தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் ஏழு பேர் விடுதலைக்கு, வஞ்சக எண்ணம் இல்லாமல், இதயசுத்தியுடன் முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 05) வெளியிட்ட அறிக்கை:
"பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் திமுக அரசியல் நாடகம் நடத்துகிறது என்று தமிழகச் சட்டப்பேரவையில் கூறி, 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருப்பதுடன், மெகா பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஏழு பேரின் வழக்கில், முதன் முதலில் நளினியின் தூக்கு தண்டனையை ரத்து செய்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி. அதுவும் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே செய்தார். குறிப்பாகச் சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டுக்குள், இந்த தண்டனைக் குறைப்பைப் பெற்றுக் கொடுத்தது திமுக ஆட்சி என்பது கூடத் தெரியாமல், தனது அறிவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி, சட்டப்பேரவைக்கே தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
» கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன், 'இவர்களின் தண்டனையைக் குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று இதே சட்டப்பேரவையில் பேசியவர்தான் மறைந்த ஜெயலலிதா. இந்த ஏழு பேரின் விடுதலையில் எவ்வித அக்கறையும் இல்லாமல், அரசியல் நோக்கில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, மொத்த விவகாரத்தையும் குழப்பி, தமிழகச் சட்டப்பேரவையில் இவர்களை எல்லாம் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றியும், இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்று வரை விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் திராணியோ திறமையோ இல்லாமல், 10 ஆண்டு காலமாக 'தொடர் நாடகம்' போட்டு வரும் ஆட்சி அதிமுக ஆட்சிதான்!
முதலில் அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதா பிறகு, 2014 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வரும் சில வாரங்களுக்கு முன்பு, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது, 'மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்க வேண்டும்' என்று வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தோடு கெடு விதித்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போவதற்கே வித்திட்டது அதிமுக ஆட்சிதான். நாடாளுமன்றத் தேர்தலின்போது அரங்கேற்றம் செய்த இந்த அரசியல் நாடகத்திற்கு, இரு ஆண்டுகள் ஜெயலலிதா இடைவேளை கொடுத்தார்.
பிறகு திடீரென்று 2016 சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில், மார்ச் மாதத்தில், மீண்டும் இந்த விடுதலை பற்றிய பழைய நாடகத்தையே தொடங்கினார். மத்திய அரசுக்கு அன்றைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வைத்து, கடிதம் ஒன்றை எழுதினார். அவரது மறைவுக்குப் பிறகு, இந்த விடுதலை விவகாரம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பிரச்சினையைக் கையிலெடுத்த முதல்வர் பழனிசாமி, செப்டம்பர் 2018-ல் 'பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று அமைச்சரவைத் தீர்மானம் போட்டு அனுப்பினார். அது கூட உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான்!
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், வழக்கம் போல அதை அப்படியே மறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் அது பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை.
2014-ல் இருந்து இன்றுவரை இவர்களது கூட்டணிக் கட்சியான பாஜகதான் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அமைச்சர்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கைகளையும், ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், கிரிமினல் நடவடிக்கையும் எடுத்துவிடாமல் முதல்வராலும், அமைச்சர்களாலும் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
ஆனால், ஆளுநரிடம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த தமிழக அமைச்சரவைத் தீர்மானத்திற்கு மட்டும் மத்திய அரசின் மூலம் அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெறும் தெம்பு இல்லை!
மாறாக, திமுகதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. நானே நேரில் ஆளுநரைச் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோரிக்கை விடுத்தேன்.
இப்போது 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற நேரத்தில்தான், மீண்டும் இந்த ஏழு பேரின் விடுதலை முதல்வர் பழனிசாமியின் நினைவுக்கு வந்திருக்கிறது. ஜனவரி 25-ம் தேதியே தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து, 'எனக்கு அதிகாரம் இல்லை' என்று கூறிய பிறகு, ஜனவரி 29-ம் தேதி அவரைச் சந்தித்து 'ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளியுங்கள்' எனக் கடிதம் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
இதைவிட நாகரிகமே இல்லாத ஓர் அரசியல் நாடகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆளுநரிடம் விடுதலை தொடர்பான கோப்பே இல்லாத நிலையில், ஏன் அவரை முதல்வர் அவரைச் சந்தித்தார்? எதற்காகக் கடிதம் கொடுத்தார்?
ஏழு பேர் விடுதலை குறித்த தீர்மானத்தையே ஆளுநர், மத்திய அரசுக்கு அனுப்பி விட்ட பிறகு, 'ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்' என்று ஏன் நேற்றைய தினம் (பிப். 4) தமிழகச் சட்டப்பேரவையிலேயே, வடிகட்டிய பொய்யை, தவறான தகவலை அளித்தார்?
நான் இந்த ஆளுநர் உரையின் கூட்டத் தொடரைப் புறக்கணித்தபோது, 'சட்டப்பேரவையில் உண்மைத் தகவலை இந்த அரசு எந்தப் பிரச்சினையிலும் தெரிவிப்பதில்லை' என்று எடுத்துச் சொன்னேன். அந்த என்னுடைய கூற்று, முதலில் நீட் தேர்வு மசோதா தொடர்பாகச் சட்டப்பேரவைக்கே உண்மை நிலையை மறைத்து, பொய் சொன்னதிலும், இப்போது ஏழு பேர் விடுதலையில் பச்சைப் பொய் சொல்லியிருப்பதிலும், முழுமையாக நிரூபணம் ஆகி விட்டது. 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் டெல்லி போன பிறகு, ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தி நாடகம் போடும் இப்படியொரு முதல்வர் எந்த மாநிலத்திலாவது இருக்கிறாரா?
உண்மை தெரிந்தும், சட்டப்பேரவைக்குத் திட்டமிட்டு தவறான தகவல் சொல்லும் ஒரு முதல்வர் வேறு மாநிலத்தில் உண்டா? இதுதான் முதல்வர் பழனிசாமி இந்த ஏழு பேர் விடுதலையில் தொடர்ச்சியாக நடத்தும் நாடகம்.
தன் நாடகத்தை மறைக்க, 10 ஆண்டுகாலமாக இந்த விடுதலையில் பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியின் தவறை மூடி மறைக்க, சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டுகாலத்திற்குள் தூக்கு தண்டனையை ரத்து செய்த திமுகவைப் பார்த்து நாடகம் போடுகிறது என்று கூற பழனிசாமிக்கு நா கூச வேண்டாமா? நெஞ்சில் நெருடல் ஏற்பட வேண்டாமா?
ஏழு பேர் விடுதலையிலும் தேர்தலுக்குத் தேர்தல் நாடகம் போடுவதை, வேடம் கட்டுவதை முதலில் கைவிடுங்கள்! இப்போது ஆளுநர் 'எனக்கு அதிகாரம் இல்லை' எனக் கூறி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார்.
அதிமுகவும் பாஜகவும் நகமும் சதையும் போல் கூட்டணியாக இருக்கின்றன. 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுகிறார்கள். ஆகவே, பாஜகவும் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து, தொகுதிப் பங்கீட்டை முதல்வர் பழனிசாமி அறிவிக்கும் முன்பு, ஒரு நிபந்தனையாக, 'பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்' என மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
கடந்த மூன்று தேர்தல்களில் நடத்திய அந்தப் பழைய நாடகத்தையே, இந்தத் தேர்தலிலும் நடத்தாமல், ஏழு பேர் விடுதலைக்கு, வஞ்சக எண்ணம் இல்லாமல், இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களின் உதவி தேவை என்றால் சொல்லுங்கள். நாளைக்கே குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வர் சென்றாலும் உடன் வரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். 'மிஸ்டர்' பழனிசாமி, எழுவர் விடுதலையில், உங்கள் முகமூடி கழன்று கீழே விழுந்துவிட்டது; வேடம் கலைந்து உண்மைச் சொரூபம் வெளியே தெரிந்துவிட்டது; நாடகம் முடிந்துவிட்டது!".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago