மத்திய பட்ஜெட் 2021: கோவை தொழில்துறையினரின் வரவேற்பும், அதிருப்தியும்

By க.சக்திவேல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கோவையைச் சேர்ந்த தொழில்துறையினர் வரவேற்பும், அதிருப்தியும் கலந்த தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா):

மூலப்பொருட்களின் விலையேற்றப் பிரச்சினையை சமாளிக்க இரும்புப் பொருட்கள், ஸ்கிராப், செம்பு ஸ்கிராப் ஆகியவற்றுக்கு சுங்க வரியை குறைக்கும் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு போன்ற நேரடியான சலுகைகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கரோனா கால பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்யுமாறு கேட்டிருந்தோம். அதற்கு ஏதும் அறிவிப்பு இல்லை.

6 கோடி குறு, சிறு நிறுவனங்கள் இருப்பதாக அரசு எண்ணிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கைக்கு ரூ.15,700 கோடி உதவி என்பது சொற்ப எண்ணிக்கைதான். பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிக்க வேண்டும்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர்எம்.வி.ரமேஷ்பாபு:

இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் ஸ்டீலுக்கான சுங்க வரி 12.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைப்பு, உலோகங்கள் மறுசுழற்சியாளர்களுக்கான இறக்குமதி தீர்வை வரும் 2022 மார்ச் 31 வரை விலக்கு, தாமிர ஸ்கிராப்புக்கான இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு, எம்எஸ்எம்இ துறைசார்ந்த தொழில் நிறுவனங்களின் கடன் தொகை சார்ந்த வழக்குகளை விரைந்து தீர்வு காண உதவுதல், தனியார் வாகனங்களுக்கு 20 ஆண்டு காலமும், வணிக ரீதியான வாகனங்களுக்கு 15 ஆண்டு காலமும் சாலையில் இயங்குவதற்கான புதிய கொள்கை ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின்(கோப்மா) தலைவர் கே.மணிராஜ்:

அரசு வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, உற்பத்தி துறை மேம்பாட்டுக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு, தமிழகத்தில் சாலை வசதி மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ததை வரவேற்கிறோம்.

குறுந்தொழில்கள், மோட்டார் பம்புசெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. கடந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்ட 20 சதவீத இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும், உள்நாட்டு உற்பத்திக்கான தேவைகள் மீதியை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் எனும் குறுந்தொழில் முனைவோரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக்:

சொட்டு நீர் பாசன மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, ஜல் ஜீவன் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது, வீட்டு கடன்களுக்கான மானியம் உயர்த்தியிருப்பது போன்ற அறிவிப்புகள் பம்புசெட்டு நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவித்த அவசர கால கடன் (ECLGS) மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்தோம். இதைப் பற்றிய அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின்(காட்மா) தலைவர் சிவக்குமார்:

வரும் காலங்களில் ஜிஎஸ்டி கணக்கு சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்படும், மூலப்பொருட்களுக்கான சுங்கவரி 7.50 சதவீதமாக குறைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம். மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி, குறைப்பதற்கான விரிவான அறிவிப்புகள் இல்லாதது, தனிநபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

வங்கித்துறைக்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.20 ஆயிரம் கோடி அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது, இதுவரை வங்கிகளால் எந்த உதவியும் கிடைக்காத குறுந்தொழில் முனைவோருக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்)தலைவர் ஜே.ஜேம்ஸ்:

குறு, சிறு தொழில்களுக்கு உதவிடும் வகையில் அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. குறைந்த வட்டியில் குறுந்தொழில் முனைவோருக்கு தனி கடன் திட்டம் கேட்டிருந்தோம்.

அது சம்பந்தமான அறிவிப்பு இல்லை. குறுந்தொழில்களுக்கு உதவிகரமாக இருக்கும் பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி, மின்சார வாரியம் தனியார்மயமாக்கல் அறிவிப்பால் வரும் காலத்தில் குறுந்தொழில்களுக்கு கடன்கள் கிடைப்பது அரிதாகிவிடும். அரசிடம் மின்சார வாரியம் இருப்பதால் குறுந்தொழில்களுக்கு மின்சார சலுகைகள் கிடைத்து வருகிறது. தனியார்மயமனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன்:

இதுவரை இறக்குமதி வரி ஏதும் விதிக்கப்படாத பருத்தி மற்றும் கழிவுப் பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரியானது பருத்தியை சார்ந்துள்ள ஒட்டுமொத்த ஜவுளித்துறைக்கும் பேரிடியாக விழுந்துள்ளது.

அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். செயற்கை இழை ஜவுளித்துறையின் போட்டி திறனை வலுவூட்டும் வகையில் ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதில், ஜவுளித்துறைக்கு ரூ.10,683 கோடி ஒதுக்கியுள்ளது பாராட்டத்தக்கது.

இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் பிரபு தாமோதரன்: 3 ஆண்டுகளில் 7 ஒருங்கிணைந்த பெரிய ஜவுளி பூங்காக்கள் அமைப்பது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஏற்கெனவே, வலுவான கட்டமைப்பு கொண்டுள்ள தமிழக ஜவுளித்துறை, அதில் இரண்டு மித்ரா பூங்காக்களை நிறுவ முயற்சி எடுக்க வேண்டும். இந்த முயற்சியின் மூலம், எஸ்எம்இ ஜவுளி நிறுவனங்கள் புது முதலீடுகளை இந்த பொதுகட்டமைப்பில் ஏற்படுத்தி, ஜவுளித்துறையின் முக்கிய தேவையான போட்டித்திறனுடன் கூடிய ஆலைகளை நிறுவலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்