ஆடம்பரமான வார்த்தைகளால் ஜோடிக்கப்பட்ட காகித பட்ஜெட்: கி.வீரமணி விமர்சனம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஆடம்பரமான சொற்கள் மக்களின் வயிற்றுப் பசியைப் போக்காது, தனியார்க்குத் தாரை வார்க்கும் வெறும் காகித பட்ஜெட், வறுமையை ஒழிக்க, வேலை கிட்டாத பல கோடி இளைஞர்களின் வேதனையைப் போக்க சரியான ஆயுதமில்லாத பட்ஜெட் என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“மூன்றாவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பலவகை ஒப்பனைகளையும், ஆடம்பரமான லட்சம் கோடிகள் என்று பெரிதாக ஒலிக்கும் திட்ட அறிவிப்புகளுமான ஜிகினாக்களும் அதிகம் உள்ள பட்ஜெட் எல்லாம் தனியார்க்குத் தாரை வார்ப்பு கார்ப்பரேட் கனவான்களான பெருமுதலாளிகளுக்கு அணையேதுமின்றி திறந்து விடப்பட்ட சலுகைகள் - எல்லாம் தனியார் மயமாகி வருவதற்கான அறிவிப்புகள் நிறைந்ததாகவுமே உள்ளது.

ஏழை, நடுத்தர, விவசாய மக்களின் கரோனாவினால் நலிந்த வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் வழி வகைகளையும் திட்டங்களையும் கூறி அந்த மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை.

தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் - கண்ணோட்டம்

வரும் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களுக்குத் தனி விசேஷமான பார்வையுடனும், நிதி ஒதுக்கீட்டு முறைகளும் கொண்டதாக அமைந்துள்ளது; பெருத்த ஊடக வெளிச்சத்தைப் பாய்ச்சியதாக அமையினும், ஒவ்வொரு அறிவிப்பிலும் பல நுணுக்கங்கள் கொண்ட ஒப்பனைகள் ஒளிந்து கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோ மீட்டர் சாலைகள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அவரது அறிவிப்பில் இதற்கு நிதி ஒதுக்கப்பட்ட அறிவிப்பு ஏதும் இல்லாமல், மாறாக, இப்படி ஒரு திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது’’ (are also being Planned) என்று மட்டுமே நிதிநிலை அறிக்கையின் 10 ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

வெறும் வரவு - செலவு திட்டமல்ல

பட்ஜெட் என்பது மக்கள் நல அரசுகளில் (Welfare State) வெறும் வரவு - செலவுத் திட்டம் மட்டுமல்ல, வருவாய் - செலவினம் பற்றிய கணக்கீடு - நிதி ஈட்டலும் செலவிடுதலும் மட்டுமல்ல. அதைவிட அதை அரசின் கொள்கையை செயல்படுத்தும் ஆயுதமாகவும் பற்பல காலகட்டங்களில் பல நாடுகளும், அரசுகளும் கையாளுவது என்பது பொருளாதார கொள்கைகளில் முக்கியமாகும். (‘‘Using as an instrument of policy of the state’’)

அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை கூறுவது என்ன?

அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள Sovereign, Socialist, Secular, Social Justice என்ற சொற்கள் இந்தப் பட்ஜெட் உரையில் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அரசுடைமையாக்கப்பட்ட விமான நிலையங்களும் தனியாருக்கு விற்பனை. பொதுத் துறையினருக்கு இரண்டு வங்கிகளும் விற்பனை.

இவற்றில் புதைந்துள்ள மற்றொரு ‘பளிச்சென கண்ணுக்குத் தெரியாத ஆபத்து, இட ஒதுக்கீடு, சமூகநீதி என்பவைதானே உயிரற்றுப் போகும் நிலை சூட்சமமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பொதுத் துறையில் உள்ள இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு உண்டு. ஆனால், தனியார் துறையில் கிடையாது. பெருமுதலாளிகள் தங்கள் விருப்பம் போல் தங்களது தனி உரிமைகளில் நியமனம் செய்வதை யாரும் உரிமையுடன் தட்டிக் கேட்க முடியாத நிலைதானே இன்றுவரை.

பொது இன்ஷூரன்ஸ் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக உயர்த்துவது என்பது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாம். யாருக்கு - வெளிநாட்டு பகாசுர முதலாளிகளுக்கும், திமிங்கலங்களுக்கும் கதவு அகலமாகத் திறந்து விடப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அவர்களின் வசதிக்கேற்ப வளையும்.

மக்களின் - நாட்டின் இறையாண்மை என்பது எப்படி லாவகமாக பறிக்கப்படுகிறது பார்த்தீர்களா? முன்பே பாதுகாப்பு, உற்பத்தித் துறைகளில்கூட இதுபோன்ற நிலைதான். ஆடம்பர சொல்லாடல்களால் வயிற்றுப் பசி தீராது.

கரோனா காலத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள வேலை வாய்ப்புக்கு எந்தத் திட்டமும் இல்லை. ஏற்கெனவே 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். ஆடம்பர சொல்லாடல்கள் ஏழைகளின் பசியைத் தீர்த்து, வயிற்றை நிரப்பாது.

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் - விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு மடங்காக்கப்படும் என்பது கீறல் விழுந்த கிராமஃபோன் பிளேட் போலவே ஒலிக்கின்றது என்றாலும், இந்த நிதிநிலை அறிக்கையில் அது ஒன்றரை மடங்காகச் சுருதி பேதத்துடன் கம்மியான குரலில் கேட்கிறது- யதார்த்தமோ வேறு திசையில் கை காட்டுகிறது.

சேலம் 8 வழி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த நிதியாண்டுக்குள் தொடங்கப்படும் - 277 கி.மீ. தொலைவானது என்று கூறி, அதனை எதிர்த்துப் போராடிய விவசாயிகளின் நெஞ்சில் நெருப்பையள்ளிக் கொட்டுவது போன்றதல்லவா?

தடுப்பூசி போடப்படுவதற்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.

வெறும் காகித பட்ஜெட்

கரோனா தொற்று போன்றவற்றிலிருந்து நாட்டையும், மக்களையும் காக்க பொது சுகாதாரத்திற்கு முந்தைய பட்ஜெட்டைவிட 1.3 சதவிகிதம் நிதி ஒதுக்கல் மட்டுமே அதிகம். ஆனால், கரோனாவுக்கு முன்பு (க.மு.) அது. கரோனாவுக்குப் பின் (க.பி.) என்று சுகாதார அடிக்கட்டுமானத்திற்கே நிதி ஒதுக்கீடு பல மடங்கு பெருகியிருக்கவேண்டும்.

மற்ற நாடுகள் 6 சதவிகிதம் மொத்த வருவாயில் ஒதுக்குகின்றன. நம் நாட்டிலோ வெறும் 2 புள்ளி 21 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரியே.

இவ்வாண்டு பட்ஜெட்டின் தனிச் சிறப்பு காகிதமில்லாத பட்ஜெட் என்பது மட்டுமா? வறுமையை ஒழிக்க, வேலை கிட்டாத பல கோடி இளைஞர்களின் வேதனையைப் போக்க சரியான ஆயுதமில்லாத பட்ஜெட்டும் ஆகும்”.

இவ்வாறு கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்