வைகோ தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுவர் விடுதலை, வேளாண்சட்டங்களை நீக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
“மூன்று வேளாண்சட்டங்களை நிரந்தரமாக நீக்க வேண்டும்:
» நினைவிருக்கிறதா? இந்தியப் பந்துவீச்சாளர் அசோக் டின்டா: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
» விவசாயச் சட்டங்கள்; மாநிலங்களவையில் விவாதம் தொடங்கியது: எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஏற்பு
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் பகைச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, 2020, நவம்பர் 26-ஆம் தேதி முதல் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்து, தலைநகர் தில்லி எல்லைகளில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமர்ந்து, அறவழியில் போராடி வருகின்றனர்.
வேளாண் சங்கத் தலைவர்களுடன், மத்திய அரசு ஒன்பது முறைகள் பேச்சுவார்த்தை நடத்தியது. மூன்று சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியுடன் இருக்கின்றனர். மாபெரும் எதிர்ப்பைச் சந்திக்கும் நிலையிலும் மத்திய பாஜக அரசு, இச்சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று ஆணவமாகக் கூறி வருகின்றது.
ஜனவரி 26 குடியரசு நாளில், டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு வேளாண் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி, டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜிபூர் ஆகிய மூன்று சாலைகளில் இருந்து டெல்லியை நோக்கி அணிவகுத்து வந்த பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களைத் தடுத்து நிறுத்த, மத்திய அரசு காவல்துறை மூலம் தடைகளை ஏற்படுத்தியது. ஆனால், விவசாயிகளின் எழுச்சிக்கு முன்பு தடைகள் தகர்ந்து விட்டன.
டெல்லி செங்கோட்டை வரை அமைதியாகப் பயணித்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில், திட்டமிட்டு காவல்துறை கலவரத்தை ஏற்படுத்தி, விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தியது வன்மையான கண்டனத்திற்கு உரியது. விவசாயி நவ்நீத் சிங் என்பவர் பலி ஆகி உள்ளார். இதுவரையில், 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இப்போராட்டத்தில் உயிர் இழந்துள்ளனர்.
விவசாயிகள் மீது பழிபோட்டு, அவர்களின் தீரமிக்க தியாகப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் சதித் திட்டத்தை அரங்கேற்ற பாஜக அரசு முனைந்து இருப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. இருந்தாலும், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நிலைகுலையாமல், அறவழிப் போராட்டத்தைத் தொடரும் நிலையில், ‘விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும், இல்லையெனில் மின்சாரம், குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்’ என்று, உத்திரப்பிரதேச பாஜக அரசு மிரட்டி உள்ளது.
மேலும், டெல்லி காவல்துறையினர், விவசாயச் சங்கத் தலைவர்கள் 37 பேர் மீது டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்படுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இச்செய்தியை வெளியிட்ட மூன்று பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்கு தொடர்ந்துள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.
குலைநடுங்கும் குளிரில் பல்வேறு சோதனைகளைத் தாங்கிக் கொண்டு, தியாக உணர்ச்சியுடன் டெல்லியில் போராடி வருகின்ற விவசாயிகளின் போராட்டத்திற்கு, நாட்டு மக்கள் வழங்கி வரும் நல்லாதரவைச் சிதைப்பதற்கும், விவசாயிகளைத் தேச விரோதிகளாகச் சித்தரிப்பதற்கும் முனைந்துள்ள மத்திய பாஜக அரசு, குடியரசுத் தலைவர் உரையில் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முன்வந்திருப்பது கண்துடைப்பு அறிவிப்பாகும்.
இந்தியாவில் வேளாண்மைத் தொழிலைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்ல வழி வகுக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகின்றது.
நான்கு மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச விசாரணை வேண்டும்:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து, கடந்த ஜனவரி 18-ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடி விசைப்படகில், மேசிபா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள், மீன்பிடித் தொழிலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் படகில் வேகமாக வந்து, தமிழக மீனவர்களின் படகின் மீது மோதி உடைத்து மூழ்கடித்தனர்.
கடலில் உயிருக்குத் தத்தளித்த மீனவர்களை, மற்ற மீனவர்கள் வந்து காப்பாற்ற விடாமல் தாக்கி விரட்டி அடித்த சிங்களக் கடற்படையினர், உயிருக்குப் போராடிய மீனவர்களைத் தடிகளால் மண்டையில் அடித்தும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்தும் கொன்றனர். அவர்களது உடல்களை, யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து இருந்தபோது, தமிழகத்திற்குக் கொண்டு வந்து உடல் கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர் குடும்பங்கள் விடுத்த கோரிக்கையை, தமிழக அரசு ஏற்கவில்லை.
இந்து தமிழ் திசை நாளேடு (27.01.2021) எழுதி உள்ள தலையங்கத்தில், நான்கு தமிழக மீனவர்களும் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைபாதகன் கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு, இந்திய அரசு வெண்சாமரம் வீசி வருவதால், தமிழக மீனவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியும், அவர்களைக் கைது செய்து சித்ரவதை செய்து படுகொலை செய்யவும் துணிந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில், 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.
சொந்த நாட்டு மீனவர்களை அயல்நாட்டுக் கடற்படை கொடூரமாகக் கொன்று குவிப்பதை, இந்திய, தமிழக அரசுகள் வெறுமனே வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். எனவே, மத்திய அரசு, இலங்கை அரசு மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும், கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஈடு அளிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகின்றது.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இயல்புக்கு மாறாக, தை மாதம் முதல் வாரம் வரையில் பெய்த பெருமழையால் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
தென்மாவட்டங்களில் பெருமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள், கடும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டன. விளைநிலங்களில் முற்றிய நெற்கதிர்களை அறுவடை செய்ய இயலாமல், அவை முளைத்துப் போனதுடன் நீரில் மூழ்கியதால் அழுகியும் விட்டன. மழை வெள்ளச் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வருவாய் குறுவட்ட வாரியாகக் கணக்கிடாமல், வருவாய் கிராம வாரியாக வருவாய் இழப்பைக் கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பு ஈடு வழங்கிட வேண்டும் என்று, பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதனை ஏற்று, விவசாயிகளுக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து, பெரும் துயரில் வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் விவசாயக் கடன்களைத் தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதி விவசாயச் சங்கங்கள், இந்தப் பாதிப்பினை ‘அறுவடை பேரிடராக’ அறிவித்து கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
* ஒரு மணி நேரத்திற்கு மூவாயிரம் ரூபாய் செலவு ஆகும் அறுவடைக் கருவியின் வாடகைக்கு, அரசு உடனடியாக மானியம் வழங்க வேண்டும்;
* விளைந்த பயிர்களை அறுக்கும் கருவிகளின் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, அரசு வாடகை மானியத்தோடு, வேறு பகுதிகளில் இருந்து அறுவடைக் கருவிகளை, உடனடியாக ஏற்பாடு செய்து தர வேண்டும். தாமதம் ஆனால், எஞ்சியுள்ள நெல்மணிகளும் முளை விட்டுவிடும்;
*‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு மாற்றாக, புதிய தென்னங்கன்றுகளை மறு நடவு செய்ததில், இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், இளம் தென்னங்கன்றுகளில் தண்ணீர் தேங்கி, அவை முழுமையாக அழுகி விட்டன. அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்;
* நெல் கொள்முதல் நிலையங்களில், ஈரப்பதம் 14 விழுக்கhடுக்குக் கூடுதலாக இருந்தால், கொள்முதல் செய்வது இல்லை. பேரிடர் கhலத்தைக் கருத்தில் கொண்டு, 20 விழுக்கhடு ஈரப்பதம் மிகுந்து இருப்பினும், அரசே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்;
* நீண்டகாலத் திட்டமாக, வடிகால்களில் மீது கட்டி இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை நீக்கிடவும், வடிகால்களைத் தூர் வாருவதற்கான பணிகளை, இந்தக் கோடையில் துவங்கிடவும் வேண்டும். விவசாயிகளின் மேற்கண்ட கோரிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகின்றது.
விழுப்புரம் தடுப்பணை உடைந்த விவகாரம் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்
விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமத்திற்கு இடையே, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே, ரூ. 25 கோடியே 37 இலட்சம் மதிப்பில், கடந்த 2019-ஆம் ஆண்டு தடுப்பு அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தத் தடுப்பு அணை கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கவும் பட்டது. இந்தத் தடுப்பு அணை,
கரைப்பகுதி ஒன்றரை மாதங்களுக்கு உள்ளாகவே உடைந்து நீர் வெளியேறியதால், தென் பெண்ணை ஆற்றின் நீர் முழுவதும் வீணாகியது. தடுப்பு அணையின் 14 அடி உயரத்திற்கு, வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் நீர் வழிந்தோடியது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீர் தேங்கி இருந்தது. இந்த நீர், எனதிரிமங்கலம் அடுத்துள்ள நீர் வரப்புகளான சுமார் 14 ஏரிகளுக்குமே செல்கின்றது.
மேலும், விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் அடுத்துள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இது இருக்கின்றது. இந்நிலையில்தான், அணைக்கட்டின் கரைப் பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறி விட்டது.புதிதாகக் கட்டிய அணை ஒரு மாதத்தில் உடைந்து மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சியில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் காரணமாக, அனைத்துத் துறைகளிலும் ஊழல் புற்று நோய் பரவி உள்ளது. இதற்கு, பொதுப்பணித் துறையும் நீர்வளத் துறையும் விதிவிலக்கு அல்ல. ஆட்சியாளர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவதால், அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் ஒப்பந்ததாரர்கள் செயல்படுவது இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல திரும்பும் திசையெல்லாம் ஊழலில் ஊறித் திளைக்கும் அதிமுக ஆட்சியின் அவலத்திற்கு தென்பெண்ணை ஆற்றுத் தடுப்பு அணை உடைந்தது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
ஊழல் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், நீர்வளத் துறை அதிகாரிகளை மட்டும் பணி இடை நீக்கம் செய்து, ஊழலைத் திரைபோட்டு மறைக்க முயற்சிக்கும் அதிமுக அரசுக்கு, இக்கூட்டம் கண்டனத்தைத் தெரிவிக்கின்றது. ஊழல் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதையும் இக்கூட்டம் ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றது.
சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட வேண்டும்:
கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக, மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் பத்து மாதங்களாக சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும், 12.94 இலட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், சுமார் 80.81 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
வேளாண் தொழிலுக்கு அடுத்து, அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் இந்நிறுவனங்கள், கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டதால், லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவானது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க முடியாமல் தவித்து வருகின்றன.
இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டன. ஸ்டெயின்லெஸ் விலை, 32 % உயர்ந்து இருக்கின்றது. அலுமினியம் - 26%, இயற்கை ரப்பர் - 52%, காப்பர் - 77% என மூலப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருப்பதால், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மீண்டும் இயங்கவோ உற்பத்தியைத் தொடங்கவோ முடியாமல் நிலைகுலைந்து விட்டன.
பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்ற, இத்தகைய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
1) சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் தொழில் வரியை, இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும்;
2) ரூ. 100 கோடி வரையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதுடன், கூடுதல் கடன் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்;
3) நிலையான மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சீராக இயங்கவும், தொழிலாளர்களின் வேலை இழப்பைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகின்றது.
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கூடாது
கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலைகளில் இருந்து பெருகி வருகின்ற தென்பெண்ணை ஆறு, தமிழகத்தின் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ. தொலைவு ஓடி,கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லையை ஒட்டி, கர்நாடகா அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வுப் பணிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அரசு அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து, அப்போதைய இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி, கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது.
தென்பெண்ணையாறுக்கு கர்நாடகா அரசு முழு உரிமை கோர முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது இந்த மனு மீது, கடந்த 2019 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தென்பெண்ணை ஆற்றுக்குக் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் விவகாரத்தில், இந்த நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்கக் கோரி, தமிழக அரசு இதுவரையில் தீர்ப்பு ஆயம் அமைக்கக் கோரி, மத்திய அரசிடம் வலியுறுத்தவே இல்லை.
எனவே, தமிழக அரசின் மனுவை ஏற்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒரு நதிநீரைப் பகிர்ந்து கொள்கையில் சிக்கல் ஏற்பட்டால், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-இன்கீழ், ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க ஒரு தீர்ப்பு ஆயம் அமைக்கக் கோரி மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோர முடியும்.
ஆனால், தென்பெண்ணையாறு விவகhரத்தில் சிக்கலைத் தீர்க்க ஒரு தீர்ப்பு ஆயம் அமைப்பதை தெரிந்தே அரசு தவிர்த்து வந்துள்ளதால், மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை என்று கூறுவது தவறு எனவும், அடுத்த நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு, மத்திய அரசிடம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ன் கீழ் இந்தச் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பு ஆயம் அமைக்கக் கோரலாம் எனவும் ஆணை பிறப்பித்து, தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2007-ஆம் ஆண்டிலேயே இந்த அணை கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் கர்நாடகா அரசு பெற்று, சுமார் 70 விழுக்காடு பணிகளையும் முடித்து விட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடிக்கும் அதிமுக அரசு, தென்பெண்ணையாற்று நீர் சிக்கலைத் தீர்க்க மத்திய அரசிடம் கோராதது கண்டனத்துக்கு உரியதாகும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு, நடுவர் மன்றம் அமைக்கக் கோரி கடந்த நவம்பர் 11, 2019-இல் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது. தமிழக அரசின் கோரிக்கை குறித்து, தொடர்புடைய கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களிடம் கருத்து பெறுவதற்காகவும், சுமூகமாக சிக்கலைத் தீர்க்கவும், 2020, ஜனவரி 20-ஆம் தேதி பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இக்குழுவில் மத்திய நீர்வளத் துறையின் தலைவர், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர்கள், மத்திய வேளாண்மைத் துறையின் இணைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறையின் இணைச் செயலாளர், நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹைட்ராலஜியின் இயக்குநர், மத்திய நீர்ப்பாசன மேலாண்மை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆகிய 9 பேர் இடம் பெற்று இருந்தனர்.
பேச்சுவார்த்தைக் குழு 2020, பிப்ரவரி 24 மற்றும் ஜூலை 7 ஆகிய இரண்டு நாட்களில் தென்பெண்ணையாறு நதிநீர் சிக்கல் குறித்து விவாதித்து, இறுதி அறிக்கையை ஜூலை 31, 2020 இல் மத்திய அரசுக்கு அளித்தது. அதில், பேச்சுவார்த்தை மூலம் தென்பெண்ணையாற்று நதிநீர்ப் பகிர்வு சிக்கலைத் தீர்க்க முடியாததால், ஒரு தீர்ப்பு ஆயம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956, பிரிவு 3-இன் கீழ், நதிநீர் சிக்கலைத் தீர்க்க ஒரு தீர்ப்பு ஆயம் அமைக்கக் கோரி, மாநில அரசு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து ஓராண்டுக்குள் தீர்ப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், மத்திய பாஜக அரசு, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்தது போலவே, தென்பெண்ணை ஆற்றுப் பிரச்சினையிலும் கேடு செய்து வருகின்றது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டிய அதிமுக அரசு, பாஜக அரசின் பாதம்தாங்கியாகச் செயல்படுவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கின்றது.
எழுவர் விடுதலை
பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார்.
“அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவின்படி, மாநில அமைச்சரவை கூடி, 7 பேரையும் விடுவிக்க 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் முடிவு எடுத்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று சட்ட அறிஞர்கள் கூறினர். ஏழு பேரை விடுவிப்பதில், ஆளுநருக்கு உடன்பாடு இல்லை எனில், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளைத் திருப்பி அனுப்பலாம் எனவும் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில், தமிழக ஆளுநர் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவு எடுப்பார்” என்று மத்திய அரசின் கருத்தை வழக்கறிஞர் துஷார் மேத்தா முன் வைத்தார்.
இதனையடுத்து, உச்ச நீதி மன்ற நீதிபதிகள், எல். நாகேஸ்வர ராவ், எஸ். அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தமிழக ஆளுநர், ஒரு வார காலத்திற்குள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்திரவிட்டனர். ஆனால், உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டு ஒரு வார கால அவகாசம் முடிந்த பின்னரும், தமிழக ஆளுநர் ஏழு தமிழர் விடுதலை பற்றி முடிவு எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருவதற்கு, இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், ஏழு தமிழர்களையும் உடனே விடுதலை செய்திட ஆளுநர் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்களை நியமிப்பது
மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. குறிப்பாக ரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை போன்றவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை.
தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனமாகவும், நவரத்னா தகுதியைப் பெற்ற நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணி நியமனங்களில் வட மாநிலத்தினர் எல்லா நிலையிலும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், என்.எல்.சி. நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020 இல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் (Graduate Excutive Trainee) 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டிருக்கிறது.
பின்னர் அதற்கான எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து1582 பேரை அடுத்த கட்ட நேர்காணலுக்கு என்.எல்.சி. நிறுவனம் அழைப்பு விடுப்பதற்கு பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்தில் வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.
ஜி.இ.டி. (GET) எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் என்.எல்.சி.யில் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அதிகாரிகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள். இத்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு சதவீதம் குஜராத், உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டு பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது. இல்லையேல் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது".
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 secs ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago