கொடுங்கையூர் மக்களை நோயாளிகளாக்கும் குப்பை கிடங்கு; உடனடியாக அகற்றவேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கொடுங்கையூர் மக்களைக் காப்பாற்றக் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் இல்லை, குப்பைக் கிடங்கால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினையைத் தீர்க்க சென்னை மாநகராட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கொடுங்கையூர் மக்களை நிரந்தரமாகக் காப்பாற்ற குப்பை கிடங்கை அகற்றக்கோரி போராட்டம் நடத்த உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், 9 இல் இருந்து கொடுங்கையூரில் உள்ள 345 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் தான் குப்பை கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை 300 அடி உயரத்துக்கு மலைபோல் குவிந்துள்ளது. தினமும் 252 லாரிகள் மூலம் இங்கு கொட்டப்படும் 2,500 டன் குப்பையில், 200 டன் குப்பை மட்டுமே மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டவை. மீதமுள்ள 2,300 டன் குப்பை தரம் பிரிக்கப்படாதவை.

கடந்த 2016-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி, திடப்பொருட்களை மட்டுமே குப்பைக்கிடங்கில் கொட்ட வேண்டும் . ஆனால், மருத்துவக் கழிவுகளும் மின்சாதனக் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. இவ்வாறு தரம் பிரிக்கப்படாத குப்பையைக் கொளுத்தி விடுவதால், சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டு கொடுங்கையூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

31.7 சதவிகித மக்களுக்கு எலும்பு மற்றும் தசை மண்டல பாதிப்பு, கடுமையான மூட்டு மற்றும் முதுகு வலி இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. 32.8 சதவிகிதம் பேருக்கு சளி, இருமல், தும்மல், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளன. 8.5 சதவிகிதம் பேர் தலைவலி மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். 7.48 சதவிகிதம் பேருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7.2 சதவிகிதம் பேருக்கு தோல் நோய் தொற்றுகள், நமைச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

கொடுங்கையூரில் பல பகுதிகளில் காற்று, நீர் ஆகியவற்றைப் பரிசோதித்தபோது கடுமையாக மாசு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், காற்றில் 9 ரசாயனப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டு இந்த ரசாயனப் பொருட்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இன்றைக்குப் பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி பெரும் இன்னல்களைச் சந்தித்து வரும் கொடுங்கையூர் மக்களைக் காப்பாற்றக் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குப்பைக் கிடங்கால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எவ்வித முயற்சியையும் இந்த அரசும், சென்னை மாநகராட்சியும் செய்யவில்லை. குப்பைமேட்டால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து கொடுங்கையூர் மக்களை நிரந்தரமாகக் காப்பாற்றப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை, கூடுதலாகத் தொழிலாளர்களை நியமித்து வார்டு வாரியாக தரம் பிரிக்க வேண்டும். மக்காத பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து நாற்காலி, மேஜை போன்ற பொருட்களையும், வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் செய்யலாம். இந்தியாவிலேயே பல இடங்களில் இது சாத்தியமாகியிருக்கிறது. அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம்.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி 200 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு, திடக்கழிவு மேலாண்மை நிலையங்கள் செயல்படவில்லை. அதோடு, தரம் பிரிக்காமல் குப்பையும் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

எனவே, மக்களின் உயிரோடு விளையாடாமல், குப்பைக் கிடங்கால் கொடுங்கையூர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக உள்ளாட்சித் துறையையும் சென்னை மாநகராட்சியையும் கேட்டுக் கொள்கிறேன்.

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமையில் நாளை 7.2.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை திரட்டுகிற வகையில் குப்பைக் கிடங்கின் பிரதான நுழைவாயிலில் நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கவுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்