டெல்லியில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடத்தியதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''மத்திய அரசு கடந்த (2020) ஆண்டு நிறைவேற்றிய விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் 26ஆம் தேதியில் “டெல்லி சலோ” அழைப்பை ஏற்று, தலைநகர் டெல்லி சென்ற விவசாயிகளை மத்திய அரசின் காவல்துறையினர் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால், டெல்லி நகர எல்லைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து, அமைதி வழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தை ஆதரித்துப் பல்வேறு மாநிலங்களிலும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று (26.01.2021) குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பு நடைபெறும் என விவசாயிகள் போராட்டக் குழு அறிவித்திருந்தது.
விவசாயிகளின் குடியரசு தின அணிவகுப்பைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் விவசாயிகள் திட்டமிட்டபடி அரசின் அதிகாரபூர்வ அணிவகுப்பு முடிவடைந்ததும், விவசாயிகள் குடியரசு தின அணிவகுப்பைத் தொடங்கினர்.
இந்த அணிவகுப்பு அமைதியாக நடைபெறவிடாமல் டெல்லி காவல்துறை விவசாயிகளையும், அவர்களது வாகனங்களையும் தடுத்து, கண்ணீர் புகைகுண்டுகளை வீசியுள்ளது. தடியடி நடத்தியுள்ளது. கல்வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (25.01.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் “நாடு விவசாயிகளுக்கு பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளது” என்று தெரிவித்தார். ஆனால், மோடியின் பாஜக மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வுரிமையினைப் பறித்துப் போராடும் ஜனநாயக உரிமையை மறுத்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கும் முறையிலும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு கட்சியின் மாவட்டக் குழுக்கள், இடைநிலைக் குழுக்கள், கிளைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:
“இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முன்கூட்டியே தெரிவித்து டிராக்டர் அணிவகுப்பு நடத்தும் நிலையில், அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியதும், தடியடி கொண்டு கொடூரமாகத் தாக்கியதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது. அமைதிவழிப் போராட்டம் நடத்தினால் துப்பாக்கி பிரயோகமா?
அடக்குமுறையைக் கைவிட்டு, அமைதிவழி போராடுவோரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யட்டும். குடியரசு நாளில் தலைநகரில் விவசாயிகள் மீதான தாக்குதல் செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொது மரியாதையைக் குலைக்கும்.
விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போதாதா? இப்பொழுது விவசாயிகளையும் அடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதா? அமைதியான சூழலை அரசே வன்முறை மூலமாக மாற்றிவிடக் கூடாது. எச்சரிக்கை”.
இவ்வாறு வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago