கரோனா காலத்தில் அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவுகளின் கீழும், ஊரடங்கு சட்டம் ஐபிசி 188-ன் கீழும், பதிவு செய்த கிரிமினல் வழக்குகள் தற்போது நிலுவையில் இருக்கின்றன. இப்படிப் பதியப்பட்ட வழக்குகளால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க முடியாமல் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியுள்ளது. இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முகநூலில் வெளியிட்ட பதிவு:
“உலகையே உலுக்கிய கொடிய கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களில் ஊரடங்குகளைப் பிறப்பித்துக் கட்டுப்பாடுகளை விதித்தன. தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் பசிப்பிணியைப் போக்கிடவும் வறியோரும், வாடி நலிந்தோரும், வழக்கமான தினக்கூலியினரும், அன்றாடம் வேலைக்குச் செல்வோரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க இயலாமல், பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வயிற்றுப் பிழைப்பிற்காக ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மீறினார்களே தவிர வம்படியாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ வேண்டுமென்றே மீறவில்லை. ஆனால், அப்படித் தங்களின் அன்றாடப் பணிகளுக்குச் சென்ற லட்சக்கணக்கானவர்கள் மீது, அதிமுக அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழும், கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அந்த வழக்குகள் எல்லாம் தற்போது நிலுவையில் இருக்கின்றன.
இப்படிப் பதியப்பட்ட வழக்குகளால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுப்பதற்கு இந்த வழக்குகள் பெரும் தடையாக உள்ளன. இதனால் கரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்ட அவர்களின் எதிர்காலமும் இந்த கிரிமினல் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்ற இந்தத் தருணத்தில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
அந்த வழக்குகளையெல்லாம், சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கருதி, உடனே எவ்விதத் தாமதமும் இன்றித் திரும்பப் பெற்று - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், புது வாழ்வுத் தேடலுக்கும் வழிவகுத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago