ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் பெய்த கனமழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 11.43 லட்சம் விவசாயப் பெருமக்களுக்கு, 1,116.97 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
''தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘நிவர்’ புயலானது கடந்த ஆண்டு நவம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு ‘புரெவி’ புயலின் தாக்கத்திற்கு உள்ளானது.
தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களின்போது, மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்கள் கரையைக் கடக்கும்போது வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையின் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம், சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பல உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இதுவன்றி, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனது அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக, புயல் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் இயல்பு நிலை உடனடியாக திரும்பியது.
‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க 641.83 கோடி ரூபாயும், நிரந்தரமாகச் சீரமைக்க 3,108.55 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 3,750.38 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. மேலும், ‘புரெவி’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க 485 கோடி ரூபாயும், நிரந்தரமாகச் சீரமைக்க 1,029 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 1,514 கோடி ரூபாய் தேவைப்படும் எனத் தெரிவித்து, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 8.12.2020 மற்றும் 9.12.2020 ஆகிய நாட்களில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்ததுபோல், ‘புரெவி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு 28.12.2020 முதல் 30.12.2020 வரை ஆய்வு செய்தது. முன்னதாக, ‘நிவர்’ புயலின் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், 80 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களின் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், வேளாண் பெருமக்கள் அதிக உற்பத்தி செலவு செய்து, பேரிடரால் பெரும்பாதிப்பு அடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வழங்க வேண்டிய இடுபொருள் நிவாரணத் தொகையினைக் காட்டிலும் கூடுதலாக, மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000/- ரூபாய்.
மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு 10,000/- ரூபாயும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000/- ரூபாய் என உயர்த்தி வழங்கவும், பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ள நிலையில், 2 ஹெக்டேர் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் நான் ஆணையிட்டேன்.
அந்த ஆணையின் அடிப்படையில், பாதிப்பிற்குள்ளான 2.96 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 598.05 கோடி ரூபாய் நிவாரணமாக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இதுவரை 543.10 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, விவசாயிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், நடப்பு ஜனவரி மாதத்தில் 16.01.2021 வரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவான 12.3 மில்லி மீட்டரை விட மிக அதிகமாக 136.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 1108 % கூடுதலானது ஆகும். குறிப்பாக தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், முன் எப்பொழுதும் இல்லாத நிகழ்வாக, 24 மணி நேரத்தில், 9 செ.மீ. முதல் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பெய்த அதிகப்படியான மழையினைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த அமைச்சர்களுக்கு நான் உத்தரவிட்டதோடு, மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்களையும் தொடர்புடைய மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பிவைத்தேன். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, உணவு, குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க நான் ஏற்கெனவே ஆணையிட்டதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உயிர்ச் சேதம் மற்றும் கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைத் தொடர்ந்து, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்கவும், பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் 734.49 கோடி ரூபாயும், கட்டமைப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்க 166.33 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 900.82 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், 2021, ஜனவரி மாதத்தில் பெய்த கனமழை மற்றும் மிக கனமழையின் காரணமாக, அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்களும், இதர பயிர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட வயல்களில் போர்க்கால அடிப்படையில், கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்வதற்கு வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நான் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தேன்.
இதன் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் பெய்த கனமழை மற்றும் மிக கனமழையின் காரணமாக, 6,62,689.29 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 18,644.94 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும், ஆக மொத்தம் 6,81,334.23 ஹெக்டேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனைக் காக்கும் எனது தலைமையிலான அரசு, ஏற்கெனவே நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதி வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்க வேண்டிய நிவாரணத் தொகையினைக் காட்டிலும், உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையினை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையிலேயே,
* மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான 13,500/- ரூபாய் என்பதை 20,000/- ரூபாயாக உயர்த்தியும்,
* மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7,410/- ரூபாய் என்பதை, 10,000/- ரூபாயாக உயர்த்தியும்,
* பல்லாண்டு கால பயிர்களுக்கு (Perennial Crops) இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18,000/- ரூபாய் என்பதை, 25,000/- ரூபாயாக உயர்த்தியும் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இதன்படி, ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் பெய்த கனமழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 11.43 லட்சம் விவசாய பெருமக்களுக்கு, 1,116.97 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி வழங்கப்படும். இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அதே சமயம், மத்தியக் குழுவும் வரும் பிப்ரவரி மாதம் 3, 4 மற்றும் 5 தேதிகளில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களைப் பார்வையிடவும் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago