மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குக் கட்டிய கோயிலை இன்று முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குண்ணத்தூர் அருகே அதிமுகவின் ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்காகக் கோயில் கட்டியுள்ளனர். இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்க்கவும், வணங்கவும் வரும் பொதுமக்கள் அமரவும், ஒய்வெடுக்கவும் சுமார் 12 ஏக்கர் சுற்றளவுடன் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு 7 அடி அளவில் முழு நீள வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் திருவிழா இன்று மதியம் நடந்தது.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோயிலைத் திறந்து வைத்து பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
''எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்கிற காலத்தில் மக்களுக்கு என்ன செய்கிறார்களோ, அந்தச் செயலே மக்கள் மனதில் புகழாக நிலைத்து நிற்கிறது.
அந்த அடிப்படையில் இந்த இரு பெரும் தலைவர்களும் தாங்கள் வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தார்கள். அவர்கள் செய்த சேவைகள், பணிகள், என்றென்றும் மக்களால் மறக்க முடியாத திட்டங்களாகும். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. அதிமுகவினரும், மக்களும்தான் அவர்களுக்குப் பிள்ளைகள். அவர்கள் தங்களுடைய மக்களுக்காக வாழவில்லை. பொதுமக்களுக்காக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன், மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைக்கப் பாடுபட வேண்டும். அதுதான் அதிமுகவினருடைய எண்ணமும், வேட்கையுமாக இருக்க வேண்டும். ஜெயலலிதா இதே மதுரை மண்ணில் 100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றார். அவரது சபதத்தை நிறைவேற்ற உழைப்போம். வெற்றி பெறுவோம்.
எம்ஜிஆர் சிறு வயதிலே தான் பெற்ற கஷ்டத்தை இந்த மண்ணில் பிறந்த குழுந்தைகள் படக்கூடாது என்பதற்காக சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதே வழியில் வந்த ஜெயலிதாவும் தன் வாழ்நாள் முழவதும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றினார். சைக்கிள், நோட்டு, புத்தகம் முதல் அறிவுபூர்வமான கணிணி வழங்கி மக்கள் பெற்றெடுத்த குழந்தைகளைத் தான் பெற்றெடுத்த குழந்கைகளாகக் கருதி ஆட்சி செய்தனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்ட ஒரே கட்சி அதிமுகதான். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்திப் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
நம்மை ஆளாக்கிய அந்தத் தலைவர்கள், இந்த நாடு செழிக்க, வளர தங்களையே அர்ப்பணித்தவர்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், புகழ் சேர்க்கும் வகையில், அவர்கள் விட்டுச் சென்ற நற்பணிகளைத் தொடர வேண்டும். அவர்கள் இருவரும் வாழ்ந்த காலம் பொற்காலம். இன்று வரை அதிமுக 30 ஆண்டுகாலம் இந்த மண்ணிலே ஆட்சி செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருமித்த கருத்தோடு தேர்தல் பணியாற்றி மீண்டும் அதிமுக ஆட்சி தொடர அதிமுகவினர் உழைக்க வேண்டும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,
”தீய சக்திகளின் சவால்களை முறியடித்து ஜெயலலிதாவின் நினைவு ஆலயம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு திருக்கோயில் கட்டித் திறக்கப்பட்டது. கேட்டதைக் கேட்டால் கொடுக்கக்கூடிய தெய்வங்கள் பல உண்டு. ஆனால், கேட்காமலே கொடுத்த தெய்வங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்களுக்காக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோயில் கட்டியுள்ளார் என்று நினைக்கிறபோது அதிமுகவுக்குப் பெருமையாக உள்ளது.
தெய்வ சக்தியையும், மக்கள் சக்தியையும் நம்பும் இயக்கம் அதிமுக. ஆனால், சிலர் தெய்வங்களை இழிவுபடுத்துவார்கள். தேர்தல் நேரத்தில் கொண்டாடுவதுபோல் நடிப்பார்கள். மக்களும், அந்த தெய்வங்களும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைபிடிக்க வடக்கே இருந்து ஆட்களை பிடித்து வந்தார்கள். இப்போது வேல் பிடிக்கிறார்கள். ஆள் பிடித்தாலும், வேல் பிடித்தாலும் தமிழகத்தில் அவர்கள் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது. அதிமுக ஆட்சிக்கு எத்தனை இடையூறு வந்தாலும் அதனை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் தடுத்து நிறுத்துவான்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக நிகழ்த்திய சாதனை திட்டங்கள் அனைத்து இல்லங்களையும் சென்றடைந்துள்ளன. தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாகவும், மக்கள் மகிழ்ச்சியாகவும் வாழுகிறார்கள். இதைச் சீர்குலைக்க ஸ்டாலின் தினமும் புதுப்புது அவதாரங்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், எந்த அவதாரம் எடுத்தாலும் மக்கள் மனதை ஈர்க்க முடியாது. திமுகவின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான்.
கடந்த 10 ஆண்டாக கொள்ளையடிக்க முடியாமல் அவர்கள் கைகள் நமத்துப் போய் உள்ளன. தப்பித் தவறி அவர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் தங்கள் வழக்கமான கொள்கையான கொள்ளையடிப்பதைத் தொடர்வார்கள். ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். திமுகவில் திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதையே சமாளிக்க முடியாமல் திணறுகிறார்”.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, மாவட்டச் செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமாரை பாராட்டிய முதல்வர், துணை முதல்வர்
முதல்வர் கே.பழனிசாமி பேசுகையில், ‘‘ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுடைய வாழ்வாதாரம் உயரப் பாடுபட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களுக்குப் பாரம்பரிய நகரான மதுரையில் ஆலயம் அமைத்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இவர்கள் இந்த மண்ணில் தோன்றி வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர்களுக்கு ஆலயம் எழுப்பியது அற்புதமான நிகழ்வு’’ என்றார்.
அதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘அதிமுகவுக்கு பெருமைப் சேர்க்கும் வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோயில் கட்டியுள்ளார். அவரை அதிமுக மனதாரப் பாராட்டுகிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago