திண்டுக்கல் மாவட்டத்தில் 57157 புதிய வாக்காளர்கள் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் 

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 57157 பேர் புதிய வாக்காளர்களாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி நேற்று வெளியிட்டார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ஆட்சியர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் மொத்தம் 18 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 12 ஆயிரத்து 943 பேர், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 60 ஆயிரத்து 280 பேர், இதரர் 215 பேர். வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 1209 வரையறுக்கப்பட்ட மையங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது, என்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆண்வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுருபிரபாகரன், கோட்டாட்சியர்கள் உஷா. அசோகன், தேர்தல் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE