காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று உறுதிபடக் கூறி, எதிர்க்கட்சிகளின் பிரித்தாளும் தன்மைக்கு முடிவுரை எழுதிவிட்டார் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறும் அதிமுகவின் ஆட்சி என்பது டில்லியில் உள்ள மத்திய பாஜகவுக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் கொத்தடிமைபோல் நடந்து, மாநில உரிமைகளை அறவே பறிகொடுத்து, வெளி வேடத்திற்குத் தாங்களும் ஏதோ திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக இரட்டை வேடம் போடும் ஓர் ஆட்சி என்பது - ‘நீட்’ தேர்வு தொடங்கி, விவசாயிகள் விரோத மூன்று (சர்வாதிகார) சட்டங்கள்வரை எடுத்துள்ள நிலைப்பாட்டின்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பாடிய பாட்டு இவர்களுக்கே முழுப் பொருத்தமாக அமைந்துள்ளதுபோல இன்றுள்ள மிச்ச சொச்ச மாதங்களுக்கான காவி ஆட்சி எடப்பாடியார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
‘எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
உத்தமர் போலவே நடிக்கிறார்
பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி’’
என்ற வரிகளை நினைவூட்டுவதாகவே உள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு இதுபோல் ஒரு நல்ல வாய்ப்பு எந்த மாநிலத்திலும் கிட்டியதில்லை. ஆட்சிக்கு வராமலேயே அவர்கள் மிரட்டியும், உருட்டியும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்கிறார்கள்.
எந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதற்குக் கைதூக்கும் கை காட்டிகளைப்போல் நிறைவேற்ற துணை போகிறது - தமிழக அதிமுக அரசு.
மத்தியில் ஆளுவோரிடம் உறவுடன் இருப்பது - கூட்டாட்சி தத்துவத்தின்படி தவறல்ல. ஆனால், மாநில மக்களின் உரிமைகளை அடகு வைத்துவிட்டார்கள் என்பதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு, மூன்று விவசாய சட்டங்களான மாநில உரிமைகளை முற்றிலும் பறிமுதல் செய்த கபளீகரச் சட்டங்கள்.
எதிர்க்கட்சிகள்மீது வழக்குகள்
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் மீதெல்லாம் வழக்குகள் - அவை கொலை முயற்சி வழக்கு போன்ற தவறான அதிகார துஷ்பிரயோக அழிவழக்குகள்.‘‘கிராம சபை அதுவும் குடியரசு நாளில்கூட கூட்டக் கூடாது.
கரோனா தொற்றுப் பரவும் அபாயம் காரணமாக’’ என்று கூறிவிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் பேரைத் திரட்டி கூட்டநெரிசலில் ஒருவர் உயிரிழக்கும் அளவுக்குக் கூட்டத்தைக் கூட்டுவது இரட்டைக் குரல், இரட்டை நிலைப்பாடு அல்லவா.
காரணம் வெளிப்படை, மடியில் கனம், எனவே மத்திய ஆட்சிக்கு, அதன் கண் ஜாடையைப் பார்த்தே சரணம் பாடும்‘’ வேதனைமிக்க நிலை.
அம்மா பெயரைச் சொல்லிக்கொண்டு சரணாகதி அடையலாமா?
‘அம்மா ஆட்சி’, ‘அம்மா ஆட்சி’ என்று மூச்சுக்கு முந்நூறு முறை உச்சரிக்கும் இவர்கள், தங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பார்க்கட்டும்; அந்த அம்மையார் (ஜெயலலிதா ஆட்சியில்) டில்லி சென்னைக்கு வந்ததே தவிர, அவர் சரணாகதி அடையவில்லை என்பதற்கு ‘நீட்’ தேர்வு விலக்கே ஓர் எடுத்துக்காட்டு.
தமிழ்நாட்டு மக்கள், ஆட்சி மாற்றத்தை ஆவலோடு எதிர்நோக்குகின்றனர்
உதைத்த காலுக்கு முத்தமிடுவதுபோல, ‘மிஸ்டு கால்’ கட்சியான பாஜகவோடு கூட்டணியாம். ஆனால், கூட்டணி வேறாம், கொள்கை வேறாம் விளக்கம் தருகிறார் அதிமுகவின் முதல்வர். அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர் ஸ்டாலினைப்பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்.
தமிழகம் ரூ.6 லட்சம் கோடி கடனில் உள்ளது
கடன்பட்டார் நெஞ்சம் கலங்குவதாகத் தெரியவில்லை, காரணம், போகும்போது கஜானாவைக் காலி செய்து மட்டும் போகாமல், கடனும் வைத்தால், வருகிற புதிய ஆட்சி, திமுக ஆட்சி திண்டாடட்டுமே என்ற ‘பரந்த’ மனமே!(?)
முதற்கட்ட கிராம மக்கள் சபைக் கூட்டங்களை தமிழ்நாடு எங்கும் நடத்திய திமுக தலைவர் சந்திப்புகளில் கூடியது - மக்கள் பெருந்திரள் என்ற பொங்குமாங்கடல். அடுத்தகட்ட பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஸ்டாலின்
அடுத்தகட்ட பிரச்சாரத்தை நாளை (29.1.2021) ஸ்டாலின் திருவண்ணாமலையிலிருந்து தொடங்குகிறார். இதற்குமுன்பாக அவர் மக்கள் குறைகளை மனுக்களாகப் பெற்று, அதற்கு ஒப்புகை சீட்டு வழங்கி - ஆட்சிக்கு வந்த 100 நாளில் அவற்றிற்குத் தீர்வு கண்டு, எப்படி இந்த மக்கள் நல திமுக அரசு செயல்படும் என்ற புதுமைத் திட்டத்தை அறிவித்தார்.
மக்களாட்சி மாண்பின் ஒளி திக்கெட்டும் பாய்கிறது - இதன்மூலம் திமுக கூட்டணியை சில ஊடகங்கள் துணைகொண்டு கலகலக்க வைக்கும் திட்டத்தையும் ஒரு பேட்டியின்மூலம் காலி செய்துவிட்டார் திமுக தலைவர்.
திமுக தலைமையில் வலுவான கூட்டணி, ‘வலுவுள்ள கூட்டணி - அவரவர் உரிமையை மதித்துப் போற்றும் சுயமரியாதைக் கூட்டணி எங்கள் கூட்டணி - பங்கீடுகளும், மற்றவைகளும் முறையோடு இருக்கும்‘ என்று தெளிவுபடுத்தி விட்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று உறுதிபடக் கூறி, எதிர்க்கட்சிகளின் பிரித்தாளும் தன்மைக்கு ஆப்படித்து விட்டார்.
மேலும் இப்போது நடைபெறுவது லட்சியப் போர் என்றும், தமிழ்நாட்டு மொழி, கலாச்சாரத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கையகப்படுத்த ஒருபோதும் துணை போக முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்.
குருமூர்த்தி போன்றவர்களின் கனவு ‘பொய்யாய் பழங்கதையாய்’ப் பிசுபிசுத்து விட்டது. தங்களுடைய திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்க வக்கும் வகையுமின்றி கேலி, கிண்டல்மூலம் ஊடக வெளிச்சத்தில் பிழைக்கும் நிலைதான் ஆளும் கூட்டணிக்கு உள்ள யதார்த்த நிலை.
இந்த சூழலில் இரண்டாம் கட்ட பிரச்சாரப் பயணத்தைத் திருவண்ணாமலையிலிருந்து தொடங்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தாய்க் கழகத்தின் வாழ்த்துகள்”.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago