தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்குப் போர்க்கால அடிப்படையில் இழப்பீடு: வேல்முருகன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

அறுவடை நெருங்கும்போது கொட்டிய அடைமழைக்குச் சம்பா கதிர்களைப் பறிகொடுத்து தவிக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீட்டைத் தமிழக அரசு வழங்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’டெல்டா மாவட்டங்களில் அறுவடைப் பருவத்தில் இருந்த சம்பாக் கதிர்கள், கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளத்தில் மூழ்கி அழுகிப் போய்விட்டன. ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கரில் அல்ல.- சுமார் 6 லட்சம் ஏக்கரில் இந்தப் பேரழிவு நிகழ்ந்துள்ளது.

இதனால் கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களின் விவசாயிகள் கையில் இருந்ததையும் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். சோழ மண் சோறுடைத்து என்ற பொன்மொழிக்கு ஏற்ப, கழனி செழிக்கும் தஞ்சை மண்ணை வெள்ளக்காடாய்ப் புரட்டிப் போட்டுவிட்டது பெருவெள்ளம். குறிப்பாக கடைப் பகுதிகளான பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வயல் வெளி முழுமையும் கடல் போல் மாறிப்போனது.

இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் சம்பாக் கதிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டன. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பாக் கதிர்கள் அழுகிப்போனதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலத்தில் அறுவடைக்குக் காத்திருந்த கதிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகின.

கடலூர் மாவட்டத்தையும் மழையும் வெள்ளமும் விட்டு வைக்கவில்லை. இம்மாவட்டத்தில் உள்ள காவிரி கடைமடைப் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரிலும் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரிலுமாக 60 ஆயிரம் ஏக்கரில் கதிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழையால் பலத்த பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாதிப்புகளை எல்லாம் மிகச்சரியாகக் கணக்கெடுத்து, விவசாயிகளுக்குக் கட்சி வேறுபாடின்றி குறைந்தபட்சம் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் சரிவர பயிர்க் காப்பீடு வழங்கப்படவில்லை. காப்பீடு வழங்குவதில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் எனப் பேதம் பார்க்கப்படுவது வேதனையிலும் வேதனை.

எனவே அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்வதோடு, வேளாண் பணிகளைத் தொடர ஏதுவாக விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்