கோவை வனக்கோட்டத்தில் தென்பட்ட 275 வகை பறவைகள், 229 வகை பட்டாம்பூச்சிகள்: முதல்முறையாக காணக்கிடைத்தது 'நீலகிரி டைகர்' பட்டாம்பூச்சி

By க.சக்திவேல்

கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஆண்டு முழுவதும் வனத்துறையுடன் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் 275 வகைப் பறவைகள், 229 வகைப் பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளன.

கோவை வனக்கோட்டத்தில் உள்ள கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய 7 வனச்சரகங்களில் உள்ள பல்வேறு வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகளை அறிந்துகொள்ள மாவட்ட வன அலுவர் து.வெங்கடேஷின் அறிவுறுத்தலின்படி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்), டபிள்யு.டபிள்யு.எஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து 2020 ஜனவரி மாதம் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கின. ஜனவரி, மார்ச், ஜூன், அக்டோபர் என 4 கட்டங்களாக இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

ஒவ்வொரு வனச்சரகத்திலும் ஒரு குழு கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டது. இறுதியாக டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பில் மொத்தம் 70 தன்னார்வலர்கள், 43 வனப்பணியாளர்கள் அடங்கிய 15 குழுக்கள் ஈடுபட்டன.

இவ்வாறு கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற கணக்கெடுப்பில் கோவை வனக்கோட்டத்தில் மொத்தம் 275 வகைப் பறவைகள், 229 வகைப் பட்டாம்பூச்சிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

கருங்கொண்டை வல்லூறு

இதுதொடர்பாக சிஎன்எஸ் தலைவர் பி.ஆர்.செல்வராஜ், டிஎன்பிஎஸ் தலைவர் அ.பாவேந்தன், டபிள்யு.டபிள்யு.எஃப் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் ஆகியோர் கூறும்போது, “இவ்வாறு தொடர் கணக்கெடுப்புகளை நடத்துவதன் மூலம் எந்தெந்த இடங்களில், எந்த வகையான பறவைகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். கணக்கெடுப்பில் தென்பட்ட பறவைகளில் 45 வகைப் பறவைகள் குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து இங்கு வரும் பறவைகள்.

அதில், கருங்கொண்டை வல்லூறு ('பிளாக் பாசா') எனும் பறவை போளுவாம்பட்டி, காரமடை வனச்சரகங்களில் தென்பட்டது. இவை, வடகிழக்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருந்து இங்கு வருகின்றன. மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் தென்பட்ட கொண்டை குயில் ('செஸ்ட்நட் விங்டு குக்கூ’) எனும் பறவை இமயமலைப் பகுதிகளில் இருந்து வருகிறது. செந்தலை கூம்பலகன் ('ரெட் ஹெட்டட் பன்டிங்') பறவை சிறுமுகையிலும், பழுப்புத் தலை கூம்பலகன் ('கிரே நெக்டு பன்டிங்') பறவை கோவை வனச்சரகத்திலும் தென்பட்டுள்ளது. இவை, மேற்கு, மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து வருபவை.

'நீலகிரி டைகர்' வகை பட்டாம்பூச்சி

முதல்முறையாகப் பதிவு

கோவை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 278 பட்டாம்பூச்சி வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில், கடந்த ஓராண்டு தொடர் கணக்கெடுப்பின்போது 229 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. காரமடை வனச்சரகத்தில் 'காமன் ஆல்பட்ராஸ்' வகை பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் தென்பட்டன.

கோவை வனக்கோட்டத்தில் முதல்முறையாக 'நீலகிரி டைகர்' வகை பட்டாம்பூச்சி சிறுவாணி, மேல்முடி பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அரிதினும் அரிதாகத் தென்படும் 'ஆட்டம் லீப்' வகை பட்டாம்பூச்சி தென்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்