நளினியைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்: சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு

By ந. சரவணன்

சிறையில் விதிக்கப்பட்ட தடைகளை ரத்து செய்ய வேண்டும், நளினியைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் என சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். முருகன்-நளினி தம்பதி என்பதால் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முருகன் - நளினி சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இருவரும் சிறைத்துறை அனுமதியுடன் செல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்’ வீடியோ காலில் 15 நாட்களுக்கு ஒருமுறை பேசி வந்தனர்.

இதற்கிடையே, சிறைத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி முருகன் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்களுடன் செல்போன் வீடியோ காலில் பேச முயன்றதாகப் புகார் எழுந்தது. மேலும், முருகன் அறையில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவற்றைச் சிறைத்துறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து பாகாயம் காவல் துறையினர் முருகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, முருகன், நளினியுடன் செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச சிறைத்துறை நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முருகன் சிறையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 25 நாட்களுக்கு மேலாக முருகன் சிறையில் சாப்பிடாமல் தனது போராட்டத்தைத் தொடர்ந்து வந்ததால் அவரது உடல்நிலை மோசடைந்தது.

இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முருகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கூறிய அறிவுரையை ஏற்று முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். சிறைத்துறை விதிமுறைகளை மீறி முருகன் உண்ணாவிரதம் இருந்ததால் சிறையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை சிறைத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். குறிப்பாக மனைவி நளினியுடன் பேசவும், உறவினர்களைச் சந்திக்கவும் முருகனுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியிருப்பதைத் தொடர்ந்து சிறையில் மற்ற கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்தித்துப் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.

இதையறிந்த முருகன் தனது மனைவி நளினியைச் சந்தித்துப் பேச தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், சிறையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை நளினியை நேரில் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் என முருகன் கேட்டுக்கொண்டார்.

மனுவைப் பெற்ற சிறைத்துறை கண்காணிப்பாளர் இது தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்