விழுப்புரம் தடுப்பணை உடைப்பு; உறவினர்கள், பினாமிகளுக்கு டெண்டர் கொடுத்த ஆட்சியின் சீர்கேடுகளை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது: ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

அரசு கஜானா பணத்தை தனது உறவினர்களுக்கு, பினாமிகளுக்கு டெண்டர் என்ற பெயரில் அள்ளிக்கொடுத்து, தரமற்ற முறையில் தடுப்பணை கட்டி, மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்து ஊழல் செய்யும் பழனிசாமி ஆட்சியின் சீர்கேடுகளை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன, இத்தகைய தடுப்பணைகள் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

குடியரசு என்பது மக்களால்- மக்களுக்காக - மக்களுடைய அரசு என்பது போல, திமுகவும் மக்களால்-மக்களுக்காக - மக்களுடைய மாபெரும் இயக்கமாக, ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுகாலமாக, தங்கு தடையின்றி, வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

குடியரசு நாளினையொட்டி அறிவிக்கப்பட்ட விருதுகளில் பத்மஸ்ரீ விருதாளர்களில் ஒருவராக 103 வயதிலும் வேளாண் பணிகளில் ஈடுபடும் ஈரோட்டைச் சேர்ந்த மூத்த பெண்மணி பாப்பம்மாள் அம்மையாருக்கு கிடைத்திருப்பது, தமிழர்களாகிய அனைவருக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரும் செய்தி. அதிலும், அம்மையார் பாப்பம்மாள், நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் மீதும், என் மீதும், தனிப்பட்ட அன்பும் பாசமும் கொண்டவர் என்பதுடன், திமுக நடத்திய பேரணியிலும் பதாகை ஏந்தி, தள்ளாத வயதிலும், தளராத உள்ளத்துடன் நடைபோட்டவர். அம்மையாருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் ஆயத்தமாகிவிட்ட நிலையில், அவர்களின் ஒரே நம்பிக்கைக்குரியதாக இருப்பது, திமுகவின் தலைமையிலான சிறப்பான கூட்டணிதான். காரணம், ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கின்ற இயக்கம் இது.

ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களின் சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக நாட்டின் தென்கோடியிலிருந்து அழுத்தமாக ஒலித்த குரல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடத்திய போராட்டத்துக்கு, தார்மீக ஆதரவு வழங்கிய இயக்கம் திமுக.

குடியரசு நாளில் டிராக்டர் பேரணியை முன்னெடுத்த விவசாயிகள் மீது மத்திய அரசு உள்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்து அதிர்ந்து போயிருக்கிறது.

விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், அதிமுக எம்.பிக்களின் ஆதரவால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவற்றைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் குரல் ஒலிக்கிறது. தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அமைதி வழியில் போராட்டம் நடத்தியும், பேச்சுவார்த்தை என்ற பெயரில் தீர்வு ஏதும் காணாமல் இழுத்தடித்து நாடகம் நடத்தியது மத்தியில் ஆள்கின்ற பாஜக மோடி அரசு.

அதன் ஒற்றைப் பார்வையும், இறுமாப்பும்தான், குடியரசு நாளில் இந்திய ஒன்றியத்தின் தலைநகரில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு காரணமாகும். தமிழகத்திலும் நடைபெற்ற தன்னெழுச்சியான விவசாயிகளின் பேரணிகளை முடக்கும் வகையில் அதிமுக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகச் செயல்பட்டது.

இரு தரப்பிலும் அமைதியும் இணக்கமும் வேண்டும் என்பதைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்திய நிலையிலும், மத்திய அரசுத் தரப்பில் தீர்வுக்கான முயற்சிகளை விருப்பத்துடன் எடுக்கவேயில்லை. அமைதியாகப் போராடியவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் போக்கையே கடைப்பிடித்தது, வன்மத்தை வெளிப்படுத்தியது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும்.

திமுகவைப் பொறுத்தவரை, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பேரிடர் நேரத்திலும் மக்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் “ஒன்றிணைவோம் வா” என கரோனா பேரிடர் காலத்தில் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் துணை நின்றது. அண்மையில், தமிழகத்தின் 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் மக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் ‘மக்கள் கிராம சபைக் கூட்டங்களை’ நடத்தி, அவர்களின் குறைகளைச் செவிமடுத்த இயக்கம் இது.

குடியரசு நாளில் நிறைவேற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையான கிராம சபைக் கூட்டத்தை நடத்த வக்கற்ற,வகையற்ற,தெம்பற்ற, திராணியற்ற அதிமுக அரசு, கரோனாவைக் காரணம் காட்டி, நீதிமன்றத்தின் கேள்விகளிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. இந்த லட்சணத்தில், “ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் என்னாயிற்று?” என்று கேட்கிறார் முதல்வர் பழனிசாமி.

அவருடைய எடப்பாடி தொகுதி மக்களே, குவியல் குவியலாக தங்கள் குறைகளை, மனுக்களாக திமுக நடத்திய மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் வழங்கியதுடன், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். அதிமுக அரசின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கும், திமுக மீது எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கும், இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பொய்களை மூட்டை கட்டிக் கொண்டு, அதனைப் பொதுமக்களிடம் அவிழ்த்துக் கொட்டி, பரப்புரை செய்யும் பழனிசாமியை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால், ஆளுந்தரப்பினரைத் திரட்டி ஊர் ஊராகப் பரப்புரை செய்யும் முதல்வர் பழனிசாமி, கிராம சபைக் கூட்டம் என்றால் மட்டும் கரோனாவைக் காரணம் காட்டி தடை போடுகிறார். மக்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாதே! அவர்களுடைய பாதையே ஒருவழிப் பாதைதானே.

இதில், ஸ்டாலின் துண்டுச் சீட்டு இல்லாமல் என்னுடன் நேருக்கு நேர் வாதிட முடியுமா என சவடால் விடுகிறார். என் கையில் இருப்பது துண்டுச் சீட்டல்ல. இந்த ஆட்சியின் அவலட்சணங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் துருப்புச் சீட்டு என்பது சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் படித்த அதிமேதாவி “ஆபிரகாம் லிங்கன்” பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என்பது மட்டுமே அடிமை அதிமுக அரசின் ஒரே கொள்கை என்பதும், நாளொரு ஊழலும் பொழுதொரு கொள்ளையுமே அவர்களின் ஒரே நிர்வாகம் என்பதும், நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம் ஆற்றில் பழனிசாமி ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து விழுந்து வினோத்குமார் என்ற இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோலவே, 25 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தளவனூர் தடுப்பணை கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஒரு மாத கால அளவிலேயே தகர்ந்து விழுந்திருக்கிறது. முதல்வர் பழனிசாமியின் சம்பந்திக்கு டெண்டர் தரப்பட்டு கட்டப்பட்ட தடுப்பணை இது.

அரசு கஜானா பணத்தை தனது உறவினர்களுக்கு - பினாமிகளுக்கு டெண்டர் என்ற பெயரில் அள்ளிக்கொடுத்து, தரமற்ற முறையில் தடுப்பணை கட்டி, மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்து ஊழல் செய்யும் பழனிசாமி ஆட்சியின் சீர்கேடுகளை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இத்தகைய தடுப்பணைகள்.

உண்மை வெள்ளமாகப் பெருகும்போது, ஊழல் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துதான் விழும். அதை மறைக்க முடியாது என்பதால், தடுப்பணை இடிந்து விழுந்ததற்காக, சில அதிகாரிகள் மீது ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கை எடுத்து, கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது பழனிசாமி அரசு. பணம் சம்பாதிக்க பழனிசாமியின் சொந்தங்கள் - பலிகடாக்கள் அதிகாரிகளா?

‘ரயில் இன்ஜின் திருடுனவனையெல்லாம் விட்டுவிட்டு கரித்துண்டு எடுத்தவனுக்குத் தண்டனையா?’ என்று ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தில் தலைவர் எழுதிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. இன்ஜின் திருடர்களின் கொட்டமெல்லாம் இன்னும் சில மாதங்கள்தான் என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது. அதை மறைக்கத்தான், திமுகவை வசை பாடுகிறார் பழனிசாமி. அவதூறுகளை அள்ளி வீசி பரப்புரை செய்கிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சி என சேறு வாரி இறைக்கிறார்.

தன் முகத்தில் கரி பூசியிருப்பதை மறைப்பதற்காக, அடுத்தவர் முதுகில் அழுக்கு இருக்கிறது என்று சொல்வது போல இருக்கிறது பழனிசாமியின் பொய்ப் பிரச்சாரம். ஊழலுக்காக ஒரு முறை அல்ல, இரண்டு முறை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்டவர் யார் என்பதை பழனிசாமி கொஞ்சம் குனிந்து பார்த்தால் தெரிந்துவிடும்.

அவர் சட்டைப்பாக்கெட்டில் வைத்திருக்கும் படத்தைப் பார்த்தால் ஊழலுக்காக பதவி பறிக்கப்பட்டது திமுகவா? அதிமுகவா? என்ற உண்மை தெரியும். அதனால், பழனிசாமி சற்று குனிந்து பார்க்கட்டும். குனிவதுதான் அவருக்கு ரொம்பவும் இயல்பாயிற்றே. இனியேனும் உண்மையைப் பேசுங்கள். திமுக ஆட்சி ஜனநாயகம் காக்கும் அறப்போர்க்களத்தில் உறுதியாக இருந்த காரணத்தால் கலைக்கப்பட்டது என்ற வரலாற்றை அடிமை ஆட்சியாளர்களே, தெரிந்து கொள்ளுங்கள்.

மந்தையில் ஒரு ஆடு, காரணமே இல்லாமல் துள்ளினால், பின்னால் வரும் ஆடுகளும் அதே போல துள்ளும். அப்படித்தான், பழனிசாமி போலவே அவருடைய அமைச்சரவையில் உள்ள அதிமோதவிகளும் பேசுகிறார்கள். என் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவாரா என ஆளாளுக்கு கேட்கிறார்கள்.

நான் என்ன அம்மையார் ஜெயலலிதாவா? ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்கிற விதி இருந்தும், நான்கு தொகுதிகளில் வேட்புமனுதாக்கல் செய்து, அத்தனையும் தள்ளுபடி செய்யப்பட்டு, அதன்பின் அதற்கான வழக்குக்கு வாய்தா வாங்கிக் கொண்டிருப்பதற்கு?

கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களில் ஒருவனான நான் எப்போதும் போல எனக்கான தொகுதியில் போட்டியிடுவேன். ஆனாலும், 234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாக நினைத்து அல்ல, தலைவர் அவர்களே போட்டியிடுவதாக நினைத்துப் பணியாற்றுவேன். அதிமுக அமைச்சர்களில் ஒருவர்கூட வெற்றி பெற முடியாதபடி மக்களின் தீர்ப்பு இருக்கும்.

நம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்புக்குத் தலைவணங்கி, அவர்களின் குறைகளைக் களைவதுதான் நமது முதல் நோக்கம். அதைத்தான், நம் உயிர்நிகர் தலைவர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தின் வாயிலில் நின்று நேற்றைய தினம் பிரகடனமாக அறிவித்தேன்.

“ஸ்டாலின் ஆகிய நான் உங்கள் முன்னிலையில் ஒரு உறுதி அளிக்கிறேன். உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதே என்னுடைய முதல் பணி. எனது அரசினுடைய முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு.

இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கக்கூடிய உறுதிமொழி” என செய்தியாளர்கள் முன்னிலையில் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கினேன். மக்களும் அந்த உறுதிமொழி மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்கள் வாயிலாகவும், அலைபேசி வாயிலாகவும் தெரியவந்தது.

எதிர்க்கட்சியான நமக்கு இது தெரியும்போது, உளவுத்துறையைக் கொண்டுள்ள ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருக்காதா? முதல்வர் பழனிசாமி உளுந்தூர்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளைத் தீரக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தமிழகம் முழுவதும் இதுவரை 5.27 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் கூறிவிட்டு, ஸ்டாலினின் கிராமசபைக் கூட்டங்களைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் தன்னுடைய பதற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதிமுக ஆட்சிதான் தமிழ்நாட்டின் மிகப் பெரிய குறை - கறை என்கிறபோது அந்த ஆட்சியில் மக்களின் குறைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கும்? அதனால்தான் திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்கள், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என ஒவ்வொரு நிகழ்விலும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வந்து மனுக்களை அளிக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான், நேற்று அறிவிக்கப்பட்ட “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்கிற மக்களின் குறை தீர்க்கும் முன்னெடுப்பும்.

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கழக ஆட்சி அமைந்ததும், 100 நாட்களில் மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென தனித்துறை உருவாக்கப்படும் என்ற உறுதியினை உங்களில் ஒருவனான நான் வழங்கியிருக்கிறேன். மக்களின் மனுக்களை நேரில் பெறுவதற்காக 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனவரி 29 முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறேன்.

கழக நிர்வாக மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் நடைபெறும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவரவர் கிராமங்கள் - வார்டுகளில் இருந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து மனுக்களை அளிப்பதற்கேற்ற வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பெரும்பொறுப்பு தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகளான உங்களின் கைகளில்தான் உள்ளது.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள், பட்டா, ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை போன்றவை உடனடியாக கிடைத்திட ஆவன செய்யப்படும் என்ற உறுதிமொழியினைத் துண்டறிக்கைகள் வாயிலாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது உடன்பிறப்புகளாகிய உங்களின் கடமை. அதற்கான படிவங்களும் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.

குறைகளை எடுத்துச் சொல்ல வரும் மக்களை, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து, அங்கே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் தன்னார்வலர்களின் உதவியுடன் அவற்றை நிரப்பி, அவர்களிடமிருந்து அதனை நேரில் பெற்று, அவர்கள் முன்னிலையிலேயே அதனை ஒரு பெட்டியில் போட்டு, ’சீல்’ வைத்து, என் பொறுப்பில் வைத்துக் கொள்வேன் என்ற உறுதியினையும் வழங்கியிருக்கிறேன். திமுக ஆட்சி அமைந்ததும், அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டு, மனுக்களில் உள்ள கோரிக்கைகள் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும்.

நம்மை நம்புகிற தமிழக மக்களுக்கு நாம் உண்மையாகவும் உறுதுணையாகவும் இருக்கிறோம் என்பதே இந்த செயல்திட்டத்தின் நோக்கம். கழகத்தின் தலைமைப் பொறுப்பைத் தோளில் சுமந்திருக்கிற காரணத்தால், ‘இதற்கு நானே பொறுப்பு’ என்ற உத்தரவாதத்தை வழங்கிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அந்த உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன்.

‘நான்’ என்று சொன்னாலும் அது நாம்தான். உங்களில் ஒருவனான நான் என்பதற்குள் அத்தனை உடன்பிறப்புகளும் ஒரு தாய் மக்களாக கழகம் எனும் குடும்பப் பாசத்துடன் இணைந்திருக்கிறோம். தலைவர் கருணாநிதி சொல்வதுபோல, ‘நான் - நீ என்று சொல்லும்போது உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொல்லும்போதுதான் உதடுகள் ஒட்டும்’ என்பதை மனதில் கொண்டு செயல்படுவோம்.

மக்களின் குறை தீர்க்கும் பெரும் பொறுப்புக்கான முன்னெடுப்பை எவ்விதக் குறைபாடும் இல்லாத வகையில் நடத்திடுவோம். மனுக்களை அளிக்க வருகின்ற மக்களுக்குத் தேவையான இடவசதி, கொரோனா காலத்தை மனதில் கொண்டு போதிய இடைவெளி, காற்றோட்டம், குடிநீர் வசதி, முதியவர்கள், பெண்கள்-மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சிரமமின்றி மனு தருவதற்கேற்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்திட வேண்டும்.

ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் குறைகளைத் தீர்த்திட வேண்டும் என்றால், ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 100 நாட்களும் அதற்கு மேலும் அயராது உழைத்திட வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுகழகத்தின் வெற்றியைக் குறுக்கு வழியில் தடுத்திட நினைக்கும் குள்ளநரிக் கூட்ட ஆட்சியாளர்களின் சதிவலைகளை அறுத்தெறிந்திட வேண்டும்.

எப்போதும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை உங்களில் ஒருவனான நான், ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் எதிர்பார்க்கிறேன். கழகத்தின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அனைவருக்கும் இதில் பெரும் பொறுப்பு உள்ளது. அதனை முழுமையாக நிறைவேற்றுவோம்.

திமுக அரசு நிறைவேற்றவுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தேர்தல் களத்தில் நூற்றுக்கு நூறு சதவீத அளவிலான வெற்றியாக அமையும். “மிஷன் 200” என்கிற இலக்கையும் தாண்டும். வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்