கொஞ்சம் மகிழ்ச்சி மற்றும் நிறைய கவலைகளைத் தரும் அறிவிப்புகளின் கலவையாக மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை அமைந்திருக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் 3,500 கி.மீ. நீளத்திற்குத் தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு, மதுரை- கொல்லம் பொருளாதார வழித்தடம், சென்னை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த பல்நோக்குக் கடல் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஆனால் இத்திட்டங்கள் மதுரை எய்ம்ஸ் போன்று ஆகிவிடாமல், அறிவித்தபடியே விரைந்து செயல்படுத்தப்படுவது அவசியமாகும்.
தமிழகத்திற்கான திட்டங்களைத் தாண்டி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நீடிக்கும், புதிதாக ஒரு கோடி பேருக்கு உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்பு, சாலையோர வியாபாரிகளுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்துதல் போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருக்கின்றன.
» சுயசார்பு முழக்கத்தில் அந்நிய முதலீட்டுக்கு நாட்டை விற்பனை செய்யும் பட்ஜெட்: முத்தரசன் விமர்சனம்
8 வழிச்சாலைத் திட்டம்
அதே நேரத்தில், சேலம்- சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகும் இந்த ஆண்டே செயல்படுத்தியே தீருவோம் என்று அறிவித்திருப்பது சரியானதல்ல. மேலும், மின்பகிர்மானத்தை மொத்தமாகத் தனியாருக்குத் திறந்து விடுவது, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74% அளவுக்கு அதிகரித்திருப்பது, பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பது போன்றவை கவலையை ஏற்படுத்துகின்றன. அதிலும் லாபத்தில் இயங்கி வருவதோடு, அரசுக்கே பல நேரங்களில் பேருதவியாகச் செயல்படும் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியி.ன் பங்குகளை விற்பதில் அரசு உறுதியாக இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
தனி நபர் வருமான வரிச் சலுகை
இதேபோன்று மின்பகிர்மானத்தைத் தனியாருக்கு தருவது அரசு நிறுவனங்களை வீழ்த்துவதோடு, விவசாயத்திற்கான இலவச மின்சாரம், வீட்டு மின் கட்டணத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பறித்துவிடும். நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தனி நபர் வருமானவரிச் சலுகை தொடர்பான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 75 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இந்த வயது வரம்பு 65 வயது ஆக இருப்பதே சரியானதாக இருக்கும்.
ஜிஎஸ்டி அமலாக்கம், கரோனா பாதிப்பு ஆகியவற்றால் மோசமான பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை குறைவானதாக இருக்கிறது. இவைதவிர வேளாண்மைக்கும், நேரடி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும் போதுமான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது. இதை எல்லாம் சரி செய்யக்கூடிய அறிவிப்புகளை பட்ஜெட் தொடர்பான விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது நிதியமைச்சர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago