மருத்துவர் சாந்தா மறைவு; தலைவர்கள் இரங்கல்: பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

மருத்துவர் சாந்தா மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது அயராத பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

மருத்துவர் சாந்தா மறைவுக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

புற்றுநோய் மருத்துவத்தில் அனைத்து இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவரும், தமிழக மகளிருக்குப் பெருமை சேர்த்தவருமான மருத்துவர் சாந்தா இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

1954ஆம் ஆண்டு நிறுவப் பெற்ற அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில், 1955ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவராகச் சேர்ந்த மருத்துவர் சாந்தா, கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்து வரலாறு படைத்து இருக்கின்றார்.

தமிழ்நாட்டில் யாருக்கேனும் புற்றுநோய் என்று தெரியவந்தால், உடனடியாக அவர்கள் நினைவுக்கு வருவது சாந்தா என்ற பெயர்தான். அந்த அளவிற்கு பொறுப்புடனும், கடமை உணர்ச்சியுடனும் தொண்டு ஆற்றி இருக்கின்றார். பேரறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த காலத்தில், அடையாறு மருத்துவ மனையில்தான் சேர்க்கப்பட்டு இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் புற்றுநோய் வந்தால் பிழைக்க முடியாது என்ற நிலைதான் இருந்தது. அதன்பிறகு கடந்த 50 ஆண்டுகளில் அடையாறு புற்றுநோய் மருத்துவக் கழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று, புற்றுநோய் மருத்துவத்தில் அனைத்து இந்தியாவிலும் முன்னோடியாகத் திகழ்கின்றது. அதற்கான பெருமையில் பெரும்பங்கு மருத்துவர் சாந்தாவையே சாரும். ஏழை எளிய மக்களும், எல்லோரும் எளிதில் அணுகக் கூடியவராக மருத்துவர் சாந்தா திகழ்ந்தார்.

எத்தனையோ நோயாளிகளுக்கு நான் பரிந்துரை செய்து அனுப்பி இருக்கின்றேன். அதற்காக அவருடன் பலமுறை பேசி இருக்கின்றேன். கனிவுடன் கேட்பார்; இயன்ற உதவிகள் அனைத்தும் செய்வார். பணம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. மருத்துவ அறத்துடன் இயங்கினார். அதனால் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் அடையாறு புற்றுநோய் மருத்துவக் கழகத்திற்கு நன்கொடைகளை அள்ளி வழங்கி வருகின்றார்கள்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய சிறப்புகளை இந்திய அரசு அவருக்கு வழங்கி இருக்கின்றது. ஆசியாவின் மிகப்பெரிய விருதான பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேசே விருது பெற்று இருக்கின்றார். அந்தவகையில் தனக்குக் கிடைத்த பணம் முழுமையும் அடையாறு புற்றுநோய் மருத்துவக் கழகத்திற்கு வழங்கிவிட்டார். தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில், என்றைக்கும் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார் அவர் புகழ் வாழ்க.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் நிறுவனரும், சிறந்த மருத்துவருமான டாக்டர் சாந்தா உடல்நல்க் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது இழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும்.

புற்றுநோய் வந்தால் மரணம்தான் என்ற மக்களின் மனநிலையை மாற்றி மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தக் கூடிய நோய்தான் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி 1955ஆம் ஆண்டு சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவனையை ஆரம்பித்துச் சேவையாற்றினார். ஏழை, எளிய மக்களின் துயர் போக்கும் வகையில் அவர்களுக்கு இலவச மருத்துவத்தை அளித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்.

டாக்டர் சாந்தா தன் வாழ்நாள் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது சிறந்த சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள் உயரிய விருதுகளை அளித்து கௌரவித்துள்ளன.

டாக்டர் சாந்தாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா தனது 93ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஏழை, எளியவர்களுக்கு எட்டமுடியாத புற்றுநோய் மருத்துவத்தை எளிதாக கிடைக்கச் செய்து சமூக சேவை செய்த இந்தியாவின் முன்னோடிகளில் முதன்மை இடத்தைப் பெற்ற இவரது மறைவு மிகுந்த துயரத்தைத் தருகிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

அந்தோ, தொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா மறைந்தாரே! அவருக்கு நமது வீர வணக்கம்!

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சாந்தா (93) இன்று (19.1.2021) சென்னை அப்போலோ மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்பதை அறிய மிகவும் வருந்துகிறோம்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரால் சிறிதாகத் தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை (Cancer Institute) அவருக்குப் பின் அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும், டாக்டர் சாந்தாவும்தான் பெரிதும் உழைத்து வளர்த்தார்கள்.

டாக்டர் சாந்தா 67 ஆண்டு காலம் இந்த மருத்துவமனை வளர்ச்சிக்கு இடையறாத தொண்டு செய்து, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களைக் காப்பாற்றிய அருந்தொண்டாற்றிய மருத்துவச் செம்மல். எவரிடமும் பண்போடும், அன்போடும் பழகக்கூடிய எளிமை நிறைந்த மருத்துவர்.

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அடையாறு, புற்றுநோய் மருத்துவமனை ஏழை, எளியவர்களுக்கு ஆற்றும் தொண்டு ஒப்பற்ற ஒன்று. அதை ஆலமரம் போல் வளர்த்துப் பெருக்கி, முழுப் பயன் எளிய மக்களுக்குப் போய்ச் சேர முழுக் காரணம் டாக்டர் சாந்தா. தொண்டின் பெயர் டாக்டர் சாந்தா என்றால் அது மிகையல்ல.

இந்த மருத்துவமனையும், அவரால் பயிற்றுவிக்கப்பட்டு தொண்டறம் புரியும் அங்குள்ள மருத்துவர் தொண்டுமே அவருக்கு நல்ல நினைவுச் சின்னங்களாக என்றும் திகழும். ஆழ்ந்த இரங்கல், நமது வீர வணக்கம்! மருத்துவ நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நமது ஆறுதல்.

விசிக தலைவர் திருமாவளவன்:

சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் உலக சுகாதாதர நிறுவனத்தின் சுகாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான மருத்துவர் சாந்தா அம்மையார் (93) மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. தன்னலமில்லா மக்கள் தொண்டராக மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரிய சாந்தா அம்மையார் தனது இறுதி மூச்சு வரையில் புற்றுநோயிலிருந்து மக்களைக் காக்கும் பணிக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்.

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் தொடங்கிய அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை இன்று உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையாக உயர்த்திய மாபெரும் சாதனையைப் படைத்தவர். எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியவர். அவருடைய மறைவு மருத்துவ உலகுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்குமான மாபெரும் இழப்பாகும்.

அவரது ஈடு இணையற்ற ஈகத்தையும் மருத்துவப் பங்களிப்பையும் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்ய வேண்டுமெனவும், இந்திய உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமெனவும் விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். அவரை இழந்துவாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

“உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தாவின் மறைவு வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவர் சாந்தா தனது மருத்துவப் படிப்பை முடித்தவுடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவை ஆற்றியவர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் உலக சாதனை படைத்தவர். ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர்.

புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதே தனது வாழ்வின் லட்சியமாகக் கருதி தனது இறுதி மூச்சுவரை செயல்பட்டவர். கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவருக்கு மத்திய, மாநில அரசுகளின் உயரிய விருதுகளான மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

அவரது மறைவு உலகெங்கும் இருக்கும் புற்றுநோய் நோயாளிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவ உலகிற்கும், தமிழக மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மறைந்த டாக்டர் சாந்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

டாக்டர் சாந்தாவை இழந்து வாடும் அடையாறு மருத்துவமனையின் சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்

சாந்தா மருத்துவ சேவைக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், அவ்வையார், அன்னை தெரசா உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர். தான் பெற்ற விருதுகளால் கிடைக்கும் பணம் முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்காகவே செலவு செய்தவர்.

சுமார் 12 படுக்கைகளில் இயங்கி வந்த இந்த மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றியதில் இவரது பங்கு அளப்பரியது. புற்றுநோய்க்கு உலகில் எந்த மூலையில் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனே இங்கு கொண்டு வந்து அறிமுகம் செய்ய பெரும் முயற்சி மேற்கொள்வார்.

இவரது மறைவு மருத்துவத் துறைக்கும் தமிழ் நாட்டுக்கும் பெரும் இழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்