விவசாயிகளின் குரலை கேட்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை; குமரியில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

By எல்.மோகன்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என குமரியில் பேசிய கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் விடிலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கனிமொழி எம்.பி. மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

3-வது நாளாக இன்று குமரி மேற்கு மாவட்டத்தில் அவர் மக்களை சந்தித்தார். அவர் தக்கலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயிலின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் திக்கணங்கோட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களை சந்தித்து உரையாற்றினார். தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்க சென்ற கனிமொழி எம்பி மீனவர்களிடம் குறைகளை கேட்டதுடன், அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் புதுக்கடை சந்திப்பில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மரியாதை செய்த அவர் புதுக்கடை சந்திப்பிலும், களியக்காவிளை சந்திப்பிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் களியக்காவிளையில் நெய்யாறு பாசன கால்வாயை பார்வையிட்டார்.

திருவட்டாறு பக்கம் குமரங்குடியில் முந்திரி தொழிலாளர், விவசாயிகளை சந்தித்தார். பேச்சிப்பாறை தச்சமலையில் பழங்குடியனர் பகுதிக்குச் சென்று குறைகள் சேகட்டார். களியலில் ரப்பர் விவசாயிகளை சந்தித்த அவர் இரவில் குலசேகரம், மேக்காமண்டம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

தக்கலையில் கனிமொழி எம்பி. பேசுகையில், "பிரச்சாரத்தின் போது மக்கள் அளிக்கும் ஆர்வம், ஆதரவு ஆகியற்றைப் பார்க்கும்போது திமுகவின் வெற்றி இப்போதே உறுதி ஆகிவிட்டது.

தமிழகத்தில் வேலை வாய்ப்பின்றி படித்த இளைஞர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்து விட்டனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரிலும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமையல் கியாஸ் விலையை ஒரே மாதத்தில் ரூ.100 உயர்த்தி மக்களை வேதனைப் படுத்துகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுவது உறுதி" என்றார்.

நிகழ்ச்சியின்போது முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE