தென்னாற்காடு மாவட்டத்தில் இணைந்திருந்த விழுப்புரத்தை கடந்த 1993-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரித்து தமிழக அரசு அறிவித்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு பூந்தோட்டம் ஏரி தேர்வு செய்யப்பட்டது. அதற்காக 118.54 ஏக்கர் ஏரி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகம், புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் போன்றவை அமைக்கப்பட்டது.
பெருந் திட்ட வளாகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது. ஆட்சியர். காவல் கண்காணிப்பாளர். வனத்துறை அலுவலர், மாவட்ட நீதிபதி, திட்ட அலுவலர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களின் குடியிருப்புகள் மற்றும் அரசுப் பணியாளர்களின் குடியிருப்புகள் கட்டப்பட்டன. தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் அரசு அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம், பேருந்து நிலையம் உள்ளிட்டவை ஒரே பகுதியில் அடுத்தடுத்து அமைந்தது விழுப்புரத்தில் தான். அதாவது பூந்தோட்டம் ஏரிப் பகுதியில்தான்...
எவ்வளவு நேர்த்தியாக திட்டமிட்டு கட்டியிருந்தாலும் கட்டப்பட்ட இடம் ஏரி என்பதால், இயற்கையின் இன்னல்களை இன்று வரை எதிர் கொண்டு வருகிறோம். மழைக் காலங்களில் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் வெள்ள நீர் இந்த தவறுக்கு சாட்சியாக கண் முன்னே நிற்கிறது. இயற்கையாகவே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவாகவும், வடக்கி லிருந்து தெற்கு நோக்கி சரிவாகவும் இப்பகுதி அமைந்துள்ளது. இதனால், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் வருகின்ற மழைத் தண்ணீரை கோலியனுாரான் வாய்க்காலுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சியை பொதுப்பணித்துறை எடுக்காததால் இங்கிருந்து போகும் நீர் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து தேங்கி நிற்கிறது. பேருந்துகள் தண்ணீரில் நீச்சலடிக்கின்றன.
விழுப்புரம் நகரத்திற்கு கொண்டு வரப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தில் மாவட்ட பெருந்திட்ட வளாகம் இணைக்கப்படவில்லை. அரசு அலுவலர்களின் குடியிருப்பைச் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இக்கழிவு நீரை நகராட்சியின் பாதாள சாக்கடையில் இணைக்க வேண்டும். ஆனால், நகராட்சி அதை செய்யவில்லை. இதனால் கொசு உற்பத்தி நிலையமாக மாறி விட்டது விழுப்புரம் பெருந்திட்ட வளாகம்.‘தேங்கி நிற்கும் மழை நீரால் டெங்கு கொசு உற்பத்தியாகும்; அதை தேங்க விடக்கூடாது’ எனச் சொல்லும் மாவட்ட நிர்வாகமே சுற்றி நிற்கும் நெடி ஏறிய நாள்பட்ட மழை நீருக்கு நடுவே பணிகளை செய்து வருவது கொடுமை.
மாவட்ட நிர்வாகத்தினரிடம் இதுபற்றி கேட்டதற்கு, “இப்பணியைச் செய்ய ரூ. 6 கோடி ஆகும். இதை பொதுப்பணித் துறையினர் செய்ய முடியாது. நகராட்சி நிர்வாகமே செய்ய வேண்டும்” என்கின்றனர். மாவட்ட நிர்வாகம் செய்ய அறிவுறுத்தினால் நகராட்சி செய்யும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பெருந்திட்ட வளாகப் பிரச்சினை குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவனிடம் கேட்டதற்கு, அவர் கூறியது:
விழுப்புரம் நகருக்கு நீர்வளத்தைத் தந்து கொண்டிருந்த மிகப் பிரம்மாண்ட மான ஏரி பூந்தோட்டம் (118.54ஏக்கர்) ஏரியாகும். தென்பெண்ணை ஆற்றில் இருந்து கோலியனூரான் கால்வாய் வழியாகப் பூந்தோட்டம் ஏரிக்கு தண்ணீர் வந்தடைந்தது. விழுப்புரத்தின் மிகச்சிறந்த நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் நிலத்தடி நீராதாரமாகவும் இந்த ஏரி விளங்கியது.
1990-ம் ஆண்டின் தொடக்கத்தில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட போது, அப்போதைய விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரும் மூத்தத் தமிழறிஞருமான கொடுமுடி சண்முகன் ‘இது தடுக்கப்பட வேண்டும்’ என விரும்பினார். ஆனால் அப்போது போதிய விழிப்புணர்வு இல்லாததால் மிகப்பெரிய அளவிலான எந்த எதிர்ப்பும் எழவில்லை.
பூந்தோட்டம் ஏரி, நீர்ப்பிடிப்பு பகுதி இல்லை எனும் முடிவுக்கு ஆட்சியாளர்கள் எப்படி வந்தார்கள் எனத் தெரியவில்லை. ஓரிரு நாட்கள் மழை பெய்தால் புதிய பேருந்து நிலையத்தைத் தண்ணீர் சூழ்ந்து கொள்வதை, தண்ணீர் அதன் தடத்தைத் தேடுவதை இப்போதும் நாம் பார்க்கிறோம். நம் முன்னோர் வெட்டுவித்த பூந்தோட்டம் ஏரியின் இழப்புதான் நகரின் இப்போதைய குடிநீர் தட்டுப்பாடாகும். மிகப்பெரிய வரலாற்றுப் பிழை இது. இதற்கானப் பலனை விழுப்புரம் இன்று அனுபவிக்கிறது. இன்னமும் அனுபவிக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago