தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கு அல்ல; எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியாது: மு.க.ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கு அல்ல; எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியாத சூழலே நிலவுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

முன்னதாக, இன்று காலை தேமுதிக.வைச் சேர்ந்த 3000-த்திற்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:

விரைவில் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இன்னும் நான்கு மாதங்கள்தான். தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். அந்தத் தேர்தலை நாம் எதிர்பார்ப்பதை விட, இந்த மேடையில் இருக்கக்கூடிய நாங்கள் எதிர்பார்ப்பதை விட, நீங்கள் எதிர்பார்ப்பதை விட, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே எதிர்பார்த்துக் காத்திருப்பது எதற்காக என்றால், தி.மு.க. உடனடியாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக.

அதற்குக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி இந்த நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு, ஒரு பொய்யான பிரச்சாரத்தை, ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுக. செய்து கொண்டிருக்கிறது.

அரசின் சார்பில் விளம்பரங்களைப் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியின் சார்பில் கொடுத்தால் நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. கட்சியின் சார்பாக என்ன வேண்டுமானாலும் விளம்பரம் செய்து கொள்ளட்டும். அதைத் தடுக்க விரும்பவில்லை; விமர்சனம் செய்யவும் தயாராக இல்லை.

ஆனால் அரசின் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கென கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விளம்பரம் செய்ய முடியாது. கட்சியின் சார்பில் விளம்பரம் செய்தாலும் அதற்குக் கணக்குக் காட்ட வேண்டும்.

எனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திட்டமிட்டு மக்களை எப்படியாவது மயக்கி விட வேண்டும் - எப்படியாவது ஏமாற்றி விட வேண்டும் என்பதற்காக, இப்படி மக்களின் வரிப்பணமாக இருக்கக் கூடிய அரசுப் பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தரக்கூடிய வரிப் பணத்தை வைத்து மக்களுக்கான திட்டங்களைத்தான் தீட்ட வேண்டும்.

அந்த விளம்பரங்களைப் பார்த்தீர்களென்றால், உலகிலேயே இவர்தான் ஏதோ பெரிய சாதனை செய்த மாதிரி - மிகப்பெரிய அளவுக்கு விருதுகளை வாங்கியது போல எல்லாவற்றிலும் முதலிடம் முதலிடம் என்று மக்களை ஏமாற்றுகிற நிலையில் அந்த விளம்பரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்; சி-வோட்டர் என்ற அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால், 22 மாநிலங்களில் கருத்துக்கணிப்பு எடுத்திருக்கிறார்கள். அதில் முதலமைச்சர் பழனிசாமி இருக்கக்கூடிய நம்முடைய தமிழகம் 19-வது மாநிலமாக இடம்பெற்றிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நவீன் பட்நாயக் அவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று 78 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் பழனிசாமியின் ஆட்சியை எதிர்த்து 70 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதையெல்லாம் மூடி மறைத்து இன்றைக்கு இருக்கும் இந்த ஆட்சி தவறான பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறது.

நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் - குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு அல்ல; எதிர்க்கட்சியாகக் கூட நீங்கள் வர முடியாத சூழல் தான் நிலவுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, எதிர்வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தேன். இப்போது நாம் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை உற்சாகத்துடன் நடத்தி, மக்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் மனநிலையைப்ப பார்க்கும்போது, 234-க்கு 234 இடங்களையும் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

இந்தச் சூழலில்தான் நீங்களெல்லாம் தே.மு.தி.க.வில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து இணைந்து இருக்கிறீர்கள். அப்படி இணைந்து இருக்கக்கூடிய உங்களிடம் அன்போடு நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எதிர்வரும் தேர்தலில் நீங்கள் மட்டுமல்ல, உங்களது உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், உற்றார், அத்தனைபேரிடத்திலும் நீங்கள்தான் பிரச்சார பீரங்கிகளாக இருந்து இந்த ஆட்சியினுடைய அக்கிரமங்களையெல்லாம் சுட்டிக்காட்டி, தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கருணாநிதி ஐந்து முறை ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் என்ன சாதனைகளை எல்லாம் செய்தார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனையெல்லாம் மனதில் வைத்து நீங்கள் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் 5 சவரன் வரையிலான அந்தக் கூட்டுறவு நகைக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலின்போது அறிவித்தேன். அதனை இப்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை ரத்து செய்தார். அதேபோல் தற்போது உள்ள விவசாயக் கடன்களையும் ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதனைச் செய்ய மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் சென்று அதிமுக அரசு தடை வாங்கி வைத்திருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் தடையை உடைத்து விவசாயக் கடனை ரத்து செய்வோம் என்று சொல்லியிருந்தேன். அதனை இப்போதும் சொல்கிறேன்.

திமுக ஆட்சியில் எல்லோருக்கும் வழங்கப்பட்டு கொண்டிருந்த முதியோர் உதவித்தொகைத் இப்போது சரியாக வழங்கப்படுவதில்லை; கட்சிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்தவுடன் கட்சிப் பாகுபாடின்றி முதியவர்களுக்கு அந்த உதவித் தொகை வழங்கப்படும் என்பதையும் அறிவித்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்