ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் கடலை, எள் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

By கே.தனபாலன்

திருப்பல்லாணி ஒன்றியத்தில் 500 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.34 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டது. 1 லட்சம் ஏக்கருக்கும் மேல் மிளகாய் பயிரிடப்பட்டது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் ஜனவரி 6 முதல் 16-ம் தேதி வரை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிரும், 50,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட மிளகாய்ச் செடிகளும் நீரில் மூழ்கி வீணாகின.

இதேபோல் மக்காச்சாளம், சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் நிவாரணம் கோரி தினமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் பாதிப்பு குறித்துக் கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மழை நின்று 2 நாட்கள் ஆகியும் திருப்புல்லாணி ஒன்றியம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் பயிரிட்ட நிலக்கடலை, எள், தட்டைப் பயறு உள்ளிட்ட பயறு வகைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

எல்லாப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் தண்ணீரை வெளியேற்ற முடியாலும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாகத் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தினைக்குளம், களிமண்குண்டு, வண்ணாங்குண்டு ஊராட்சிகளைச் சேர்ந்த கட்டையன் பேரன் வளைவு, மொங்கான் வலசை, மொத்தி வலசை, களிமங்குண்டு உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு மேல் நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயறு வகைப் பயிர்கள், மகசூல் காலம் வரும் நேரத்தில் மழை நீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்துக் கட்டையன் பேரன் வளைவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துலெட்சுமி (53) கூறும்போது, ''இருபது ஆண்டுகளில் இல்லாத மழை இந்த ஆண்டு பெய்துள்ளது. இதுபோன்ற மழைநீர் இதுவரை வயல்களில் தேங்கியதில்லை. மழை நின்று 2 நாட்கள் ஆகியும் நிலக்கடலை, எள், தட்டைப்பயறு உள்ளிட்ட வயல்களில் உள்ள தண்ணீர் வடியாமல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மகசூல் தரும் நிலையில் பாதிக்கப்பட்டதால் அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE