சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இரங்கல் கூட்டத்துடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கும், அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி, புற்றுநோய் மருத்துவர் சாந்தாவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையின் இறுதிக்கூட்டம் நேற்று தொடங்கியது. பிப்.5 வரை இந்தக் கூட்டம் நடக்க உள்ளது. இரண்டாம் நாளான இன்று இரங்கல் கூட்டத்துடன் நிறைவு பெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
“அமைச்சர் இரா. துரைக்கண்ணு மறைவுக்கு இரங்கல்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்புற மக்கள் பணியாற்றியவரும், 2016ஆம் ஆண்டு முதல் வேளாண்மைத் துறை அமைச்சராகத் திறம்பட பணியாற்றியவருமான இரா. துரைக்கண்ணு 31.10.2020 அன்று உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த இரா.துரைக்கண்ணு, எளிமையும், இனிய பண்பும் தன்னகத்தே கொண்டவர். கட்சிப் பாகுபாடின்றி பழகி, அனைவரின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர். அன்னாரது மறைவால் அவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இரங்கல்
தேனினும் இனிமையான குரலால் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தவரும், பிரபல திரைப்படப் பாடகரும், நடிகரும், 'எஸ்.பி.பி' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 25.9.2020 அன்று உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
எஸ்.பி.பி 16க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள், இந்திய அரசின் பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ போன்ற விருதுகளைப் பெற்றவர். மேலும், இந்த ஆண்டின் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெருமைக்குரியவர்.
அன்னாரது மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறது.
மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு இரங்கல்
உலகப் புகழ்பெற்ற புற்றுநோயியல் நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான மருத்துவர் வி. சாந்தா உடல்நலக் குறைவால் 19.1.2021 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
மருத்துவர் வி.சாந்தா புற்றுநோய் பாதித்த ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், புற்றுநோய் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர்.
இவரது மகத்தான சேவையைப் பாராட்டி ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு இவருக்கு ஔவையார் விருது வழங்கிச் சிறப்பித்தார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகளை மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. மேலும், உலகப் புகழ்பெற்ற மகசேசே விருதும் பெற்ற சிறப்புக்குரியவர்.
மருத்துவர் வி.சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப் பெரிய இழப்பாகும். அன்னாரது மறைவால் அவர்களை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது”.
மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி:
வீ. சந்திரன் 2001-2006ஆம் ஆண்டுகளில் சிவகங்கை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சீரிய முறையில் பணியாற்றினார்.
சு. சிவராஜ் 1985-1988, 1996-2001, 2001-2006 மற்றும் 2006-2011 ஆகிய ஆண்டுகளில் ரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் பணியாற்றினார்.
மா.மீனாட்சிசுந்தரம் 1971-1976, 1977-1980 மற்றும் 1985-1988 ஆகிய ஆண்டுகளில் வேதாரண்யம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு பணியாற்றினார்.
ஜி.பி.வெங்கிடு 1996-2001ஆம் ஆண்டுகளில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்படப் பணியாற்றினார்.
இரா.அரிக்குமார் 1985-1988ஆம் ஆண்டுகளில் பெரணமல்லூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பணியாற்றினார்.
கே.சி.கருணாகரன் 2001-2006ஆம் ஆண்டுகளில் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செவ்வனே பணியாற்றினார்.
பா.மனோகரன் 1989-1991ஆம் ஆண்டுகளில் சிவகங்கை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புறப் பணியாற்றினார்.
வெற்றிவேல் 2011-2015ஆம் ஆண்டுகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்தும் மற்றும் 2016-2017ஆம் ஆண்டுகளில் பெரம்பூர் தொகுதியிலிருந்தும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சீரிய முறையில் பணியாற்றினார்.
லி. அய்யலுசாமி 1996-2001ஆம் ஆண்டுகளில் கோவில்பட்டி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செவ்வனே பணியாற்றினார்.
பி.முகமது இஸ்மாயில் 1980-1984ஆம் ஆண்டுகளில் பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு பணியாற்றினார்.
வி.தண்டாயுதபாணி 1991 -1996ஆம் ஆண்டுகளில் குடியாத்தம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டத்தக்க வகையில் பணியாற்றினார். மேலும், 1977 - 1979ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
எஸ்.அக்னி ராஜூ 1967 - 1971ஆம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பணியாற்றினார்.
சொ. ந.பழனிசாமி 1977 - 1980ஆம் ஆண்டுகளில் அவினாசி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புறப் பணியாற்றினார்.
வி.சிவகாமி 2001 - 2006ஆம் ஆண்டுகளில் தாராபுரம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டத்தக்க வகையில் பணியாற்றினார்.
ஏ.டி.செல்லச்சாமி 1991 - 1996ஆம் ஆண்டுகளில் ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு பணியாற்றினார்.
எஸ். ஆர்.இராதா 1977 - 1980ஆம் ஆண்டுகளில் கும்பகோணம் தொகுதியிலிருந்தும் மற்றும் 1989 - 1991ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியிலிருந்தும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பணியாற்றினார். மேலும், 1980 - 1986ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1983 - 1985ஆம் ஆண்டுகளில் அமைச்சராகவும் மற்றும் 1989 - 1991ஆம் ஆண்டுகளில் எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
எஸ். மணி 1962 - 1967ஆம் ஆண்டுகளில் வெங்கலம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்படப் பணியாற்றினார்.
கே.ஏ. மணி 1989 - 1991ஆம் ஆண்டுகளில் கபிலமலை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செவ்வனே பணியாற்றினார்.
டி.யசோதா 1980 - 1984, 1985 - 1988, 2001 -2006 மற்றும் 2006 - 2011 ஆகிய ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் பணியாற்றினார்.
ப.வெ. தாமோதிரன் 2001 - 2006ஆம் ஆண்டுகளில் பொங்கலூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சீரிய முறையில் பணியாற்றினார். மேலும், 2002-2006ஆம் ஆண்டுகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இரா.சண்முகம் 1977 - 1980, 1980 -1984 மற்றும் 1985 - 1988 ஆகிய ஆண்டுகளில் திருத்தணி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டத்தக்க முறையில் பணியாற்றினார்.
மு.பழனிவேலன் 1971 - 1976ஆம் ஆண்டுகளில் நாமக்கல் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு பணியாற்றினார்.
இம்முன்னாள் உறுப்பினர்களது மறைவால் அவர்களைப் பிரிந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இப்பேரவையின் சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago