சட்டப்பேரவையில் ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

By ஜெ.ஞானசேகர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி, மனிதநேய மக்கள் கட்சி தனது நிர்வாக அமைப்பை மாநிலம் முழுவதும் 7 மண்டலங்களாகப் பிரித்து மண்டலப் பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 7-வது மண்டலமாக மத்திய மண்டல பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், முழுக்க முழுக்கப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவானதாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள பெரு முதலாளிகளின் செல்வத்தை மேலும் உயரவைக்கும் வகையிலான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன. இந்தியாவைப் பெரும் கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவே அமைந்துள்ளது.

மாநிலங்களுக்கு எவ்வித பங்களிப்பும் வராத செஸ் வரியை விதித்துள்ளது. இது, மாநிலங்களை வலுவிழக்கச் செய்யும் செயல். செஸ் வரி விதிப்பால் ஏற்கெனவே உள்ளதைக் காட்டிலும் விலைவாசி உயர்வு மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 8 வழிச் சாலைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், பட்ஜெட்டில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறியிருப்பது மாநில உரிமையைப் பறிப்பதாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமனை, தேசிய பாதுகாப்புச் சட்டம் அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறக் கூடாது, மோதலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆளுநர் எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில், சட்டபேரவை உரையிலும் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தைத் தருகிறது. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

திமுக கூட்டணியில்தான் மனிதநேய மக்கள் கட்சி உள்ளது. கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தமுறை கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட பூமி. ஆனால், தற்போதைய அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, மாநில உரிமைகளை மீட்க வேண்டும், மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் தேர்தல் பிரச்சாரம் அமையும்.

2007-ல் திமுக ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு வந்த அதிமுக அரசு அதைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீதம்தான் முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்தப் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கை.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதில் கட்சியினர் உற்சாகமாக உள்ளனர். தமிழ்நாட்டில் சமூக நீதி தழைத்தோங்கவும், மாநில உரிமைகள் நிலைநாட்டப்படவும் நாங்கள் இடம் பெற்றுள்ள திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களைச் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கான ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் கட்சியினருக்கு வழங்கப்பட்டன”.

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்