இலங்கை போர்க்குற்றங்கள்; ஐ.நா.வில் முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர ராமதாஸ் வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டுப் பொறிமுறையை ஏற்படுத்தும் தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்ரவரி 2ஆம் நாள் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“இலங்கையில் நடத்தப்பட்ட ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்குக் காரணமான குற்றவாளிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டிக்கப்படாத நிலையில், அவர்களைப் பன்னாட்டுச் சட்டங்களின் முன் நிறுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசு அதற்கான தார்மீகக் கடமையிலிருந்து தவறிவிடக் கூடாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆம் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 22ஆம் நாள் தொடங்கவுள்ளது. கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான பிப்ரவரி 24ஆம் நாள் இலங்கை போர்க் குற்றம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது விவாதம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து மார்ச் 22ஆம் நாள் இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்துப் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளும், இலங்கை நீதிபதிகளும் அடங்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் 5 ஆண்டுகள் ஆகியும் அந்த விசாரணை தொடங்கப்படவில்லை. மாறாக, அந்தத் தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டது.

இந்நிலையில், 2015 தீர்மானத்தின் இப்போதைய நிலை குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவிருக்கிறது. அந்த அறிக்கை பிப்ரவரி 24-ம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெறும்.

இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆண்டுக்கு ஆண்டு இலங்கையை வலியுறுத்துவதும், அதை சிங்கள ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. உலகின் மிக மோசமான இனப்படுகொலை நடந்து முடிந்து பத்தாண்டுகள் கடந்த பிறகும், அதற்குக் காரணமானவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்கத் தவறுவது ஈழத் தமிழர்களுக்கு உலக சமுதாயம் செய்யும் பெருந்துரோகம். இந்த துரோகத்தில் இந்தியா எந்தக் காலத்திலும் பங்காளியாக இருந்துவிடக் கூடாது என்பதுதான் தமிழர்களின் விருப்பம்.

2015-ம் ஆண்டு தீர்மானத்தின் இப்போதைய நிலை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, அதன் முதன்மையான அம்சங்கள் கசிந்துள்ளன. இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்துப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற (International Criminal Court) விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்; இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுங்குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த பன்னாட்டு பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும்.

உலகின் எந்த நாட்டிலும் இலங்கைப் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கும் உரிமை (Universal Jurisdiction); குற்றமிழைத்தோர் மீது பன்னாட்டுத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருபவைதான். இதிலிருந்தே ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவதில் பாமக காட்டும் அக்கறையை உணர முடியும்.

ஈழத்தமிழர் அரசியல் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள், ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை முன்வைத்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இதேபோன்று, இலங்கை மீது பன்னாட்டு பொறிமுறை கோரி பிரான்ஸ் நாட்டின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரானுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இலங்கைப் போர்க்குற்றங்களுக்குக் காரணமானோரைத் தண்டிக்க வேண்டும் என்பதில் மனித உரிமையில் அக்கறை கொண்ட நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளன. அத்தீர்மானத்தை அமெரிக்காவும் ஆதரிக்கக்கூடும்.

ஈழத் தமிழர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத சில நாடுகள் கூட, மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரும்போது, தெற்காசியாவில் வலிமை வாய்ந்த நாடாகவும், ஈழத் தமிழர்களுக்கு தந்தை நாடாகவும் திகழும் இந்தியா இந்த விஷயத்தில் அமைதி காக்கக் கூடாது. ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென பாமக ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளது.

இந்தக் குரல் ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும். அதற்காக இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்துப் பன்னாட்டுப் பொறிமுறையை ஏற்படுத்தும் தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்ரவரி 2ஆம் நாள் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்