திருக்கழுக்குன்றத்தில் அரிய வகையை சேர்ந்த புல்புல் தாரா பறவைக்காக வீட்டிலிருந்து வெளியேறிய குடும்பத்தினர்

By கோ.கார்த்திக்

திருக்கழுக்குன்றம் மசூதி வீதியில் வழக்கறிஞர் ஒருவர், தனது வீட்டின் வாசலில் கூடு கட்டி குஞ்சு பொரித்துள்ள அரிய வகை புல்புல் தாரர பறவைக்காக, குடும்பத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் உள்ள மசூதி வீதியில் வசித்து வருபவர் சலீம்பாஷா. வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெகனராபேகம். இத்தம்பதியருக்கு அர்ஷத் பாஷா என்ற மகனும் உள்ளார். இவர்கள் வீட்டின் முகப்பு பகுதியில் அழகுக்காக பிளாஸ்டிக் பூக்கள் நிறைந்த பூத்தொட்டி ஒன்று அமைத்துள்ளனர்.

இந்தப் பூத்தொட்டியில், புல்புல் தாரா பறவைகள் கூடு கட்டியுள்ளன. மேலும், இக்கூட்டில் முட்டையிட்டு பறவைகள் அடைகாத்து வந்துள்ளன. தற்போது, முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளியே வந்துள்ளன. குஞ்சுகளுக்கு இரை வழங்கி தாய் பறவை கவனமாக பாதுகாத்து வருகிறது.

சலீம்பாஷாவின் 5 வயது மகன் கூடு உள்ள பகுதியில் விளையாடுவதால், கூட்டில் உள்ள குஞ்சுகளை காண தாய் பறவை வர பயப்படுகிறது. அதனால், குஞ்சுகள் வளர்ந்து பறந்து செல்லும் வரையில் குடும்பத்துடன் வீட்டிலிருந்து அவர் வெளியேறி உள்ளார். பறவைக்காக ஒரு குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சலீம்பாஷா கூறும்போது, ‘‘அரிய வகையை சார்ந்த புல்புல் தாரா பறவை எங்கள் வீட்டில் கூடு கட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்பறவை கடந்த 7 நாட்களுக்கு முன்புதான் கூடு கட்டியது. ஆனால், விரைவாக முட்டையிட்டு 3 குஞ்சுகளை பொரித்துள்ளது. தாய் பறவை குஞ்சுகளுக்கு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை உணவளிப்பதற்காக கூட்டுக்கு வருகிறது. இதை கண்காணித்து தெரிந்துகொண்டேன்.

எனது மகன் கூட்டின் அருகே உள்ள வராண்டாவில் சத்தமாக விளையாட்டில் ஈடுபடுவதால், குஞ்சுகளுக்கு உணவளிக்க வருவதற்கு தாய் பறவை தயங்குவதை அறிந்தேன். அதனால், குஞ்சுகள் வளர்ந்து பறந்து செல்லும் வரையில் எனது மகன் மற்றும் மனைவியை அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளேன். ஏதேனும் தேவையிருப்பின் பின் வழியாக வீட்டுக்கு சென்று வருகிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE