கனமழையால் 14 மாவட்டங்களில் விவசாயம் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: கே.எஸ்.அழகிரி 

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் விவசாயிகளின் பாதிப்பை வருவாய்த்துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மூலம் மதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

''சமீபத்தில் பெய்த கடும் மழையினால் தமிழகத்தில் பரவலாக அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் சேற்றிலும், சகதியிலும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அறுவடை எந்திரங்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் பயிர்கள் அழுகி, நாசமாகிவிட்டன. பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய விவசாயிகள் கனமழையின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்பினால் சொல்லொணத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் கடுமையான கனமழையின் காரணமாகத் திறந்து விடப்பட்ட அணைகளின் மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதைத் தவிர, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் சகஜ வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக, கனமழை பெய்கிற காலங்களில் ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், சமீபகாலமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களைச் சேமிக்க கிடங்கு வசதி இல்லாத காரணத்தால் மழையில் நனைந்து பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

விவசாயிகளிடமிருந்து ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்வதற்குத் தமிழக அரசு தயாராக இல்லை. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து ஈரப்பதமுள்ள நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்க தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இது யானைப் பசிக்கு சோளப் பொரி வழங்குவதற்கு ஒப்பாகும். விவசாயிகளின் நஷ்டத்தை மதிப்பீடு செய்யும் போது ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, தமிழகத்தில் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன. போர்க்கால அடிப்படையில் விவசாயிகளின் பாதிப்பை வருவாய்த்துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மூலம் மதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்