திமுக ஒரு கார்பரேட் கட்சி; ஸ்டாலின் சேர்மன், குடும்பத்தினர் டைரக்டர்கள்: முதல்வர் பழனிசாமி விமர்சனம் 

By செய்திப்பிரிவு

நேருக்கு நேர் அரசியலில் மோதிப் பாருங்கள், அப்பாவி மக்களை வைத்து அவர்களை பேச வைத்து மோத வேண்டாம், எங்கள் இயக்கத்தின் தலைவர்கள் மீதோ, தொண்டர்கள் மீதோ வீண் பழி சுமத்தினால் நீங்கள் வெளியில் கூட நடமாட முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற காரணத்தினால், இன்றைக்கு ஸ்டாலின் அவர்கள் ஊர், ஊராக சென்று பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார். ஊடகங்கள் வாயிலாக பொய்யான அறிக்கையினை வெளியிட்டு வருகிறார். கிராம சபை கூட்டம் என்ற பெயரிலே, அவர்கள் தயார் செய்த பெண்களை அமர்த்தி அவதூறு பரப்பி வருகிறார்.

இதே போன்று கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலே திண்ணையில் அமர்ந்து மனு பெற்றார். அதற்கு ஏதும் செய்தாரா? இல்லை. இவ்வாறு அப்பாவி பொதுமக்களை அமரவைத்து அரசுக்கு எதிரான பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்.

தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால், திமுக அராஜக கட்சி. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள்.

ஸ்டாலின் மகன் எப்பொழுது கட்சியில் இணைந்தார். தற்போது கட்சியில் சேர்ந்தவருக்கு பதவி. முன்னோடி தலைவர்கள் அவர் வரும் காரின் கதவை திறந்து விட்டு, கூனி குறுகி நிற்கிறார்கள். முன்னோடி தலைவர்களுக்கே இந்த நிலைமை என்றால், அடிமட்ட உறுப்பினர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்றைக்கு உதயநிதி "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்" என்று காவல்துறை உயர்அதிகாரியையே மிரட்டுகிறார். காவல் துறை உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகளையே மிரட்டுகிறார் என்றால், சாதாரண மக்களின் நிலமையை எண்ணிப்பார்க்க வேண்டும்.

நான் ஒரு விவசாயி என்றால் ஸ்டாலினால் ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இரவு-பகல், வெயில் - மழை பாராமல் வியர்வை சிந்தி உழைக்க கூடியவர்கள் விவசாயி மற்றும் விவசாய தொழிலாளிகள். இது ஸ்டாலினுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் விவசாயியாக இருந்தால் தான் தெரியும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதற்காக நான் நேரடியாக டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து நிவாரணம் நிதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். உள்துறை அமைச்சரை சந்தித்தேன். மழையால் ஏற்பட்ட விவசாய நிலங்களின் பாதிப்புகள் குறித்து புகைப்படங்களை காட்டினேன்.

விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் எல்லாம் வீணாகிவிட்டது. அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசிடம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதையும் ஸ்டாலின் கிண்டலாக பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றுவதற்காக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை பார்த்தார் என்று சொல்கிறார். ஆட்சியை காப்பாற்றுவதற்கு இன்னும் 5 ஆண்டுகளா இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. நல்ல எண்ணமே கிடையாது அவருக்கு.

அவருடைய தந்தை கருணாநிதி முதல்வராக இருந்த போது டெல்லிக்கு எப்போது செல்வார் என்றால் தன் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு பதவி அதிகாரம் வேண்டும் என்பதற்கு தான் டெல்லி செல்வார். நாட்டு மக்களின் பிரச்சனைக்காக டெல்லி செல்வாரா என்றால், கிடையவே கிடையாது. கருணாநிதி என்ன என்ன இலாக்கா, செல்வாக்குமிக்க இலாக்கா எது இருக்கிறதோ, அதை தன் குடும்பத்தினருக்கு பெறுவதற்காக டெல்லி செல்வார்.

காவேரி நதிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு டெல்லி செல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்கள், நிதியுதவி பெறுவதற்கு டெல்லி செல்லவில்லை. ஆனால் ஜெயலலிதா டெல்லி செல்லும் போது காவேரி நதிநீர் பிரச்சனை தீர்க்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்கள் வர வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கையை தான் வைப்பார்கள். அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இது தான் வேறுபாடு.

அதேவழியில் வந்த இந்த அரசும், நான் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த போதும், உள்துறை அமைச்சரை சந்தித்த போதும், நம்முடைய தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு நிவாரணம் அளிக்க நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டேன். அதுமட்டுமல்ல, பல்வேறு திட்டங்களுக்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டேன்.

புதிய புதிய திட்டங்களை நாங்கள் அறிவித்திருக்கின்றோம், அதற்கு நிதியுதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான பொய்யான பிரச்சாரத்தை இன்றைக்கு பரப்பி வருகிறார்.

திமுகவை போல் சுயநலம் பிடித்த கட்சியல்ல அதிமுக கட்சி. எங்கள் இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. இங்கே இருக்கின்ற மக்கள் தான் வாரிசாக, பிள்ளைகளாக நினைத்தார்கள். அந்த பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருபெரும் தலைவர்களும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்கள். அதேவழியில் இந்த அரசும் பின்பற்றி செயல்பட்டு வருகின்றது. ஆனால் திமுக அப்படியல்ல, அவர்கள் குடும்ப கட்சி. அவர்கள் குடும்பத்திலே இருக்கின்றவர்கள் தான் பதவிக்கு வர முடியும். வேறு யாரும் பதவிக்கு முடியாது.

அப்படி தான் இன்றைக்கு அந்த கட்சி போய் கொண்டிருக்கிறது. அது கட்சியல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் சேர்மன், குடும்ப உறுப்பினர்கள் தான் டைரக்டர்கள். வேறு யாரையும் டைரக்டராக போட மாட்டார்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஸ்டாலின் போகிறார், உதயநிதி போகிறார், கனிமொழி போகிறார், தயாநிதி மாறன் போகிறார். மற்றவர்கள் யாரும் திமுக கட்சியிலே இல்லை பாருங்கள். நிலைமையை பாருங்கள்.

அதிமுகவை பொறுத்தவரைக்கும் சாதாரண தொண்டன் கூட முதல்வராக ஆக முடியும். இது ஒரு ஜனநாயக கட்சி. யார் உழைக்கின்றார்களோ, யார் தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக ஏதாவது பதவியை அடைந்தே தீருவார்கள். வேறு எந்த கட்சியிலாவது வர முடியுமா. திமுகவில் தயாநிதி மாறனை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் கோடீஸ்வரர், அவரை தேர்தல் போதுதான் பார்க்க முடியும். தேர்தல் முடிந்த பிறகு அவரை அடுத்த தேர்தலில் தான் பார்க்க முடியும்.

ஜெகத்ரட்சகனை எடுத்து கொள்ளுங்கள் அவரிடம் இருக்கும் பணத்திற்கு கணக்கே இல்லை. அரசிடம் கூட அவ்வளவு பணம் இருக்காது. அவரிடம் அவ்வளவு பணம் இருக்கிறது. திமுக எம்பிக்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள். இவர்கள் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றால், இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் அதிமுகவினர் நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும், அதன் மூலமாக மக்கள் நன்மை பெற வேண்டும். அந்த ஒன்றிற்காகதான் இன்றைக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

கரோனா பரவலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மகிழ்ச்சியோடு தைப் பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காக 2500 ரூபாய் வழங்கியது. அதைக்கூட பொறுக்க முடியாமல் எதிர்கட்சி தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றம் வரை போகிறார். ஆனால் நீதிமன்றம் இது வாழ்வாதாரம் இழந்திருக்கின்ற சூழ்நிலையில் மக்களுக்கு அரசு அளிக்கின்ற நிதி என்று கூறி அதை நிராகரித்தது.

ஏழை மக்களுக்கு கொடுக்கின்ற நிதியை கூட தடுத்து நிறுத்துகின்ற தலைவர் என்று சொன்னால் அது திமுக தலைவர் தான். அவர் எப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்வார். அரசின் இத்தகைய நல்ல திட்டத்தை வரவேற்க மனமில்லா விட்டாலும், அதை எதிர்த்தார்கள். அதையும் முறியடித்த அரசு இந்த அரசு.

ஒரு வேதனையான விஷயம். ஸ்டாலின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதியான எடப்பாடி மற்றும் தேனியில் பெண்களை வைத்து மக்கள் கிராம சபை கூட்டம் என்ற ஒன்றை நடத்தி வருகிறார். எவ்வளவு திட்டமிட்டு செயல்படுகிறார் என்று பாருங்கள். அங்கே போய் அமர்ந்து கொண்டு, அங்கு இருக்கிற பெண்களுக்கு துணை முதல்வர் மீது குற்றச்சாட்டை சொல்ல சொல்கிறார்.

கரோனா லாக்டவுன் காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு வர முடியாமல் டெல்லியில் சிக்கி தவித்த சுமார் 400 இஸ்லாமிய பெருமக்களை தன்னுடைய சொந்த செலவில் ரயிலிலே அழைத்து வந்து அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்த தலைவர் ஓபிஎஸ். கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினார்.

அங்கே ஒரு பெண்மணி ஒரு தவறான கருத்தை சொல்லி, ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு நாகரிகமில்லாத அரசியல் கட்சி தலைவர். வேண்டுமென்றே துணை முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார். எந்த அரசியல் கட்சித் தலைவரும், தவறான செய்தியை ஒரு பெண்ணிடத்திலே சொல்லி கொடுத்து, அதை பேச வைத்து, பிரச்சுரம் செய்து, அரசியல் நாடகம் ஆட மாட்டார்கள். இதன்மூலம் அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறார் ஸ்டாலின்.

நேருக்கு நேர் அரசியலில் மோதிப் பார். அப்பாவி மக்களை வைத்து அவர்களை பேச வைத்து மோத வேண்டாம். அதிமுக எஃகு கோட்டை, இதில் மோதினால் மண்டை தான் உடையும். எங்கள் இயக்கத்தின் தலைவர்கள் மீதோ, தொண்டர்கள் மீதோ வீண் பழி சுமத்தினால் நீங்கள் வெளியில் கூட நடமாட முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் மகன் உதயநிதி கூட்டத்தில் பேசுகின்ற போது பெண்களை இழிப்படுத்தி பேசுகிறார். அதை நீ கண்டித்தாயா. உதயநிதி பேசிய பேச்சு பெண் குலத்தையே இழிவுப்படுத்துகின்ற பேச்சு. தந்தை எவ்வழியோ, அப்படித்தானே மகனும் இருப்பார். அவர்களுக்கு நாட்டு மக்களின் எண்ணம் குறித்து தெரியாது.

அதிமுக அமைச்சர்கள் மீது வீண் பழி சுமத்தி, ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான அடியை இந்த தேர்தலில் மக்கள் கொடுக்க வேண்டும். பொய் பேசி ஆட்சிக்கு வர துடிப்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்