நீலகிரியில் காட்டு யானைக்குத் தீ வைத்துச் சித்திரவதை செய்தது அம்பலம்: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ 

By ஆர்.டி.சிவசங்கர்

மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றி வந்த யானைக்குத் தீ வைத்துச் சித்திரவதை செய்தது அம்பலமாகி உள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளதால், வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பழங்குடியினர் கிராமத்தைச் சுற்றி, கடந்த மாதம் ஆண் காட்டு யானை ஒன்று உலவிவந்தது. ஊர் மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் அந்த ஆண் யானைக்கு முதுகில் ஆழமான காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் பழங்களில் மருந்து மாத்திரைகளை வைத்து யானைக்குக் கொடுத்தனர். இதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, சிகிச்சை அளிக்க முடிவு செய்து கடந்த மாதம் 28-ம் தேதி இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் காயம்பட்ட யானையைச் சுற்றி வளைத்து, மயக்க ஊசி செலுத்தி, யானையின் அருகில் நெருங்கி கால்நடை மருத்துவர்கள் காயங்களுக்கு மருந்து தடவி சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து அந்த யானையைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இடது காது சிதைக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்டச் சொட்டப் பரிதவித்த யானையை வனத்துறையினர் பார்த்தனர். இதனால் யானைக்குத் தீவிர‌ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அந்த யானையைப் பிடித்து முதுமலையிலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்லவும் திட்டமிட்டனர்.

இதன்படி இரண்டு கால்நடை மருத்துவர் குழுக்கள், நான்கு கும்கி யானைகள் என எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மீண்டும் அந்த யானையைச் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முற்பட்டனர். ஆனால், தெப்பக்காடு கொண்டு செல்லும் வழியில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

யானையை முதுமலை மன்றடியார் வனப்பகுதிக்குக் கொண்டு சென்று, கால்நடை மருத்துவர்கள் சுகுமார், ராஜேஸ்குமார், பாரதிஜோதி ஆகியோர் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுபற்றி மருத்துவர்கள் கூறும்போது, ''பிரேதப் பரிசோதனையில், 50 வயதுக்கு மேல் இருந்த யானைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் முதுகில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காயம் தீவிரமாகி சீழ் படிந்து, நுரையீரல் வரை பாதிக்கப்பட்டது. இதனால், ரத்தம் வெளியேறி, யானைக்கு ரத்த சோகை ஏற்பட்டதால் பலவீனமடைந்து உயிரிழந்துள்ளது. அதன் காதில் தீக்காயம் ஏற்பட்டதால், புழுக்கள் ஏற்பட்டன. உடல் உறுப்புகளின் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளன'' என்றனர்.

இந்நிலையில் தற்போது யானையின் இடது பக்கப் பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், சிலர் யானை மீது தீப்பந்தத்தை வீசுகின்றனர். இதில் யானை மீது தீ பரவி, யானை பிளிறியபடி அலறியடித்து அப்பகுதியிலிருந்து ஓடுகிறது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசலிடம் கேட்டபோது, ''யானையின் இடது காதுப் பகுதியில் தீக்காயங்கள் இருந்தது உண்மைதான். முதுகில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த யானையின் மீது தீப்பந்தம் போன்றவற்றைக் கொண்டு எரித்திருக்கிறார்கள். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனவடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

காட்டு யானை மீது நெருப்பை வீசி எரிந்த சம்பவம் தொடர்பாக மசினகுடியைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்