத்துக்கு உதவுகிறேன்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்று, தூய்மை அருணை அமைப்பைத் திருவண்ணாமலையில் உருவாக்கி சக நண்பர்களுடன் இணைந்து செயல்படுகிறேன். இலவக்ச கணினி மையம் மற்றும் இலவசத் தையல் பயிற்சி அளித்து வருகிறேன். எம்எல்ஏ அலுவலகத்தில் நூலகம் நடத்தி வருகிறேன். மாணவர்களுக்காக இலவசமாக ஜெராக்ஸ் போட்டு தரப்படுகிறது. இந்த நிலையில் என் மீது தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நான் யார் மீதும் குற்றச்சாட்டைச் சொல்ல விரும்பவில்லை.
ரூ.130 கோடியில் மருத்துவமனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டுமே நாங்கள் அரசியல் பேசுகிறோம். மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கு நானும், சக நண்பர்களும் நேரடியாக உதவி செய்து வருகிறோம். சமூக வலைதளத்தில் வரும் தகவலை நான் மறுக்கிறேன். மக்களின் கோரிக்கையை ஏற்று, எனது சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி வருகிறேன். அதன்படி, உடற்பயிற்சி நிலையம், நகராட்சிப் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சிக்காக நடைபாதை அமைத்துக் கொடுத்துள்ளேன்.
கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினருக்கு, எங்களது அறக்கட்டளை மூலம் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. திருவண்ணாமலையில் எங்களது அறக்கட்டளை மூலமாக இந்தியன் வங்கியில் ரூ.130 கோடி கடன் பெற்று மருத்துவமனையைக் கட்டி வருகிறேன். சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை” என தெரிவித்தார்.
அதே நேரத்தில், கட்சியில் வாரிசுக்கு முக்கியத்துவம் என்ற விமர்சனத்துக்கு எ.வ.வேலு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago