நெருங்கும் குடியரசு தின விழா: கோவையில் தேசியக் கொடி தயாரிப்புப் பணி தீவிரம்

By டி.ஜி.ரகுபதி

குடியரசு தினவிழா நெருங்குவதைத் தொடர்ந்து, கோவையில் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

குடியரசு தினம் நெருங்குவதைத் தொடர்ந்து, கோவையில் தேசியக் கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை ராஜவீதி - டவுன்ஹால் சந்திப்புப் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கதர் துணி, மைக்ரோ துணி(கெட்டியாக உள்ள ஸ்பெஷல்துணி), வெல்வெட் துணி ஆகியவற்றைக் கொண்டு, 8-க்கு 10, 12-க்கு 10, 16-க்கு 20, 20-க்கு 30, 30-க்கு 40, 36-க்கு 54, 46-க்கு 60, 40-க்கு 72 ஆகிய ‘இன்ச்’ அளவுகளிலும், 5-க்கு 12, 12-க்கு 20, 15-க்கு 30 ஆகிய ‘அடி’ அளவுகளிலும் தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு வருகிறது.

கதர்துணியினால் ஆன தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ. 5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரையும், மைக்ரோ துணியினால் ஆன தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.30 முதல் அதிகபட்சம் ரூ.1,500 வரையும், வெல்வெட் துணியினால் ஆன தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.80 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரைக்கும் விற்கப்படுகிறது.

இதுகுறித்து தேசியக்கொடி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கூறும்போது,‘‘ வழக்கமாக குடியரசு தினத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே தேசியக் கொடி உற்பத்தி , ஆர்டர் களைகட்டி விடும். தயாரிப்புப் பணி தொடங்கிவிடும்.

ஆனால், நடப்பாண்டு கரோனா அச்சம் காரணமாக, எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் இல்லை. சில தினங்களுக்கு முன்பு இருந்து தான், தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வழக்கமாக பார்த்தால், பள்ளிகள், கல்லூரிகளில் வளாகங்களில் கட்டுதல், ஏற்றுவதற்கு என அதிகளவில் ஆர்டர் செய்வர். ஆனால், நடப்பாண்டு கல்வி நிலையங்கள் முழுமையாக திறக்கப்படாததால் எதிர்பார்த்த அளவுக்கு அங்கிருந்து ஆர்டர்கள் கிடைக்கவில்லை.

மேலும், கோவையில் உள்ள அரசு, தனியார் துறையினர், கோவையை ஒட்டியுள்ள வெளி மாவட்டங்கள், கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த அரசு, தனியார் துறையினர் தேசியக் கொடியை ஆர்டர் செய்து, வாங்கிச் செல்வர். ஆனால், நடப்பாண்டு கரோனா அச்சத்தால் இந்த ஆர்டரும் குறைந்து காணப்படுகிறது.

நாங்கள் மொத்தமாக துணியை வாங்கி, அளவை கூறி, எங்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தையலர்களுக்கு பிரித்து அளிப்போம். அவர்கள் அளவுக்கு ஏற்ப, தைத்து எங்களிடம் அளித்த பின்னர், 1 இன்ச் முதல் 42 இன்ச் அளவு வரை, கொடியின் அளவுக்கு ஏற்ப, நாங்கள் அதில் அசோக சக்கரத்தை பதித்து, இறுதிக்கட்ட பணிகளை முடித்து விற்பனைக்கு அனுப்புகிறோம்.

வாடிக்கையாளர்கள் 30-க்கு 40, 20-க்கு 30, 12-க்கு 10ஆகிய இன்ச் அளவுகளில் உள்ள தேசியக் கொடியை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்நேரத்துக்கு பல அளவுகளில் 1.50 லட்சத்துக்கும் அதிகமான கொடிகள் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், கரோனா அச்சத்தால் தற்போது ஏறத்தாழ 25 ஆயிரம் கொடிகளே இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடி தயாரிப்பு, ஆர்டர் பெறுதல் போன்றவை பெரும் சதவீதம் சரிந்து விட்டது.

இருப்பினும், நடப்பாண்டு, வழக்கமான விற்பனை அளவுகளில் இருந்து, குறிப்பிட்ட சதவீதமாவது விற்றுவிடும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE