அதிமுக அரசின் ஊழல் அனைத்துக்கும் பார்வையாளரான ஆளுநர்; சட்டப்பேரவையின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது: ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

வரலாறு காணாத அதிமுக அரசின் ஊழல் அனைத்திற்கும் ஆளுநர் பார்வையாளராக மட்டுமே இருப்பதை அடுத்து, ஆளுநர் உரை - சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முழுவதையும் திமுக புறக்கணிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்களின் மீது ஆதாரங்களுடன், 22.12.2020 அன்று, நேரில் கொடுக்கப்பட்ட 97 பக்க ஊழல் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் இதுவரை விடுதலை செய்யாமல், அமைச்சரவைத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டிருக்கும் தமிழக ஆளுநரின் செயலைக் கண்டித்து, மக்கள் விரோத அதிமுக அரசின் ஆளுநர் உரையைத் திமுக புறக்கணிக்கிறது.

வரலாறு காணாத ஊழல்

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம், அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளதுடன், மாநிலத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகாலம் பின்னோக்கிச் சென்றுவிட்டது. நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகள் இரண்டும் வெற்று விளம்பரக் கொண்டாட்டமாக மாறிவிட்டன. புதிய முதலீடுகளும் இல்லை - புதிய தொழிற்சாலைகளும் இல்லை - புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை! அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை வடிகட்டிய ஊழல்! வரலாறு காணாத ஊழல்! அனைத்திற்கும் ஆளுநர் பார்வையாளராக மட்டுமே இருப்பது, தமிழகத்தின் கெட்ட வாய்ப்பாகப் போய்விட்டது.

அதிமுக அமைச்சரவையில் ஊழலின் மூலம் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பும், கொள்ளையடித்த பணமும், தமிழகத்திற்கே தனி பட்ஜெட் ஒன்றைத் தயாரிக்கும் அளவிற்கு மலை போல் குவிந்து - சுதந்திர இந்தியாவில் இப்படியொரு ஊழல் ஆட்சி இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லை - ஏன், 1991 - 1996 அதிமுக ஆட்சியின் ஊழல்களையே விஞ்சி நிற்கின்றன முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் தற்போதைய ஊழல்கள்.

டெண்டர்களில் ஊழல், புதிய நியமனங்களில் ஊழல், நிர்வாக மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளில் ஊழல், சீருடைப் பணியாளர் தேர்வாணைய மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணைய நியமனத்தில் ஊழல் என அனைத்துத் தேர்வாணையங்களின் நம்பகத்தன்மை, வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்டு விட்டது.

சட்டப்பேரவையின் மாண்பு சிதைப்பு

கரோனா ஊழல் அதிமுக ஆட்சியில் இப்போது நடைபெற்று வரும் கடைசிக்கட்டக் கொள்ளை! முதல்வர், உட்கட்சித் தலைமைப் போராட்டத்தில் தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளும் நோக்கில், அரசுப் பணத்தில் கடந்த 3 மாதங்களாக, ஏடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து செய்யப்படும் ஏமாற்று விளம்பரங்கள்! அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடம் இல்லை. உண்மையான தகவல்களை அளிப்பதில்லை. மானியத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அறிவிப்பதை நிறைவேற்றுவதில்லை. அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகளை - "பொய்யுரைகளாக" மாற்றிய அநியாயம் அதிமுக ஆட்சியில் நடைபெற்று - சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு ஒப்புதல் பெற முடியாமல் - 16 மாணவ - மாணவியர் தற்கொலைக்கு வித்திட்டுள்ளது அதிமுக ஆட்சி! நீட் மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலைச் சட்டப்பேரவைக்கே மறைத்த ஜனநாயக விரோத ஆட்சி அதிமுக ஆட்சி.

பதவியில் ஒட்டிக்கொண்டு, பவிசு காட்ட வேண்டும், பதவியை முறைகேடாகப் பயன்படுத்திப் பணம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பச்சை சுயநலத்திற்காக, மாநில உரிமைகளைத் தாராளமாகத் தாரைவார்த்து, ஜிஎஸ்டி சட்டத்தை அவசர கதியில் அமல்படுத்தி, 15-வது நிதி ஆணையத்தில் உரிய நிதியைப் பெறாமல் கோட்டை விட்டு - மாநிலத்தின் நிதி உரிமையையும் பறிகொடுத்தது இந்த ஆட்சி.

தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தாலும், டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்தாலும், இந்தி திணிக்கப்பட்டாலும் “எங்களுக்கு என்ன கவலை” என்று ஊழலில் ஊறிப்போன அரசு இது. புதிய மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல், அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாமல், நதிநீர் உரிமையை விட்டுக் கொடுத்த அரசு.

வரலாறு காணாத வகையில் சீர்குலைந்த சட்டம் - ஒழுங்கு

அதிமுகவைச் சேர்ந்தவரே பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது, சென்னை மாநகரில் பெண் ஐ.டி. பொறியாளர்கள் பாலியல் கொடூரத்திற்கு ஆளாகி கொல்லப்பட்டது, கோடநாடு கொலை - கொள்ளைகள், பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தந்தையும் மகனும் அடித்துக் கொலை, ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்த மாணவி வளர்மதி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது, பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை மூடி மறைத்தது, தமிழகத்தில் பெருகி விட்ட துப்பாக்கி கலாச்சாரம், பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொந்தரவு, அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படும் அளவிற்கு கூலிப்படைகளின் அட்டகாசம் என அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு வரலாறு காணாத வகையில் சீர்குலைந்து விட்டது.

மத்திய பாஜக அரசின் அடிமையாக இருந்து முதல்வர்பழனிசாமி முத்தலாக் சட்டத்தை ஆதரித்தது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது, மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்து - இப்போது இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் பாஜகவிற்குத் துணை போவது, அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெறாமல் வஞ்சித்தது - அரசு மருத்துவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டையும் கொடுக்க மறுத்தது - புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பது - தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு பறிபோவதை வேடிக்கை பார்ப்பது என அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு நேர்ந்திருக்கும் அநீதிகள் ஏராளம்!

விவசாயிகளின் தீராத் துயரங்களுக்கு வித்திட்ட ஒரே முதல்வர்

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பது - "விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்ய முடியாது" என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட்டு - நிவர், மார்கழி மழை உள்ளிட்ட எந்தப் பேரிடர்களிலும் மத்திய அரசின் நிதியையும் வாங்க முடியாமல் - விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்காமல் - பயிர்க் காப்பீட்டின் இழப்பீட்டுத் தொகையைக் கூட அலைக்கழித்து - விவசாயிகளின் தீராத் துயரங்களுக்கும், தற்கொலைகளுக்கும் வித்திட்ட ஒரே முதல்வர் பழனிசாமி!

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கூட்டணியாக இருக்கும் மத்திய அரசின் மூலம் தடுத்து நிறுத்த முடியவில்லை. மீனவர்களின் படகுகள் பறிபோவதை வேடிக்கை பார்க்கிறது அதிமுக அரசு. தினந்தோறும் விஷம் போல் ஏறும் விலைவாசியைக் குறைக்க முடியவில்லை. விண்ணை முட்டும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வையோ, சமையல் எரிவாயு விலை உயர்வையோ, நிறுத்தக் கோரி பாஜக அரசிடம் முறையிடக்கூடத் துணிச்சல் இல்லை. புதிய ரயில்வே திட்டங்களையோ, முன்னேற்றத்திற்கான வேறு முக்கியத் திட்டங்களையோ கொண்டு வரமுடியாமல் - அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டியதோடு மறந்துவிட்டு ஒரு கையாலாகாத ஆட்சியை நடத்தி வரும் - கூவத்தூரில் முதல்வரான பழனிசாமியின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதுதான் தமிழக மக்களின் ஆர்வம் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்க முடியாது எனக் கூறிவிட்டு - ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவு தெரியாமலே - தெரிந்துகொள்ள அக்கறை காட்டாமலே - 80 கோடி ரூபாயில் அவருக்கு நினைவிடம் அமைப்பது, தன்னை முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்திக்கொள்ள அரசுப் பணத்தில் 1000 கோடி ரூபாய் விளம்பரம் என, தமிழகத்தை சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கடித்து, மிகப்பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறார் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டிய முதல்வர் பழனிசாமி.

பழுதான தமிழக அரசின் நிர்வாக இயந்திரம்

ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, துறையில் உள்ள மூத்த அரசு அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும், ஏன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளையும் புறக்கணித்து, பல்வேறு துறைகளை ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில்விட்டு, ஓர் அலங்கோலமான நிர்வாகத்தை 4 ஆண்டுகள் அனைத்து மட்டத்திலும் நடத்தியது இந்த அரசு. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் ஆசிரியர்களை, அரசு ஊழியர்களை, செவிலியர்களை, மருத்துவர்களை உதாசீனப்படுத்தி, தனிச்சிறப்பு வாய்ந்த தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தைப் பத்தாண்டு காலம் அதிமுக அரசு பழுதடைய வைத்துவிட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

அதிமுக ஆட்சியில், தகவல் பெறும் ஆணையம், விழிப்புணர்வு ஆணையம், ஊழல் தடுப்புத் துறை எல்லாம் ஆட்சியின் ஊழல்களை மறைக்கும் நிலைக்கு மாறிவிட்ட அவலம் பழனிசாமி ஆட்சியில் நடந்துவிட்டது. தமிழக காவல்துறை சீர்திருத்தச் சட்டம் அதிமுக ஆட்சியில் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு, காவலர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் ஸ்காட்லாந்து யார்டு போலீஸை விடத் திறமை மிக்க தமிழகக் காவல்துறையை சீரழித்துள்ளது அதிமுக ஆட்சி.

“ஊழல் செய்வோருக்கே இந்த ஆட்சி” என்ற வகையில் லோக் ஆயுக்தா - உள்ளாட்சிகளின் ஊழல்களை விசாரிக்கும் ‘ஆம்புட்ஸ்மேன்’ அமைப்பு எல்லாம் முடக்கப்பட்டு, விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், ஏழை - எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும் இழுக்கை ஏற்படுத்திய அதிமுக ஆட்சியின் கடைசி ஆளுநர் உரைக்கான இந்தக் கூட்டத் தொடரை திமுக புறக்கணிப்பது என முடிவெடுத்திருக்கிறது''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்