பின்னலாடை உற்பத்தியில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடை துறையானது, கரோனா வைரஸ் பரவல் மற்றும் அதைத் தொடர்ந்த பாதிப்பால் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. மேலும், இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இருப்பினும், தொழிலாளர் பற்றாக்குறை என்பது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. சமீபத்தில் கரோனா பாதிப்பால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி நிறுத்தம், அதைத்தொடர்ந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றது, பல்வேறு காரணங்களால் சென்றவர்களில் குறிப்பிட்ட சதவீத பேர் திரும்பி வராதது உள்ளிட்டவை தொழிலாளர் பற்றாக்குறையை மேலும் அதிகரித்துள்ளது.
திருப்பூர் தொழில் துறையில் நிலவும் இந்த நீண்ட கால பிரச்சினை, உற்பத்தி வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக உள்ளது. இத்தகைய சூழலில், தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டால் உற்பத்தி வளர்ச்சி இரட்டிப்பாகும் என்ற நோக்கில், அதற்கான முயற்சிகளில் தொழில்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள் நிரந்தரமாக திருப்பூரில் தங்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் குடியிருப்புகளை உருவாக்க, ஏற்றுமதியாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்குரிய முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க (டீ) தலைவர் ராஜா எம்.சண்முகம், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, "திருப்பூரை பொறுத்தவரை கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்திலேயே தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி நிறுத்தத்தின்போது, வெளி மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்களில் 20 சதவீதம் பேர் திரும்பவில்லை. தற்போது பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும், அங்கிருந்து வரும் வர்த்தக விசாரணைகள் குறையவில்லை. ஊரடங்குக்கு பிறகு அவை ஆர்டர்களாக மாறும்பட்சத்தில், தொழிலாளர்களின்றி என்ன செய்ய இயலும்.
கட்டமைப்புகள் அவசியம்
தொழிலாளர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்க தொழிலாளர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியஇரண்டும் முக்கியமானது. கட்டமைப்பு வசதி என்றால் இயந்திரங்கள் உள்ளிட்டவையே.
வெளிநாடுகளில் இருந்து உற்பத்திக்காக இறக்குமதி செய்யப் பட்ட இயந்திரங்கள், ஒரு நாளில் முழுவதுமாக செயல்படுவதில்லை. நாளொன்றுக்கு 12 மணி நேரம் மட்டுமே செயல்படுகின்றன.
தொழிலாளர்கள் இல்லாததால்மற்ற நேரங்களில் செயல்படு வதில்லை. போதிய தொழிலாளர்கள் கிடைத்து இயந்திரங்கள் நிறுத்தப்படாமல் உற்பத்தி நடைபெற்றால், தற்போதைய உற்பத்தி இரட்டிப்பாகிவிடும். போதிய தொழிலாளர்கள் வசதியை ஏற்படுத்த வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசு, தொழிற்சங்கங்கள், தொழில்துறையினர் இணைந்து, அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் குடியிருப்புகளை கட்டமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அரசியல் சார்பின்றி...
அரசு புறம்போக்கு நிலங்கள், தொழில் துறையினருக்கு சொந்தமான நிலங்களை தேர்வு செய்து, அவற்றில் குடியிருப்புகளை கட்டமைத்து, தொழிலாளர்கள் மாதாந்திர அடிப்படையில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தும் வகையிலும், குறிப்பிட்ட ஆண்டுகளில் அந்த குடியிருப்புகள் தொழிலாளர் களுக்கு சொந்தமாகும் வகையிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை முற்றிலும் அரசியல் சார்பு இல்லாமல் பொதுவாக நிறைவேற்றவுள்ளோம். அதற்கான ஆலோசனைகள், முன்னேற்பாடுகளை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago