ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு; ரோகிணி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தாமதிக்கப்பட்ட நீதி எப்படி மறுக்கப்பட்ட நீதியோ, அதேபோல் தாமதிக்கப்படும் சமூக நீதியும் மறுக்கப்படும் சமூக நீதிதான். நீதிபதி ரோகிணி ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகும் நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பது சுமார் 2000 சாதிகளுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீட்டில், தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ரோகிணி ஆணையத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று வரை ஆணையத்தின் பரிந்துரை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மிகவும் மேன்மையானது. ஆனால், ஆணையத்தின் அறிக்கையைத் தாக்கல் செய்வதில் காட்டப்படும் தாமதம்தான் மிகவும் வருத்தமளிக்கிறது. ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதுதான்.

2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையம் அடுத்த 3 மாதங்களில், அதாவது 2018ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிக்குள் அதன் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

அதே நேரத்தில், நீதியரசர் ரோகிணி ஆணையம் கடந்த சில ஆண்டுகளில் செய்துள்ள பணிகள் மிகவும் சிறப்பானவை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் எந்தெந்தச் சமுதாயங்கள் பயனடைந்தன என்பது குறித்து ஆய்வு செய்த ரோகிணி ஆணையம், விரிவான புள்ளிவிவரங்களுடன் ஆய்வறிக்கை ஒன்றை 2018ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 2,633 சாதிகள் உள்ளன. இவற்றில் வெறும் 10 சாதிகள் மட்டுமே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் 97.34 விழுக்காட்டை 656 சாதிகள் கைப்பற்றிக் கொள்ளும் நிலையில் மீதமுள்ள 1,977 சாதிகளுக்கு 2.66% மட்டுமே கிடைக்கின்றன. அந்த இட ஒதுக்கீட்டையும் கூட 994 சாதிகள் பகிர்ந்துகொள்ளும் நிலையில், 983 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இந்த உண்மைகள் அனைத்தையும் நீதிபதி ரோகிணி ஆணையம் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு ஒருசில தரப்பினரால் மட்டுமே அனுபவிக்கப்படுவதை உறுதி செய்த ரோகிணி ஆணையம், அனைவருக்கும் சமூக நீதி கிடைப்பதற்கும் சரியான தீர்வை முன்வைத்துள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை 3 தொகுப்புகளாகப் பிரித்து இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத சாதிகளுக்கு 10%, ஓரளவு அனுபவித்த சாதிகளுக்கு 10%, அதிகமாக அனுபவித்த சமூகங்களுக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்பதுதான் ரோகிணி ஆணையம் முன்வைத்துள்ள தீர்வு ஆகும். இந்தத் தீர்வு செயல்படுத்தப்படும் பட்சத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே சமநிலையான போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 27% இட ஒதுக்கீட்டில் தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்யலாம் என்று ரோகிணி ஆணையம் முதலில் பரிந்துரைத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், இந்த இட ஒதுக்கீட்டால் இதுவரை பயன் பெறாத சமூகங்களுக்குச் சமூக நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

தாமதிக்கப்பட்ட நீதி எப்படி மறுக்கப்பட்ட நீதியோ, அதேபோல் தாமதிக்கப்படும் சமூக நீதியும் மறுக்கப்படும் சமூக நீதிதான். நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டபோது, அதன் பதவிக்காலம் 3 மாதங்கள் மட்டும்தான். ஆனால், அதன் பதவிக் காலத்தைவிட 13 மடங்கு காலம் கடந்துவிட்டது. இன்று வரை மொத்தம் 9 முறை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகும் நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பது என்பது சுமார் 2000 சாதிகளுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம் ஆகும்.

எனவே, நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலத்தை இனியும் நீட்டிக்கக் கூடாது. ஆணையத்தின் பரிந்துரை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்து அடுத்த சில நாட்களில் தாக்கல் செய்யும்படி நீதிபதி ரோகிணி ஆணையத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்