எதிர்க்கட்சியாக இத்தனை பணிகள்; ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன பணிகள் செய்வோம்?- ஸ்டாலின் பெருமிதம் 

By செய்திப்பிரிவு

ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம், ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன பணிகள் செய்வோம் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (03-02-2021) சென்னையில் நடைபெற்ற திமுக தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்தாசன் இல்லத் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

''தமிழ்தாசனின் இல்லத்தில் அரசியலைப் பற்றி பேசாமல் சென்றுவிட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறதோ, இல்லையோ, அவருக்குக் கோபம் வந்துவிடும். அதனால் சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருக்கிறேன்.

வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை ஜனவரி 25-ம் தேதி தான் நடத்த வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நேற்று திருவொற்றியூர் பகுதியில் நடத்திப் பேசி இருக்கிறார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ’கிராமசபைக் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் நடத்திக்கொண்டிருக்கிறார். கிராமசபைக் கூட்டத்தை அரசாங்கம்தான் நடத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

அரசாங்கம் நடத்தவில்லை என்பதற்காகத்தான் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். அது தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். நியாயமாக கிராமசபைக் கூட்டத்தை அரசின் சார்பில்தான் நடத்த வேண்டும். நான் அதை மறுக்கவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, கலைஞர் முதல்வராக இருந்தபோது அப்படித்தான் நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் இந்த 10 ஆண்டு காலத்தில் அந்த முறை கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால்தான் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடத்துவோம் என்று அறிவித்தவுடன் அதை நடத்தக் கூடாது என்று தடை போட்டார்கள்.

என்ன தடை போட்டாலும் அந்தத் தடை பற்றித் திமுக என்றைக்கும் கவலைப்படாது என்பதைச்சொல்லி, அதே நேரத்தில் அதை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதற்காக ‘மக்கள் கிராம சபை’ என்று பெயரை மாற்றி, அதைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தியிருக்கிறோம். இது ஏதோ புதிதல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஊராட்சி சபைக் கூட்டத்தை நாம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியிருக்கிறோம். இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்யாததை நாம் செய்து காட்டியிருக்கிறோம்.

இன்றைக்கு அரசாங்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாத நிலை. திமுக 10 ஆண்டுக் காலமாக எதிர்க் கட்சியாகத்தான் இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் விரைவில் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆனால் நாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம். நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம். ஏன் என்றால் நாம் சொல்வதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

கரோனா வரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் நாம் சொன்னோம். அப்போது சட்டப்பேரவையில் கேலி செய்தார்கள், கொச்சைப்படுத்திப் பேசினார்கள், விமர்சனமும் செய்தார்கள். அதற்குப் பிறகு இப்போது என்ன நிலைமை என்பது உங்களுக்குத் தெரியும்.

அதேபோல வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்று அறிக்கை விட்டோம். 1000 ரூபாய் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள்.

நாம் சொன்னதை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல நான்கைந்து நாட்களாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு ஆசிரியர் கோரிக்கை வைத்தார். எங்கள் மீது பொய் வழக்குப் போட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விரைவில் நிச்சயமாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மாலை 4 மணிக்கு சொன்னேன். மாலை 6 மணிக்கு அரசு உத்தரவு போட்டுவிட்டது.

அதேபோல ஆரணி தொகுதியில் எழிலரசி என்ற ஒரு சகோதரி, சிலிண்டர் வெடித்ததால் அவர் வீடு எரிந்து, அவருடைய தாயார் அந்தத் தீ விபத்தில் இறந்துவிட்டதாகச் சொன்னார். அந்தச் சகோதரி பேசும்போது, “ஆதரவற்று இருக்கிறேன். விபத்து நடந்து 2 மாதங்கள் ஆகின்றன. நிதி வரும் - நிதி வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார்.

“நிதி வரவில்லை, பெற்றுத் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததுடன் “நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களுக்குள் செய்து கொடுக்க வேண்டும்” என்றும் சொன்னார். “உங்கள் பிரச்சினைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும்” என்று அப்போது சொன்னேன். இது மாலை 5 மணிக்கு நடந்தது. இரவு 8 மணிக்கு அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாயை அரசு செலுத்தி விட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன பணிகள் செய்வோம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்