என்எல்சி அதிகாரிகள் தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது இயல்பானது அல்ல; இது திட்டமிட்டுத் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் சதியாகும். தமிழர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி புதிய தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து, நேர்காணலுக்கு அழைக்க மறுத்தால் மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''தமிழ்நாட்டில் நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தில் 259 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியர் (Graduate Executive Trainee- GET) பணிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ள 1,582 பேரில் ஒரு விழுக்காட்டினர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது அதிர்ச்சியளிக்கிறது. என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இந்த சமூக அநீதி கண்டிக்கத்தக்கது ஆகும்.
என்.எல்.சி நிறுவனத்தில் எந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், சிவில், கணினியியல், சுரங்கவியல், நிலவியல் ஆகிய பொறியியல் பிரிவுகள், நிதியியல், மனிதவளம் ஆகியவற்றில் 259 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
போட்டித்தேர்வுகள் நிறைவடைந்து, ஒவ்வொரு காலியிடத்திற்கும் 6 பேர் வீதம் மொத்தம் 1,582 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணல் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஆய்வு செய்து பார்த்ததில் மொத்தமுள்ள 1,582 பேரில் 10 பேர் கூட தமிழர்கள் இல்லை என்பதை அறிய முடிகிறது.
» விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
» இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக குறைகிறது; புதிய தொற்று 8,635; உயிரிழப்பு 94
பட்டதாரி நிர்வாகப் பயிற்சியர் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது இயல்பானது அல்ல; இது திட்டமிட்டுத் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் சதியாகும். பட்டதாரி நிர்வாகப் பயிற்சியர் பணி சாதாரணமானது அல்ல. பட்டப்படிப்பு படித்தவர்கள் போட்டித்தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவுடன் இப்பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் ஓராண்டுக்குப் பயிற்சியராக இருப்பார்கள். அப்போது மாத ஊதியமாக ரூ.1.13 லட்சம் வழங்கப்படும். ஓராண்டு பயிற்சிக்காலம் முடிவடைந்த பிறகு அதிகாரியாக அமர்த்தப்படுவர். அப்போது அவர்களின் மாத ஊதியம் ரூ.1.40 லட்சமாக உயர்த்தப்படும். இந்தப் பணியில் சேருபவர்கள் என்.எல்.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குனர் நிலை வரை பதவி உயர்வு பெற முடியும்.
அதிக ஊதியமும், கவுரவமும் மிக்க இந்தப் பணிகளில் முழுக்க முழுக்க வட இந்தியர்களை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்.எல்.சி நிறுவனம் செயல்படுவதாகவும், அதற்காக போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல்களில் முறைகேடுகள் செய்யப்படுவதாகவும் பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய முறைகேடுகள் காரணமாகவே தமிழர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஒருவேளை போட்டித்தேர்வுகளில் தமிழர்கள் வெற்றி பெற்று வந்துவிட்டால்கூட, அவர்கள் பணியில் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக நேர்காணலுக்கு ஒரு பணியிடத்திற்கு 6 பேர் வீதம் அழைக்கப்படுகிறார்கள். இது எங்குமே நடைபெறாத வினோதம் ஆகும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான நேர்காணல்களுக்கு 1:3 என்ற விகிதத்தில்தான் மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனாலும், என்.எல்.சி பணிக்கு மட்டும் ஒரு பணிக்கு 6 பேர் வீதம் நேர்காணல்களுக்கு அழைக்கப்படுவதன் நோக்கம் தமிழர்களை ஒதுக்கிவைத்து வட இந்தியர்களைப் பணியில் திணிப்பது மட்டும்தான்.
என்.எல்.சி நிறுவனத்தில் சமூக நீதி சூறையாடப்படுவதற்குக் காரணம் அதன் நிர்வாகத்தில் தமிழர்கள் மட்டுமே இருந்த நிலை மாறி, வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதுதான். என்.எல்.சியில் இப்போதுள்ள தலைவர் மற்றும் இயக்குனர்கள் 11 பேரில் தமிழக அரசின் பிரதிநிதியாக இருக்கும் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தவிர, மீதமுள்ள 10 பேரில் 9 பேர் தமிழர் அல்லாத பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திட்டமிட்டுத் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பணியில் திணிப்பதற்காக தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளைச் செய்வதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இந்த சதிராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் திறமை இருந்தும் நிராகரிக்கப்படுகிறார்கள்.
என்.எல்.சி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.7,146 கோடி வருமானம் ஈட்டும் நவரத்னா நிறுவனமான வளர்ந்து நிற்பதற்கு அடிப்படைக் காரணம் நெய்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள், தங்களின் தாயாக நினைத்த நிலங்களை நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காகக் கொடுத்ததுதான். தங்களுக்கு உணவு படைத்த நிலங்களை அவர்கள் முழுமனதுடன் தாரை வார்த்ததற்குக் காரணம், அங்கு அமையும் நிலக்கரி நிறுவனம் தங்களின் வாரிசுகளுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் என்று உறுதியாக நம்பியதுதான். ஆனால், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்காமல் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களை முறைகேடாகப் பணிகளில் திணிப்பதை அனுமதிக்க முடியாது. என்.எல்.சி நிறுவனம் அமைவதற்காக தியாகம் செய்த உள்ளூர் மக்களுக்கு நிர்வாகம் துரோகம் இழைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வேடிக்கை பார்க்காது.
என்.எல்.சி நிறுவனத்தின் அதிகாரிகள் நியமனத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். என்.எல்.சி நிறுவன அதிகாரிகள் பணிகளில் 50 விழுக்காடும், தொழிலாளர் பணியிடங்கள் முழுவதும் உள்ளூர் மக்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டியலை ரத்து செய்துவிட்டு, தமிழர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி புதிய தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து, அதனடிப்படையில் தகுதியானோரை நேர்காணலுக்கு அழைக்க வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் இதைச் செய்ய மறுத்தால், பாதிக்கப்பட்ட மக்களையும், மாணவர்களையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என்று எச்சரிக்கிறேன்''.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago