"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்கிற பெயரில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்களைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், மக்களிடம் பெற்ற கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த முதல் 100 நாளில் நிறைவேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
''பத்தாண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். அதிமுக அரசின் ஊழல், திறமையின்மை மற்றும் அநீதிகளுக்கு மக்கள் பலிகடா ஆகிவருகின்றனர். இது போதாதென்று, கரோனோ பெருந்தொற்றும் விவசாயிகள், தினக்கூலிப் பணியாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறக் கூட எந்த ஒரு வழியும் இல்லாமல், பத்தாண்டுகளாக தங்கள் அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றாத அரசின் மீது சாமானிய மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.
வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி திமுக சர்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் ஜன.29-ம் தேதியிலிருந்து ஒரு புதிய கோணத்தில் பிரச்சார வியூகம் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். அது குறித்து தெரிவிக்கவே அழைத்துள்ளேன்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் அதலபாளத்திற்குத் தமிழகம் போய்விட்டது. அதிமுக ஆட்சியின் சாதனைகளைச் சொல்லவேண்டும் என்றால் தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடி, அனைத்துத் துறைகளிலும் பல ஆயிரம் கோடி கொள்ளை, தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தது.
பெரிய முதலீட்டை ஈர்க்கமுடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியது, வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க ஆக்கி வைத்திருப்பது, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருப்பது. சமூக நீதியை உருக்குலைத்தது.
இப்படி நம்பி வாக்களித்த மக்களுக்குப் பல்வேறு வகைகளில் துரோகம் செய்யும் அரசுதான் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. மக்கள் நிம்மதியாக இல்லை. ஏற்கெனவே இருந்த வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை, கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற மக்கள் வரை, குழந்தைகள் முதல் முதியவர் வரை, தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரது நிம்மதியும் போய்விட்டது.
எந்தத் தொகுதியிலும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் தொகுதியானாலும் சரி எங்கேயும் எதுவுமே நடக்கவில்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் கூட எங்கும் செய்துதரமுடியாத ஆட்சியாக இது உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் கரோனா காலத்திலும் இந்த மக்களை அரசு கைவிட்டுவிட்டது. மக்களுக்குத் தேவையானபோது பணம் கொடுக்காமல் தனக்குத் தேவையான அதாவது இந்த நேரத்தில் தேர்தல் நேரத்தில் 2500 ரூபாய் கொடுக்கிறார்கள்.
கரோனா காலத்தில் அரசு மக்களைக் கைவிட்டாலும் ஆட்சியில் இல்லாத நேரத்திலும் திமுக கைவிடவில்லை. அதனால் தான் அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் ஒன்றிணைவோம் வா எனும் அற்புதமான திட்டத்தின் மூலம் உதவினோம். அதைத் தொடர்ந்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்கிற பிரச்சாரக் கூட்டத்தை கட்சியின் முன்னணியினர் 20 பேர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
அதைத் தொடர்ந்து மக்கள் கிராமசபைக் கூட்டம் கிராமத்திலிருந்து நகரம் வரை தொடர்ந்து நடந்து வருகிறது. நாம் 10,200 கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டோம். அதைத்தாண்டி 21,000 கிராம மக்கள் சபை மூலம் ஏறத்தாழ ஒன்றேகால் கோடி மக்கள் அதிமுகவை நிராகரிப்போம் என சூளுரைத்துள்ளார்கள். அதிமுக மீதுள்ள கோபத்தை திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற ஆர்வத்தை நாங்கள் வெளிப்படையாகப் பார்த்தோம்.
வழக்கமாக திமுகவின் தேர்தல் திட்டங்களை நாங்கள் அறிவிப்போம். தொலைநோக்குத் திட்டங்களை அறிவிப்போம். அதுதான் திமுக தொடர்ந்து செய்யும். இம்முறை அதைவிட முக்கியமான ஒன்று தேவைப்படுகிறது. மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்கள் முன் ஒரு உறுதி அளிக்கிறேன்.
"மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும்.
இதற்கு நான் பொறுப்பு என்ற உறுதிமொழியை தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். இந்த உறுதிமொழியை மக்களுக்கு நேரில் அளிக்கும் பொருட்டு ஜன. 29 முதல் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்னும் சந்திப்பை நடத்த உள்ளேன்.
அடுத்த 30 நாட்களில் தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தவுள்ளேன். "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற ஒவ்வொரு கூட்டத்திலும், அத்தொகுதியைச் சேர்ந்த எந்த கிராமம் அல்லது வார்டினைச் சேர்ந்த யாரும் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளை நேரடியாகப் பதிவு செய்யலாம்.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரச்சினைகள் அடங்கிய மக்களின் மனுக்கள் பெறப்பட்டு - பதிவு செய்யப்பட்டுத் தனித்தனிப் பதிவு எண்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டும் அவர்களுக்கு வழங்கப்படும். நானே மனுக்களைப் பெற்று சீல் வைத்துப் பெட்டியில் போடுவேன். மக்களின் பிரச்சினைகளைக் குறித்து நேரில் கலந்துரையாடுவேன். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்படும்.
இக்கூட்டங்களில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாதோர், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ, பிரத்யேக இணையதளம் www.stalinani.com வாயிலாகவோ அல்லது 91710 91710 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோ, தங்கள் பிரச்சினைகளைப் பதிவு செய்யலாம். என்ற அறிவிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு கோரிக்கை நிறைவேற்றப்படும். அதனால் தான் தலைவரின் கோபாலபுரம் வீட்டைத் தேர்வு செய்தேன். சொல்வதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வேன். கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற எனது நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும்.
இந்தத் திட்டத்துக்காக தனித்துறை உருவாக்கப்படும். அந்தத்துறை மாவட்ட ரீதியாக இந்த மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட வாரியாக மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது நடைமுறைக்கு வந்து செயல்படுத்தப்படும்போது தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெற்றிருக்கும். இதை அண்ணா மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாகச் சொல்கிறேன்.
உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு, நான் மட்டுமே பொறுப்பு. சொன்னதைச் செய்வான் ஸ்டாலின், செய்வதை மட்டுமே சொல்வான் இந்த ஸ்டாலின்''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
ரூ.5 லட்சம் கடன் உள்ளது என்று தெரிவித்துள்ளீர்கள். இதுபோன்ற கோரிக்கை வைக்கும்போது நிறைய நிதி ஆதாரம் தேவைப்படுமே? என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
அதெல்லாம் உள்ளது. அது இல்லாமல் திட்டம் வைக்கமாட்டோம்.
தேர்தல் அறிக்கை இதில் வெளியிடப்படுமா?
தேர்தல் அறிக்கை தனியாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அது மாவட்டவாரியாக மக்கள் பிரச்சினைகளைத் திரட்டி வருகிறது. இதில் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக அக்குழு தனியாக வெளியிடும்.
தனிப்பட்ட பிரச்சினைகள் என்றால் அரசு சம்பந்தமில்லாததா?
தனிப்பட்ட பிரச்சினைகள்தான் குடிநீர், பட்டா, ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை பிரச்சினை, சான்றிதழ் வராத பிரச்சினை, பட்டா பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள். பெரிய பிரச்சினைகள், அரசு திட்டங்கள் தனி.
பட்டா, ஓய்வூதியம், சாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றிற்காக லஞ்சம் வாங்குவதைத் தடுக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
அதைத் தடுக்கும் திட்டம்தான். அதை எல்லாம் ஆட்சி அமைந்தவுடன் பாருங்கள்.
நீங்கள் சொன்ன விஷயங்களுக்காக ஏற்கெனவே முதல்வர் போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளதே?
அதெல்லாம் நடைமுறையில் இல்லாமல் பெயருக்காக இருப்பதால்தானே நாங்கள் இதை அறிவித்துள்ளோம்.
இதற்காக தனி இலாகா உருவாக்கப்படுமா? ஐஏஎஸ் அதிகாரி போடப்படுமா?
அதெல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் பாருங்கள்.
எப்படி நிறைவேற்றுவீர்கள்?
ஒரு மாவட்டத்துக்கு செல்லும் முன் மக்களிடம் முன் கூட்டியே நோட்டீஸ் கொடுத்து ஸ்டாலின் நேரடியாக வருகிறார். உங்கள் குறைகளைச் சொல்லுங்கள் எனச் சொல்லி அழைப்பார்கள். வருபவர்களிடன் நான் நேரடியாகப் பேசி மனுக்களைப் பெற்று பெட்டியில் போட்டு சீல் வைத்து பாதுகாக்கப்படும்.
எத்தனை நாட்களில் முடிக்க திட்டம்?
30 நாட்கள் என முடிவெடுத்துள்ளோம். இரண்டு செஷன் நடக்கும்.
மாவட்ட ஆட்சியர்கள் தீர்க்க வேண்டிய குறைதீர் முகாம் உள்ளது, முதல்வரிடம் நேரடியாக தர சி.எம்.செல் திட்டம் உள்ளது. அவற்றில் இல்லாத வித்தியாசம் இதில் என்ன உள்ளது?
அவை தனியாக உள்ளன. தொடர்ச்சியாக நடக்கும் ஒன்று. இது செய்து தருகிறோம் என வாக்குறுதி அளித்து அவர்களுக்கு ரசீது எண் கொடுத்து தீர்த்து வைப்பதற்காக நடத்தப்படுவது. சொந்தப் பிரச்சினை, முதியோர் ஓய்வூதியம், பட்டா, சாதிச் சான்றிதழ், பாகப்பிரிவினைப் பிரச்சினை, பள்ளிக்கூடம் இல்லை என தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மட்டுமே தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும்.
பிரச்சாரப் பயணம் செய்யும் நேரத்தில் கூட்டணி பற்றி எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும்?
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுடன் முறையாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago