நீர்வள ஆதாரத்துறையில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்றே மாதங்களில் 2855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை விட்டிருக்கிறார்கள், திமுக ஆட்சி அமைந்தவுடன், கமிஷனுக்காக விடப்படும் இந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பதையும், பழைய டெண்டர் முறைகேடுகள் குறித்தும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தோர் யாராயினும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், வசூல் வேட்டையை நடத்தி முடித்துக் குவித்து விட வேண்டும் என்பதற்காக, முதல்வர் பழனிசாமியின் பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் நவம்பர், டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்றே மாதங்களில் 2855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை விட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தாண்டுக் கால அதிமுக ஆட்சியில் நடந்து வரும் டெண்டர் கொள்ளைகளின் தொடர்ச்சியாக, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்திலும் பழனிசாமி இதுபோன்று, “கடைசி நிமிட" (லாஸ்ட் மினிட்) கையெழுத்துப் போட்டு டெண்டர் விடும் தீவிர நடவடிக்கையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டிருக்கிறார். பொதுமக்கள் கோரிக்கை வைத்த போதும் - சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட போதும் - மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அறிவிக்கத் தயங்கிய முதலமைச்சர், இப்போதும் கமிஷனுக்காகவே புதிய திட்டங்களை அறிவிக்கிறார்.
» அமெரிக்கா தனது வரலாற்றில் சிறந்த அத்தியாயத்தை எழுத இருக்கிறது: பைடன் பேச்சு
» ‘‘அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது'' - ஜோ பைடனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளைப் புனரமைப்பது, தடுப்பணைகள் கட்டுவது, கால்வாய் நவீனமயமாக்கல் என்று பல்வேறு வகையிலும் டெண்டர்கள் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நீர்வள ஆதாரத்துறையில் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் டிசம்பரிலும், ஜனவரியிலும் விடப்பட்ட டெண்டர்களின் எண்ணிக்கை அதிகம். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதமே எஞ்சியிருக்கின்ற சூழலில், எதிர்பார்ப்புடன் டெண்டர்களை விடுவதும் - பின்னணி அறிந்தே அதற்கு “டெண்டர் விடும் அதிகாரிகளும்” சம்பந்தப்பட்ட “அரசுத் துறை செயலாளர்களும்” கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தை மீளாக் கடனில் மூழ்க வைத்துள்ள முதல்வர் பழனிசாமி, கமிஷன் அடிக்கும் நோக்கில், புதிய திட்டங்களுக்கு கையெழுத்துப் போடும் அதிகாரத்தை இன்னும் ஒரு மாதத்தில் இழக்கப் போகிறார். துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் அதே நிலைதான். ஆனால் அந்த ஒரு மாதத்திற்குள்ளாக, எப்படியாவது முடிந்தவரை கஜானாவை சுரண்டி காலி செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டு - இப்படி முதல்வரும், அமைச்சர்களும் டெண்டர்களை விடுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் ஒரே கேடுகெட்ட ஆட்சி, தமிழகத்தில் தற்போது உள்ள முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியாகத்தான் இருக்க முடியும். முதியோர் நிதியுதவி வழங்கப் பணமில்லை; 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் தாய்மார்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய பணிப்பயன்களைக் கொடுக்க நிதியில்லை.
கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிவர் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்கக் கூட நிதியில்லை.
ஆனால் டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதில் - குறிப்பாக, பதவியை விட்டுப் போகின்ற நாட்கள் வேகமாக நெருங்கி வருகின்ற நேரத்தில் கூட முதல்வர் பழனிசாமிக்குத் தயக்கம் இல்லை. மனசாட்சி உறுத்தலும் இல்லை. அமைச்சர்களுக்கோ சிறிதும் கூச்சமில்லை.
அரசு நிதியை, தங்களின் சுயலாபத்திற்குப் பயன்படுத்துவதுதான் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஒரே நோக்கம் என்பது ஒவ்வொரு துறையிலும் விடப்படும் கடைசி நேர டெண்டர்கள் மூலம் தெரியவருகிறது.
எனவே, மக்களின் பேராதரவுடன், இன்னும் நான்கு மாதத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து டெண்டர்கள் குறித்தும் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு - அவசர கோலத்தில் - கமிஷனுக்காக விடப்பட்டுள்ள அந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படும் என்றால் - அதற்கு முன் விடப்பட்ட டெண்டர்களை விட்டு விடுவோம் என்று அர்த்தமல்ல. அவற்றில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு – தவறு செய்தோர் யாராயினும் தயவு தாட்சண்யம் இன்றி, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago