காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் 62 ஆண்டுகளுக்கு பிறகு நிறை வேறுவதால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
வெள்ளக்காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 40 டி.எம்.சி. க்கு மேல் உபரி நீர் கடலில் கலக்கிறது. இந்த நீரை கால்வாய் மூலம் புதுக்கோட்டை, ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கொண்டு வர, அக்காலத்திலேயே புதுக்கோட்டை தொண்டைமான், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் முயற்சி செய்தனர்.
1933-ல் புதுக்கோட்டை நிர்வாக அலு வலராக இருந்த டாட்டன் ஹாமின் முயற்சி யால், மாயனுாரில் தென்துறை கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கால் வாய் வெட்டும் பணி ஏனோ பாதியில் நிறுத்தப்பட்டது.
1954-ல் இத்திட்டம் குறித்து புதுக்கோட்டை எம்.பி. முத்துச்சாமி வல்லத்தரசு நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து 1958-ல் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால் திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.
2008-ல் ரூ.3,290 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனுாரில் காவிரி நதியில் கதவணையும், அங்கிருந்து 255.60 கி.மீ.க்கு கால்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இந்த கால்வாய் கதவணையில் இருந்து 70 கி.மீ. தென்கிழக்கு திசையில் செல்லும். அதன் பின் வலது பக்கம் திரும்பி தென்மேற்கில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புதுப்பட்டி அருகே குண்டாறில் இணையும். இந்த கால்வாய் தொடக்கத்தில் 20 மீ., அகலம், 5 மீ. ஆழத்தில் இருக்கும். முடிவில் 6.4 மீ., அகலம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது. மேலும் 9 ரயில்வே பாலங்கள் உட்பட 144 பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு,கொண்டாறு, வெள்ளாறு, பாம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை, குண்டாறு என 15 நதிகள் இணைக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 எக்டேர் (8.30 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். முதற் கட்டமாக 2008 ஜூனில் ரூ.234 கோடியில் மாயனுார் கதவணை அமைக்கப்பட்டு, 2014 ஜூன் 25-ல் திறக்கப்பட்டது. இந்த அணை மூலம் 1.05 டி.எம்.சி. நீரை சேமிக்க முடியும். வெள்ள காலங்களில் 4.83 லட்சம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். கதவணை திறந்தபிறகு கால்வாய் கட்டும் பணி தொடங்கவில்லை.
அதிக நிதி தேவைப்பட்டதால் மத்திய அரசிடம் நிதி கோரியும் வரவில்லை. இதையடுத்து தமிழக அரசே நிதி ஒதுக்கி காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் போராடி வந்தனர். இந்நிலையில் இத் திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடி யில் செயல் படுத்தப் போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக ரூ.700 கோடியை அரசு ஒதுக்கியது. புதுக் கோட் டை, கரூர் மாவட்டங்களில் கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் 11 கி.மீ.க்கு கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ள ரூ. 331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை குன் னத்தூரில் இருந்து கவிநாடு வெள்ளாறு வரை 52 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது:
காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்தினால் வறட்சியை தடுக்கலாம். கடந்த காலங்களை போல் அறிவிப்போடு போகாமல், மத்திய அரசு நிதி உதவி அளித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும். நீர் பங்கீட்டு முறையையும் வரையறுக்க வேண்டும் என்று கூறினார்.
பயன்பெறும் வட்டங்கள்
கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம்.
திருச்சி : திருச்சி, ஸ்ரீரங்கம்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்துார், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில்.
சிவகங்கை : காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்தூர், சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி.
ராமநாதபுரம் : திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார், ராமநாதபுரம்.
விருதுநகர்: திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை தாலுகாக்கள்.
துாத்துக்குடி: விளாத்திக்குளம் தாலுகா.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago