எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக தொடர்ந்து தவறான தகவல்களைக் கூறி ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (பிப். 04) சட்டப்பேரவையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஏழு பேரை முன்விடுதலை செய்வது தொடர்பான விவகாரம் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு நபர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இவர்களின் முன் விடுதலை பற்றி, ஏற்கெனவே 9.7.2019 அன்று இந்த அவையில் ஒரு தெளிவான விளக்கத்தை நான் அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் திமுக தொடர்ந்து தவறான தகவல்களை வழங்கி வருவதாலும், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்து வருவதாலும், ஒரு தெளிவான விளக்கத்தினை இந்த அவை முன் வைக்க விரும்புகிறேன்.
» கரோனாவிலிருந்து மீண்ட அமைச்சர் காமராஜ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
» தமிழரின் வாழ்வுரிமை, தமிழகத்தின் எதிர்காலத்தை மீட்டெடுப்போம்: பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களில் 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 28.1.1998 அன்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பினை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளில், 11.5.1999 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 1987ஆம் ஆண்டு 'தடா' சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட, 26 நபர்கள் மீதான தண்டனையை ரத்து செய்து, இதர சட்டங்களின் கீழ், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு நபர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
மேலும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 நபர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்தது. மேலும், இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற இதர 19 நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்கள் 8.10.1999 அன்று தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, இந்த நான்கு நபர்கள், தமிழ்நாடு ஆளுநருக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களைச் சமர்ப்பித்தனர். இம்மனுக்கள், ஆளுநரால் 27.10.1999-ல் நிராகரிக்கப்பட்டன. இதனை எதிர்த்து, இவர்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் தனது 25.11.1999 நாளிட்ட தீர்ப்பில், இந்த மனுக்கள், சட்டப்படியான மாநில அமைச்சரவையின் ஆலோசனையில்லாமல் ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் இவர்களின் கருணை மனுக்களின் மீது அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதியதாக முடிவு எடுக்கும்படி நெறியாணைகள் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் இவர்களின் கருணை மனுக்கள் குறித்த பொருள் 19.4.2000 அன்று மாலை 4.30 மணிக்கு நடந்த திமுக அரசின், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அன்றைய கூட்டத்தில் கீழ்க்கண்ட 24 திமுக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை முதலில் நிராகரித்ததை, பின்வருமாறு திமுக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முடிவு எடுத்தது.
'தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை ஆதரவற்றதாகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது'.
அதன்படி, நளினியின் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் அமைச்சரவை அன்று முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இக்கருணை மனுக்களை நிராகரித்து 24.4.2000 அன்று அரசாணைகள் திமுக அரசால் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 26.4.2000 அன்று குடியரசுத் தலைவருக்குத் தங்களின் கருணை மனுக்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 72-ன் கீழ் அளித்திருந்தனர். இம்மனுக்கள், 12.8.2011 அன்று, திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆலோசனையின் பேரில், அப்போதைய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன.
ஆனால், தாயுள்ளம் கொண்ட ஜெயலலிதா 2011-ம் ஆண்டு, மேற்சொன்ன ஏழு பேர் விடுதலை தொடர்பான கோரிக்கைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கிலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்கு வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்ததின் அடிப்படையில், 'தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என குடியரசுத் தலைவரை இந்தச் சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது' என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் 29.8.2011 அன்று ஜெயலலிதா முன்மொழிந்து, அத்தீர்மானம் ஒருமனதாக, நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு இதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பொழுது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவும், இத்தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
குடியரசுத் தலைவரின் நிராகரிப்பு ஆணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், பின்பு உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, இவ்வழக்கின் மனுதாரர்களான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், இத்தண்டனையைத் தங்களது இறுதி மூச்சு வரை அனுபவிக்க வேண்டும் எனவும், எனினும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432-ன் கீழான Remission-க்கு, இப்பிரிவின், இதர நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு உட்பட்டு இவர்கள் தகுதி பெறுகின்றனர் என்றும் குறிப்பிட்டு 18.2.2014 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பின்னர், பேரறிவாளவனின் தாயார் அற்புதம் அம்மாள், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன் மகன் பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அந்தத் தாயின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை முன்விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் 19.2.2014 அன்று ஜெயலலிதா அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 19.2.2014 அன்று ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற இந்த ஏழு பேரும், சுமார் 23 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால், அவர்களைக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432-ன் கீழ் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்விடுதலை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்நிகழ்வில், இவர்கள் மீதான குற்ற வழக்குகளை மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ விசாரணை செய்த காரணத்தால், மேற்காண் சட்டத்தின் பிரிவு 435-ன் கீழ் 19.2.2014 நாளிட்ட மாநில அரசின் கடிதம் மூலம் மத்திய அரசின் கருத்தினை மூன்று நாட்களுக்குள் வழங்கக் கோரப்பட்டது.
ஆனால், மாநில அரசின் மேற்காண் முடிவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் WP(Criminal) 48/2014 என்கிற ஒரு வழக்கைத் தொடுத்தது. அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், அந்த அரசுக்குப் பிரச்சினைகளின் அடிப்படையில் வெளியிலிருந்து ஆதரவளித்த திமுகவும் நினைத்திருந்தால், மாநில அரசின் முடிவுக்கு எதிராக வழக்குத் தொடுக்காமல், இவர்களின் முன்விடுதலைக்கு அச்சமயத்திலாவது உதவியிருக்கலாம்.
இவ்வழக்கில், உச்ச நீதிமன்ற அமர்வு 2.12.2015 அன்று வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், இவ்வழக்கின் பொருள் தொடர்பாக தொடுக்கப்பட்ட 7 கேள்விகளின் மீது பல தெளிவுரைகளை வழங்கி, அதில் ஒரு கேள்வியான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 435(1)-ல் குறிப்பிட்டுள்ள Consultation என்கிற பதம் Concurrence என்றுதான் பொருள்கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியது. உச்ச நீதிமன்றம் அளித்த தெளிவுரைகளின் அடிப்படையில், பேரறிவாளன் உட்பட்ட ஏழு நபர்களும் தங்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு பல்வேறு நாட்களில் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், அவர்களின் முன்விடுதலை குறித்து மேற்காண் சட்டத்தின் பிரிவு 435-ன் கீழ் மத்திய அரசின் கருத்தினை கோரி, தமிழக அரசால் 2.3.2016 அன்று மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது.
இக்கடிதத்தினைத் தொடர்ந்து, இப்பொருள் மீது மத்திய அரசின் கருத்து வழங்கப்படாமல் இருந்த காரணத்தால், தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக 23.1.2018-ல் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் அளித்த தனது இடைக்கால தீர்ப்பில், இவ்வழக்கினை நிலுவையில் வைக்க ஆணையிட்டு, தமிழ்நாடு அரசின் 2.3.2016 நாளிட்ட கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு நெறியாணைகளைப் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தனது 9.2.2018 மற்றும் 14.3.2018 நாளிட்ட கடிதங்கள் மூலம் தமிழ்நாடு அரசிடம் மேற்கண்ட நபர்கள் தொடர்பான சில ஆவணங்களைக் கோரியது. அந்த ஆவணங்கள் 27.3.2018 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனை ஆராய்ந்த பின், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 18.4.2018 நாளிட்ட கடிதத்தில், தமிழ்நாடு அரசு 7 பேரின் முன் விடுதலை தொடர்பாக எடுத்த முடிவுக்கு, ஒப்புதல் அளிக்க இயலாது என்று தெரிவித்தது.
இந்நிலையில், மேற்காண் வழக்கு, 6.9.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் 18.4.2018 நாளிட்ட கடிதத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரறிவாளன் என்பவரின் மனுவினை மட்டும் குறிப்பிட்டிருந்த போதிலும், இவரைத் தவிர மற்ற 6 நபர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் தங்களை முன்விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு ஏற்கெனவே மனுக்களை அளித்திருந்தனர். எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து உரிய சட்டக் கருத்து பெறப்பட்டு, 9.9.2018 அன்று எனது தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இந்த 7 நபர்களையும் முன்விடுதலை செய்ய மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தின் அடிப்படையில், 7 பேர் முன்விடுதலை தொடர்பான தனித்தனி கோப்புகள், 11.9.2018 அன்று, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் கீழ் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதிலிருந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும், அதற்காக உடனுக்குடன் அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயலலிதாவும், அதிமுக அரசு மட்டுமே எடுத்தது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஆனால், இன்று 7 பேர் விடுதலை பற்றி, அடிக்கடி அறிக்கை வெளியிடும், திமுக, 1996-2001 இல் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில், அன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில் 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு நபர்களின் கருணை மனுக்களைப் பரிசீலித்து, அவர்களில் ஒருவரான நளினிக்கு மட்டும், மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என முடிவு எடுத்து பரிந்துரை செய்யப்பட்டது. தமிழர்களுக்காக வாழ்வதாகச் சொல்லும் திமுக, இதர மூன்று நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க அமைச்சரவையில் அன்றே ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுதான் வரலாற்று உண்மையாகும்.
உண்மை இவ்வாறு இருக்க, 2.2.2021 அன்று ஆளுநர் உரையை எதிர்த்து 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வெளிநடப்பு செய்து, உண்மையை முற்றிலும் மறைத்து, எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், 19.4.2000 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்று, கருணை மனுக்களை நிராகரித்த, அன்றைய தினம் 7 முன்னாள் அமைச்சர்கள், இன்று எதிர்க்கட்சியில் எம்எல்ஏ ஆகியுள்ளனர், கையெழுத்திட்டிருக்கின்றனர். அதாவது துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பிச்சாண்டி, ஐ.பெரியசாமி மற்றும் சூ.சுரேஷ்ராஜன், ஆகியோர் 2.2.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவருடன் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இவற்றையெல்லாம் மக்கள் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார் உண்மையாக இந்த 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று எந்தக் கட்சி விரும்புகிறது, எந்த அரசு இதற்காக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, இதை வைத்து ஒரு அரசியல் நாடகத்தை இன்றைக்கு திமுக அரங்கேற்றி வருகிறது.
இவர்களுடைய தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், அந்தக் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. அன்றைய தினம் அதை அமல்படுத்தியிருந்தால் இவர்களையெல்லாம் இன்றைக்கு தூக்கிலிட்டிருப்பார்கள், இறந்திருப்பார்கள், நளினியைத் தவிர்த்து. இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். எங்களுடைய அரசைப் பொறுத்தவரை, உண்மையாக இவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
மேலும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டதோடு நில்லாமல், ஆளுநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மேற்காண் 7 பேர் விடுதலை பற்றி விரைவில் முடிவு எடுக்கும்படி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக 29.1.2021 அன்றும், ஆளுநரைச் சந்தித்து, இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன். எனவே, இந்த விவகாரத்தில், ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நான் எதிர்ப்பார்க்கிறேன்.
ஆகவே, இன்றைக்கு திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த 7 பேர் விடுதலைக்காக தாங்கள் போராடுவதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற தேர்தலில் அனுதாபத்தைப் பெறுவதற்காகத்தான் அவர்கள் இந்த நாடகத்தை நடத்துகிறார்கள்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago