எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அதுகுறித்து இன்றுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் மேலும் ஒரு முறை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. கடந்த ஜனவரி 20-ம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
» தூத்துக்குடியில் எஸ்.ஐ. மீது சரக்கு வாகனம் மோதிக் கொலை: மதுபோதை நபரின் கொடூரச் செயல்
» மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட மத்திய அரசு, 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது ஆளுநரே முடிவெடுக்கலாம்; அடுத்த 4 நாட்களுக்குள் இதுபற்றி ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது. அதற்கு அடுத்த நாள் பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25-ம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்; உச்ச நீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28-ம் தேதிக்குள் ஆளுநர் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை; அதற்கான காரணத்தையும் ஆளுநர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தத் தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும்.
பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் இவ்வளவு கால தாமதம் தேவையில்லை. காரணம், இந்த விஷயத்தில் இருந்த சர்ச்சைகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்த்துவிட்டது. பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களும் வாழ்நாள் தண்டனைக் காலத்தை இரு மடங்குக்கும் கூடுதலான காலத்தைச் சிறையில் கழித்துவிட்டதால், அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரைத் தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
அதன்பின் இரு ஆண்டுகளைக் கடந்தும் அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காததை எதிர்த்துதான் பேரறிவாளன் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது ராஜீவ் கொலைச் சதி குறித்து நடைபெற்று வரும் பல்முனை கண்காணிப்புக் குழுவின் (எம்.டி.எம்.ஏ) விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த பிறகுதான் இதுகுறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், எம்.டி.எம்.ஏ விசாரணை அறிக்கைக்கும், 7 தமிழர் விடுதலைக்கும் தொடர்பில்லை என்றும், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என்றும் கூறிவிட்டது.
அதன்படி பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு மணி நேரத்தில் ஆளுநர் எளிதாக முடிவெடுக்க இயலும். ஆனாலும், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, ஒரு வாரம் கழித்து கெடு முடியும் நாளில், தமிழக ஆளுநரின் செயலாளர் டெல்லி சென்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசியுள்ளார். 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டு 875 நாட்கள் கடந்துவிட்டன.
இத்தனை நாட்களாக நடத்தாத எந்த சட்ட ஆலோசனையை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநரின் செயலர் நடத்தினார்? எனத் தெரியவில்லை. இவை அனைத்தும் பேரறிவாளன் விடுதலையை தாமதப்படுத்தும் செயல் என்பதைத் தவிர வேறல்ல. ஆளுநரின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பிவைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
7 தமிழர் விடுதலை குறித்த உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும். 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடி, தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை இழந்துவிட்ட 7 தமிழர்களின் விடுதலையை இனியும் தாமதிப்பது சரியல்ல.
எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்குத் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago