அரை அதிமுக - அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான ஆட்சி: கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு முதல் ஏழு பேர் விடுதலை விவகாரம் வரை எல்லாவற்றையுமே அரைகுறையாகச் செய்யும் அரை அதிமுக - அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான இன்றைய ஆட்சி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 6) காலை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

"நீங்கள் உட்கார்ந்திருக்கும் இந்தக் காட்சியை நான் பார்க்கிறேன். இதுவரையில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு பார்க்கிறேன். மிகவும் அமைதியாக, கட்டுப்பாடாக, இந்த பழனிசாமி ஆட்சியை இன்னும் 3 மாதங்களில் தூக்கி எறிய வேண்டும் என்ற அந்த உறுதியோடு நீங்கள் எல்லாம் வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்.

நீங்கள் இந்த அரங்கத்தின் உள்ளே நுழைவதற்கு முன்பு வெளியில் நம்முடைய தொண்டர்கள், இளைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உங்கள் பெயர், முகவரி, நீங்கள் கொடுக்கின்ற கோரிக்கை மனுக்கள், அதே போல நீங்கள் சொல்கின்ற பிரச்சினைகளைப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள்.

நீங்கள் பதிவு செய்யும் போது உங்களிடம் ஒரு ரசீது - அடையாள அட்டை கொடுத்திருப்பார்கள். இந்த ரசீது தான் மிகவும் முக்கியம். இதை ஏன் இவ்வளவு வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் இதற்கு பல உரிமைகள் இருக்கின்றன.

என்ன உரிமை என்றால் தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் வந்து, திமுக ஆட்சி என்பது உறுதியாகி, நான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கோட்டையில் உட்கார்ந்த பிறகு, 100 நாட்களில் உங்கள் மனுக்கள் தொடர்பாக ஏதாவது நடக்கவில்லை என்றால் நீங்கள் உரிமையோடு கோட்டைக்குள் வரலாம். கோட்டைக்குள் மட்டுமன்று, முதல்வர் அறைக்குள்ளேயும் நீங்கள் வந்து கேட்கலாம்.

'பேச்சைக் குறைத்து செயலில் திறமையைக் காட்ட வேண்டும்'. இதுதான் என்னுடைய கொள்கை".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஸ்டாலின் பேசியதாவது:

"தமிழ்நாட்டிலேயே அதிகமான கல்வி அறிவு பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தான் என்று இன்றைக்கும் நாம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. அந்தச் சென்னையை மிஞ்சும் அளவுக்கு கல்வி அறிவில் சிறந்த மாவட்டம் இந்த கன்னியாகுமரி மாவட்டம்.

நில வரைபடத்தில் கீழ்ப்பகுதியில் இருந்தாலும், கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்த மாவட்டமாக இந்த மாவட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் வேலை இல்லாமல் படித்த இளைஞர்கள், பட்டதாரிகள் பல தொல்லைகளுக்கு, துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அறிவுபூர்வமான சில யோசனைகள் சொல்லி இருக்கிறார்கள். விரைவில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிச்சயமாக இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்விக்காக கருணாநிதியின் ஆட்சி இருந்தபோது பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சிப் பகுதிகளில் நூல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என்று சொல்லித் தமிழ்நாட்டில் இருக்கும் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நூல்நிலையங்கள் ஏற்படுத்திய ஆட்சிதான் திமுக ஆட்சி.

இன்றைக்கு அவையெல்லாம் கேட்பாரற்ற நிலையில் இருக்கின்றன. அதை எல்லாம் மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு சரி செய்யப்போகிறோம். பல்கலைக்கழகங்களில் நூலகங்கள் விரிவாக்கம், உயர் கல்வி, பள்ளிக் கல்விகளை எந்த அளவுக்கு மேம்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு மேம்படுத்துவோம் என்ற உறுதியை நான் அளிக்க விரும்புகிறேன்.

உடலின் சவாலை வென்று படிப்பில் சாதித்திருக்கும் நீங்கள், எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. அதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அதுமட்டுமின்றி நீங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு வரை முடிந்த நிலையில் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது எப்படிப்பட்ட ஏமாற்றமாக இருக்கும் என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். உங்கள் பணி நியமனம் ஏன் தாமதம் ஆகிறது என்பதற்கான காரணம் கண்டறியப்பட்டு நிச்சயம் உரிய தீர்வு காணப்படும். அத்துடன் இளைஞர்களுடைய அரசு பணிக்கான கனவை நிறைவேற்ற வேண்டியது டிஎன்பிஎஸ்சியின் பணி.

ஆனால், இன்று பிறமாநிலத்தவர்களை இங்கு இறக்குமதி செய்யும் ஒரு ஊழல் ஆணையமாக அது மாறிவிட்டது. டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளால் அதன் மானம் காற்றில் பறக்கிறது. சமீபத்தில் அதைக் கண்டித்து உதயநிதி தலைமையில் திமுக இளைஞரணி ஒரு போராட்டம் நடத்தியது. ஆனால், இன்றுவரை அந்த வழக்கு முடிவடையவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீன்வளத்துறையில் இருக்கும் ஒரு திமிங்கலம் அதில் தப்பித்துக் கொண்டிருக்கிறது. அவர் பெயரைச் சொல்லி நான் இந்த மேடைக்கு இருக்கும் நாகரிகத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், ஓட்டுநர்களும், அலுவலர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பாலைவன ரோஜாக்களில், 'ரயில் இன்ஜினை திருடியவனை விட்டுவிட்டு, அந்த இன்ஜினில் இருந்து விழுந்த கரித்துண்டை எடுத்தவனை கைது செய்தார்களாம்' என்று தலைவர் கருணாநிதியின் வசனம் ஒன்று வரும். அதே போலத்தான் இது.

மாற்றுத்திறனாளிகளை முன்பெல்லாம் 'உடல் ஊனமுற்றோர்' என்று சொல்வார்கள். அந்த சொல் அவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. நம்பிக்கையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது. அவர்கள் மனிதர்கள் என்ற சமநிலை பெற்று வாழ வேண்டுமென்று கருணாநிதி அதனை 'மாற்றுத்திறனாளிகள்' என்று அழைக்கச் செய்தார்.

அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் என்ற துறையை உருவாக்கி அந்தத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். எனவே, நிச்சயமாக நீங்கள் சொன்ன பிரச்சினைகள் எல்லாம் களையெடுக்கப்பபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நம்பிக்கையை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஆனால், இன்றைக்கு அந்த விவசாயிகள் டெல்லியில் கிட்டத்தட்ட 2 மாதத்திற்கு மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வெயிலில், கடுமையான குளிரில், பனியில், மழையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களிலிருந்து அங்கே வருகை தந்து டெல்லியை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் இதுவரை அவர்களை அழைத்துப் பேசவில்லை. ஆனால், 3 வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கூட நடத்தாமல், சர்வாதிகாரமாக அதை நிறைவேற்றி, விவசாயிகளுக்கு எதிரான கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள்.

இதனால்தான் நான் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பொங்கலுக்கு முதல் நாள் போகி அன்று, திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி தொகுதியில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தியபோது ஒரு அறிவிப்பை வெளியிட்டேன்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்று நான் அறிவித்தேன். இதை புதிதாக நாம் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது நான் சொன்னேன்.

2006-ல் கருணாநிதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அப்போது சொன்ன உறுதிமொழி தான். ஆட்சிக்கு வந்தவுடன் 7,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த முதல்வர் தான் தலைவர் கருணாநிதி.

ஆனால், இந்த ஆட்சி நேற்று திடீரென்று அறிவித்திருக்கிறது. அதாவது, கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி நான் அறிவித்தேன். இப்போது முதல்வர் பழனிசாமி நேற்றைக்கு திடீரென்று சட்டப்பேரவையில் இதை அறிவித்திருக்கிறார்.

அதாவது, சாகின்ற நேரத்தில் 'சங்கரா சங்கரா' என்று சொல்வதுபோல ஆட்சி முடிகின்ற கடைசி நேரத்தில், 'விளக்கு அணையும் போது பிரகாசமாக எரியும்'. அதுபோல, புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் 2 நாட்களில் மேலும் ஓர் அறிவிப்பை வெளியிடப் போகிறார்கள். ஏற்கெனவே கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்குக் குறைவாக அடகுவைத்து வாங்கியிருக்கும் நகைக்கடன்களையெல்லாம் தள்ளுபடி செய்வோம் என்று நான் ஒரு உறுதிமொழி கொடுத்திருக்கிறேன்.

அதையும் இன்னும் 2 நாட்களில் அவர்கள் அறிவிக்கப்போகிறார்கள். யார் ஆளுங்கட்சி? யார் எதிர்க்கட்சி? என்பது தெரியவில்லை. நாம் சொல்வததைத் தான் இன்றைக்கு ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற அறிவிப்புகளைத் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் நம்பப் போவதில்லை.

இதே பழனிசாமியிடம், 'இலவச மின்சாரத்தை கருணாநிதி கொடுத்தார். 7,000 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். இப்போது விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த கடனை எல்லாம் தள்ளுபடி செய்யுங்கள்' என்று நாங்கள் சட்டப்பேரவையில் கேட்கும்போது, 'அது முடியவே முடியாது, நிதி இல்லை' என்று சொன்னார்.

அது மட்டுமின்றி இதுகுறித்து விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். சென்னை உயர் நீதிமன்றம் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அதை ஏற்று அன்றைக்கு பழனிசாமி செயல்படுத்தவில்லை. அவர் உடனே உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கினார். அந்த வழக்கு இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

இவ்வாறு செய்துவிட்டு இப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் காரணத்தினால், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் அறிவித்த காரணத்தினால், இதை அறிவித்திருக்கிறார். இதைத் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை.

விவசாயிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு மரண அடி கொடுக்க போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஏற்கெனவே ஜிஎஸ்டி தொடர்பாக நம்முடைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். அதற்கு முன்னர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். அது நிச்சயம் வரப்போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதைப்போல மத்தியிலும் அந்த மாற்றம் வந்தால் இதற்கு முழு தீர்வு கிடைக்கும்.

இருந்தாலும் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு இதுகுறித்து மத்திய அரசிடம் உரிய அழுத்தத்தை, ஏற்கெனவே தந்து கொண்டிருந்தாலும், மேலும் தருவோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஊரில் மட்டுமல்ல, பகுதிநேர ஆசிரியர்கள் பல கூட்டங்களில் தங்களது குறைகளை, கோரிக்கைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது பெரிய பிரச்சினையாக இருக்கின்ற காரணத்தினால் இதற்கு சரியான முடிவை உங்களுடைய ஆதரவோடு பொறுப்பேற்கும் திமுக ஆட்சி நிச்சயமாக, உறுதியாக எடுக்கும். கவலைப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்.

புயலின் போது ஏற்பட்ட விபத்தினால் கையை இழந்திருக்கும் உங்களுக்காக நான் வருந்துகிறேன். உங்களுக்கு இன்னும் சரியான இழப்பீடு வழங்கவில்லை என்பது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக நிச்சயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நம்முடைய எம்எல்ஏ மூலமாக, மாவட்டச் செயலாளர் மூலமாக அதற்கு நிச்சயம் அழுத்தம் கொடுப்பேன்.

ஒருவேளை முடியவில்லை என்றால் பொறுத்தது பொறுத்தீர்கள். இன்னும் 3 மாதங்கள் பொறுத்திருங்கள். நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் முடிவு எடுப்பேன்.

இங்கு அமைச்சராக இல்லாமல், அமைச்சர் போல தளவாய் சுந்தரம் என்று ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவர் இன்றைக்கு டெல்லியில் சிறப்பு பிரதிநிதியாக, அமைச்சர் என்கிற அந்தஸ்தோடு இருக்கும் ஒருவர்.

அவரின் முக்கியமான வேலை கரெப்ஷன் – கமிஷன் - கலெக்ஷன் இதுதான். இந்த மாவட்டத்தில் அவர் ஏதாவது மக்களுக்கு பணியாற்றி இருக்கிறாரா? இல்லை. அவரை பற்றி நான் இன்னும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுகவினரை தனியாக அழைத்து பேசினால் அவர்களே சொல்லிவிடுவார்கள். சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஒரு பிரமுகர், அதிமுகவின் தோவாளை ஒன்றியச் செயலாளர், பெயர், கிருஷ்ணகுமார். அவர் ஒரு செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அது பத்திரிகைகளில் வந்தது.

'உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக நடத்தும் டெண்டர் முறைகேடுகள் அம்பலம்' என்று எல்லா சமூக வலைதளங்களில் வந்தது. தோவாளை யூனியனில் திட்டப்பணிகள் குறித்தும் அதில் எவ்வாறு பணம் கைமாறுகிறது என்பது குறித்தும் வெளிப்படையாக சொல்லப்பட்டு, அது நாளிதழில் வெளிவந்திருக்கிறது.

பொதுப் பணத்தை சூறையாடும் அதிமுக ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதற்கு கிருஷ்ணகுமார் ஒரு சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, இது தான் இன்றைக்கு இருக்கும் நிலை. இப்படிப்பட்ட நிலையை மாற்றுவதற்காக தான் ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கெல்லாம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைக்கப்போகிறது. அதை நீங்கள் எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வெளிநாடு சென்ற கணவர் காணாமல் போய் பல மாதங்கள் ஆகிறது என்கிறீர்கள். இது பெரிய பிரச்சினை. இந்தக் கூட்டம் முடிந்து நான் இங்கிருந்து நெல்லைக்கு செல்வதற்கு முன்பு நம்முடைய திமுக எம்.பி-க்கள் டெல்லியில் இருக்கிறார்கள். அவர்களிடம் உடனே பேசி, வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசச் சொல்கிறேன். அந்தத் தகவல்களை திமுக தொண்டர்களிடம் கொடுத்து விட்டு தைரியமாக இருங்கள். கவலைப்படாதீர்கள், நாங்கள் இருக்கிறோம்.

வனத்துறை தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, வனத்துறையில் என்னென்ன விதிமுறைகள் இருக்கிறதோ அவற்றை அறிந்து ஆராய்ந்து, அது குறித்து நடவடிக்கை எடுக்க நான் நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன். அதேபோல, பள்ளிக்கூடம் தொடர்பான உங்களது கோரிக்கை நியாயமான கோரிக்கை. அது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது உங்களுடைய கருத்துக்களை கேட்கும் பணி முடிந்துவிட்டது. அடுத்த பணியாக இப்போது இந்தப் பெட்டியை நான் மூடி, பூட்டு போட்டு, சீல் வைக்கப்போகிறேன். அதற்குப்பின்பு இது சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு சென்று வைக்கப்படும்.

தேர்தல் முடிந்து, நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள், இந்த சீல் உடைக்கப்பட்டு, இந்த பெட்டியைத் திறந்து, மனுக்களை ஆராய்ந்து, இதற்கென்று தனித்துறை உருவாக்கப்பட்டு, தனி அதிகாரிகளை நியமித்து, 100 நாட்களில் இந்தப் பணிகளை முடிக்கிற வரையில் அந்த அதிகாரிகள் வேறு எந்தப்பணியும் செய்யக்கூடாது என உத்தரவிடப்படும்.

அவர்கள் செய்யும் பணியை கண்காணிக்கும் பொறுப்பைத்தான் இந்த ஸ்டாலின் செய்யப்போகிறான். கவலைப்படாதீர்கள்.

இவ்வாறு பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து ஸ்டாலின் பேசினார்.

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியை நிறைவு செய்து ஸ்டாலின் பேசியதாவது:

"இந்தியாவின் மகத்தான அடையாளமாக சொல்லப்படுவது வடக்கே இமயமும், தெற்கே குமரியும். அத்தகைய அடையாளம் கொண்ட கடலில் வள்ளுவருக்கு 133 அடியில் சிலை வைத்து, அதனை தமிழ்க் கடலாக மாற்றிய அரசுதான் திமுக அரசு!

இந்தியாவில் ஒரு சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டு இருந்தது என்றால், இந்த தென்குமரியில் இரண்டு சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டு இருந்தன. கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம் என, தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று ஏராளமான தியாகிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடியது இந்தக் குமரி மண்.

அந்த எல்லைப் போராட்ட தியாகிகளுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் சலுகைகளை வழங்கிய அரசு தான் திமுக அரசு. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளாக இருந்தாலும், மொழிப்போர் தியாகிகளாக இருந்தாலும், எல்லைப் போர் தியாகிகளாக இருந்தாலும் அனைவரையும் போற்றிய அரசு தான் திமுக அரசு.

அண்ணாவாக இருந்தாலும் கருணாநிதியாக இருந்தாலும், அவர்கள் தனக்காக அல்ல, தமிழகத்துக்காக, தமிழினத்துக்காக, தமிழ்நாட்டுக்காக ஆட்சி நடத்தினார்கள். அத்தகைய அரசாகத்தான் அமையப் போகும் திமுக அரசும் அமையும்.

சிலர் அமைச்சர்கள் ஆவதற்காக ஆட்சிக்கு வருவதற்கு நினைப்பது அல்ல திமுக. நானோ மற்றவர்களோ பதவிக்காக அலையவில்லை என்பது திமுகவின் லட்சோப லட்சம் தொண்டர்கள் அறிவார்கள். தமிழக மக்களும் அறிவார்கள்.

1966-ம் ஆண்டு முதல் கட்சிப் பணி, பொதுப்பணிகளை நான் ஆற்றி வந்தாலும், 1989-ம் ஆண்டு தான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அரசியலில் நுழைந்ததும் நான் சட்டப்பேரவைக்குள் நுழைந்துவிடவில்லை.

சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகுதான் சட்டப்பேரவைக்குள் நுழைந்தேன். அப்போதே நீங்கள் அமைச்சர் ஆகப் போகிறீர்களா என்று நிருபர்கள் என்னைக் கேட்டார்கள். 'எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று தலைவர் கருணாநிதியிடம் கூறிவிட்டேன்' என்று சொன்னேன்.

'திமுகவுக்கு என்னை விட உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அமைச்சர்களாக ஆக்க முடியாது. அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தான் அமைச்சர்கள் ஆக வேண்டும்' என்று அப்போதே பேட்டி அளித்தவன் நான்.

'இளைஞரணிச் செயலாளர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி உண்டா?' என்று தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டார்கள். 'அமைச்சர் ஆகக்கூடிய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. ஆனால், அவர் என் மகன் என்பதால் அந்தத் தகுதியை இழந்துவிட்டார்' என்று தலைவர் கருணாநிதி சொன்னார்கள்.

இதை இன்று நான் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம், மகன் என்பதற்காக என்னை வளர்த்தவரல்ல தலைவர் கருணாநிதி. நானும் அவர் மகன் என்பதற்காக உழைக்காமல் இருந்துவிடவில்லை. இன்று உங்களில் ஒருவனாக, லட்சக்கணக்கான தொண்டர்களால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், திராவிட இயக்கத்தின் மீது நான் கொண்ட மாறாத பற்றும், அந்தக் கொள்கைக்காக நாளும் நான் உழைத்த உழைப்பும் தான்!

ஒரு தனிமனிதருக்காக ஒரு சட்டம் இந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டது என்றால் எனக்காகத் தான். நான் அப்போது சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தேன். சென்னை மாநகராட்சி மேயராகவும் இருந்தேன். ஒருவர் இரண்டு பதவிகள் வகிப்பதை தடை செய்யும் சட்டத்தை 2002-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். தனிமனித வன்மத்தோடு அறிமுகம் செய்யப்பட்ட அந்தச் சட்டத்தை நான் எதிர்க்க விரும்பவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

உடனடியாக மேயர் பதவியில் இருந்து நானே விலகினேன். இதைச் சொல்வதற்குக் காரணம், மக்களுக்கு சேவை ஆற்றுவதற்குத் தான் பதவியே தவிர, எங்களுக்கான தனிப்பட்ட பெருமைக்காக அல்ல.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி திமுக ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். அதிமுகவில் இருந்தே பலரும் எங்களுக்குத் தூது விட்டார்கள்.

அப்படி யார் யாரெல்லாம் தூதுவிட்டார்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அவர்களது மனசாட்சிக்கு இது தெரியும். அப்படி ஆட்சி அமைத்திருந்தால் அது திமுக அரசாக அமைந்திருக்காது. கருணாநிதி அரசாக அமைந்திருக்காது. அப்படி முதல்வராக விரும்பாதவன் நான்.

கோடிக்கணக்கான மக்களால் வாக்களிக்கப்பட்டு திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அத்தகைய ஆட்சி தான் விரைவில் அமைய இருக்கிறது.

234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றியை திமுக பெற இருக்கும் தேர்தல் தான் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல். அப்படி அமையும் ஆட்சி தான் முழுமையான மக்கள் ஆட்சியாக அமையும். இன்று நீங்கள் பார்ப்பது முழுமையான ஆட்சி அல்ல. அரை அதிமுக - அரை பாஜக ஆட்சி!

அதனால் தான் எல்லா விஷயங்களிலும் அரைகுறையாகவே செய்து கொண்டு இருக்கிறார்கள். நீட் தேர்வு ரத்தா? தீர்மானம் போடுவார்கள். ஆனால், நீட் தேர்வு இருக்கும்! ஏழு பேர் விடுதலையா? தீர்மானம் போடுவார்கள். ஆனால், ஏழு பேர் விடுதலை ஆக மாட்டார்கள்!

இருமொழிக் கொள்கையா? தீர்மானம் போடுவார்கள். ஆனால், இந்தி திணிப்பு இருக்கும். மாநில உரிமை கேட்பதாக நடிப்பார்கள். ஆனால், உரிமை கிடைக்காது. மாநிலத்துக்கு நிதி கேட்டு மனு கொடுப்பார்கள். ஆனால், நிதி கிடைக்காது.

ஏராளமான கோரிக்கையோடு பிரதமரை பார்ப்பார்கள். ஆனால், பிரதமர் எதையும் நிறைவேற்ற மாட்டார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார்கள். அதன்பிறகு ஒரு செங்கல் கூட வைக்கப்படாது.

பழனிசாமி தன்னை முதல்வர் என்று சொல்லிக் கொள்வார். அவரை அவரது அமைச்சரவையில் இருப்பவர்கள் கூட மதிக்க மாட்டார்கள். பழனிசாமி தனது கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதாக காட்டிக் கொள்வார். ஆனால், அவரை பன்னீர்செல்வம் கூட வழிமொழிய மாட்டார். இப்படி ஆட்சி முதல் கட்சி வரை எல்லாவற்றிலும் அரைகுறைத்தனமான செயல்பாடுகளை தான் அதிமுக அரசு கொடுத்து வருகிறது.

இந்த அரைகுறை ஆட்சிக்கு முடிவுகட்ட, திமுகவுக்கு முழு வெற்றியைத் தாருங்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த தேர்தலிலேயே முழுமையான வெற்றியை திமுகவுக்கு கொடுத்தீர்கள். அதனை நான் மறக்கவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்ற முழுமையான வெற்றியை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி சென்னைக்கு எட்ட வேண்டும்.

இன்று உங்களது எழுச்சியை, உணர்ச்சியை பார்க்கும் போது அத்தகைய முழுமையான வெற்றியை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. அத்தகைய ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இன்று முதல் இவை உங்களது கோரிக்கைகள் அல்ல. எனது கோரிக்கைகள்.

இந்தப் பெட்டியை நான் சென்னைக்கு எடுத்துச் செல்கிறேன் என்றால் உங்கள் இதயங்களை நான் கொண்டு செல்கிறேன் என்று அர்த்தம். உங்கள் இதயங்களைக் குளிர்விக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி அமையும் என்பதை இந்த கடல் நகரில் இருந்து நான் உறுதி ஏற்கிறேன்.

தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு, அண்ணா அருகே ஓய்வெடுப்பதற்கு இடம் கொடுக்காத நயவஞ்சகர்களின் ஆட்சிதான் இன்றைய ஆட்சி. கருணாநிதிக்கு இடம் கொடுக்காத நயவஞ்சகர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதைத் தேர்தல் மூலமாக நாம் நிரூபித்துக் காட்டுவோம்"

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்