கடலூர் மாவட்டத்தை கலங்கடித்த கனமழை: ஏழைகள் எதிர்பார்ப்பை மத்திய குழு நிறைவேற்றுமா?

By என்.முருகவேல், க.ரமேஷ்

புனரமைப்புக்கும், மறுகட்டுமானத்துக்கும் போதுமான நிதி ஒதுக்க மக்கள் கோரிக்கை

*

அக்டோபர் 28-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் வடகடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. அதிலும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை கடலூர் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. 45 உயிரிழப்புகள், 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம் என அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். அக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை பொருத்தே மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அமையும் என்பதால், அனைவரது பார்வையும் அக்குழுவின் பக்கம் திரும்பியுள்ளது.

கடலூர் மாவட்ட சேத விவரம்

கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, பண்ருட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. சிதம்பரம்- கடலூர் சாலையில் 2 அடிக்கு தண்ணீர் சென்றது. சேத்தியாத்தோப்பு- அணைக்கரை சாலை துண்டிக்கப்பட்டு பேருந்துகள் வீராணம் ஏரிக்கரை சாலை, சேத்தியாத்தோப்பு வழியாக சென்னைக்கு சென்றன.

குறிஞ்சிப்பாடி- வடலூர் சாலை துண்டிக் கப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக விருத்தாச்சலத்துக்கு பேருந்துகள் செல்லவில்லை. பரவனாற்றில் ஏற்பட்ட உடைப்பால் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர் பகுதியில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மிதந்தன.

பல வீடுகள் இடிந்ததோடு, விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கின. கொள்ளிடத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடலூர் காரைக்காட்டில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. வீராணம் ஏரியிலும் அதிகளவு மழை தண்ணீரால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

இதையடுத்து ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை மதகு மற்றும் விஎன்எஸ்எஸ் மதகும் திறக்கப்பட்டன. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திருநாரையூர், சர்வராஜன்பேட்டை, எள்ளேரி கிழக்கு, குமராட்சி, நந்திமங்கலம் உள்ளிட்ட 15 மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.

முகாம்களில் சுமார் 50 ஆயிரம் பேர்

கடலூரில் பீமாராவ் நகர், சேடப்பாளையம், பச்சாம்குப்பம், தொண்டமாநத்தம் உள்ளிட்ட 50 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. கனமழை யினால் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கின. வாழை, கரும்பு, பருத்தி, தேக்கு, சவுக்கு ஆகியவை பயிரிட் டிருந்த 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக் கப்பட்டன.

ஊரக பகுதியில் 42 ஆயிரம் பேரும், நகரப் பகுதியில் 4 ஆயிரம் பேரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் 585 ஊராட்சியில் மின் கம்பங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மாவட்டத்தில் 33 இடத்தில் 400 கி.மீ அளவுக்கு சாலை பாதிப்புக்குள்ளானது. செங்கால் ஓடையில் 3 இடங்களிலும், பரவனாற்றுப் பகுதி யில் ஒரு இடத்திலும் உடைப்பு ஏற்பட்டது. சிறு வாய்க்கால்களிலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் குடிசை வீடுகள் இடிந்து வீழ்ந்தன. குறிஞ்சிப்பாடி அருகே 50 ஏக்கரில் விளைநிலத்தில் மண் மேடிட்டது. இந்த மழையால் பலர் வீடுகளை இழந்தனர். மொத்தத்தில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், 400 கி.மீ. தூரம் சாலைகளும் சேதமடைந்தன. 1520 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

காட்டுமன்னார்கோவில் அருகே அகரபுத்தூர் கிராமத்தில் மழைநீரில் மூழ்கிய விளைநிலங்கள்.

குறிஞ்சிப்பாடி அருகே அயன்குறிஞ்சிபாடி பகுதியில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு விளைநிலத்தில் படிந்துள்ள மணல்.

மீட்புப் பணி, நிவாரண உதவி

கனமழை பெய்யத் தொடங்கிய உடனேயே மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமானது. முதல்கட்டமாக உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வந்த மாவட்ட நிர்வாகம், கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டிருந்தது. முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியது.

அப்போதே, முகாம்களில் தங்க வைக்கப் பட்டவர்கள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு சிறிதளவு நிவாரணமும் வழங்கப்பட்டது. உடமை களை முற்றிலும் இழந்தவர்களுக்கு சான்றிதழ்கள், குடும்ப அட்டை நகல்கள் என அடிப்படை தேவைகளை வழங்கும் பணியும் நடைபெறுகிறது. நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை என்ற குரல் எழுந்தன. எனினும், சேதம் குறித்த முழுமையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே, நிவாரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது, கனமழை ஓய்ந்து வெள்ளம் மெல்ல வடிந்து வரும் நிலையில், மத்திய குழு ஆய்வு செய்ய வந்துள்ளது. நிவாரணம் வழங்குவதோடு நின்றுவிடாமல், விளைநில மேம்பாடு, நீண்டகால பேரிடர் தடுப்பு முறைமை என தொலைநோக்குப் பார்வையுடன் முழுமை தழுவிய மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

5 ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை சீற்றம்

இந்த கோரிக்கைக்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த காலத்தை ஆய்வு செய்யும்போது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றத்தின் பாதிப்புக்கு ஆளாகிவருவதாக கூறப்படுகிறது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, 2011-ம் ஆண்டு தாக்கிய

‘தானே’ புயல் தொடர்ந்து கடந்த வாரம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை என கடலூர் மாவட்டம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

‘தானே’ புயலுக்கு பிறகு ஆய்வு மேற்கொண்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், கடலூருக்கு தெற்கே திருச்சோபுரம், கம்பளிமேடு கிராமங்கள் வழியாக சுமார் 140 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடந்ததாக தெரிவித்திருந்தார். இதே பகுதியில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடும் புயல் வீசி, இயற்கை சீற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், பல்வேறு ஆறுகளின் வடிகால் பகுதியாகவும் கடலூர் மாவட்டம் விளங்குகிறது. எனவே, நீண்டகால நோக்கில், தொலைநோக்குப் பார்வையுடன், இம்மாவட்டத்தில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.

புனரமைப்பும் மறுகட்டுமானமும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக நிவாரண உதவிகள் வழங்குவதோடு, மின்சார கம்பங்கள் அமைப்பு, சாலைகள் மேம்பாடு என புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிதம்பரம் புறநகர் மீதிகுடி சாலையில் நீரில் மூழ்கிய குடியிருப்புகள்.

இம்முறை, கடலூர் மாவட்ட மறுகட்டுமானத்தை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். கடலூரை பேரிடர் மாவட்டமாக கருதி, நீண்டகால நோக்குடன் நீர் மேலாண்மை, நில நிர்வாகம், பேரிடர் கால தயார் நிலை, அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் என திட்டமிட்டு மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கூடவே, கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கசடுகளும், கழிவுகளும் விளைநிலங்களில் படிந்தன. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீரமைத்து மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே மீண்டும் மகசூலை காணமுடியும் என்பதால், அதுகுறித்தும் தனியாக கணக்கீடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடலூருக்கு முக்கியத்துவம்

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி தேவைப்படும் என கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டுமென மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்