எம்.டெக். படிப்பில் இரு பாடப்பிரிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல: உயர் நீதிமன்றம் அதிருப்தி

By செய்திப்பிரிவு

எம்.டெக். படிப்பில் இரு பாடப்பிரிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவப்படிப்பில் 69%. நடைமுறை கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் இந்த எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை எதிர்த்து மேற்கண்ட படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிடகோரிய இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, “பல்கலைகழக முடிவால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்றும், எந்த அரசின் ஒதுக்கீடாக இருந்தாலும், நிறுத்தப்பட்ட பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்பதே மனுதாரர்களின் நோக்கம்” என வாதிட்டார்.

அண்ணா பல்கலைகழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயக்குமார், “இந்த இரு பிரிவுகளுக்கு 35 ஆண்டுகளாக நிதி ஒதுக்குவதுடன், மாணவர் சேர்க்கைக்கான பட்டியலையும் தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்பும். அதன்படி பல்கலைகழகம் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளித்து வருகிறது. இந்த ஆண்டு பல்கலைகழகத்தையே சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், எந்த இட ஒதுக்கீடு என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில், மனுதாரர்கள் ஏன் இத்தனை நாட்கள் மௌனம் காத்து, இப்போது வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் நீதிமன்றம் எடுக்கும் முடிவை பொறுத்து கல்வியண்டின் இடையில் கூட சேர்த்துக்கொள்ள முடியும்” என விளக்கம் அளித்தார்.

தமிழக அரசு தரப்பில் மனோகரன் ஆஜராகி வழக்கு குறித்து முழுமையாக விளக்கம் பெற்று தெரிவிக்க இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

பின்னர் நீதிபதி புகழேந்தி குறுக்கிட்டு, “மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் பல்கலைகழகமே இட ஒதுக்கீடு முறை குறித்து முடிவெடுக்க வேண்டிதானே. படிப்பை வழங்குவதைவிட பணத்திற்காக படிப்பை ரத்து செய்தது அண்ணா பல்கலைகழகம் போன்ற கல்வி நிறுவனத்திற்கு ஏற்புடையதா? இது பல்கலை கழகத்திற்கு அழகல்ல. துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் பேசி நல்ல முடிவெடுங்கள்.

நிதி உதவி தேவை என்றால் தமிழக அரசை நாடுங்கள்” என பல்கலைகழகத்திற்கு அறிவுறுத்தினார். மேலும் உயர் கல்வி துறை செயலாளரிடம் கலந்துபேசி நல்ல முடிவெடுக்கும் படி அரசிற்கும் அறிவுறுத்தினார். பணத்திற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, நல்ல தீர்வை கண்டறிந்து தெரிவிக்கவும் அறிவுறுத்தினார்.

மருத்துவப்படிப்பில் 69%. நடைமுறை கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் இந்த எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மத்திய அரசு சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும், பல்கலைகழக சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

எம்.டெக். படிப்பில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் ஒதுக்கீடு வழங்குவதா அல்லது இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையையும் தாங்களே நடத்துவதா என மத்திய அரசே நடத்துவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

வழக்கை பிப்ரவரி 8-ம் தேதி தள்ளிவைத்த நீதிபதி, மத்திய மாநில அரசுகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கும் விளக்கத்தை கேட்டபிறகு, அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்