காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடுக: கண்துடைப்பு கருத்துக் கேட்பையும் ரத்து செய்க- மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் திட்டத்துக்காக நடத்தப்படும் கண்துடைப்புக் கருத்துக் கேட்பையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிறு துறைமுகமாக, சில ஏற்றுமதிக்காக மட்டும் அனுமதி பெற்று 2012-ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. எல் அண்ட் டி நிறுவனத்தின் சிறிய துறைமுகத்தை 2018-ல் அதானி குழுமம் வாங்கியது. அதனை ஒரு பெரும் வர்த்தகத் துறைமுகமாக சுமார் 6,000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டம் தயாரித்துள்ளது. சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்தத் துறைமுகத்தின் சுற்றுச்சூழல், சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் முழுமையாகத் தமிழில் மக்களிடம் கிடைக்க வழிவகை செய்யாமல் கருத்துக் கேட்புக் கூட்டம் 2021 ஜனவரி 22 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் மக்கள் அதிகமாகவுள்ள காட்டுப்பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல், மீஞ்சூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில் அவசரம் அவசரமாக இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியும் எழுந்துள்ளது.

கடற்கரை அரிப்பு அச்சம்

பல நிபுணர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த துறைமுகத் திட்டம் சட்டத்திற்குப் புறம்பானது எனவும், அரசின் சுற்றுச்சூழல் மண்டல விதிகளுக்கும் புறம்பானது எனவும் ஆதாரபூர்வமாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதம் இருக்கின்ற கடற்கரையும் அரிக்கப்பட்டுவிடும் என்றும், கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது எனவும் மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எண்ணூர் -பழவேற்காடு மக்களின் வாழ்வாதாரம் இந்தத் திட்டத்தால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும். மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் வலுவான கோரிக்கையாக உள்ளது.

காட்டுப்பள்ளி பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது. அங்கு துறைமுக விரிவாக்கம் நடந்தால் ஒரு பக்கம் மண்சேர்ப்பும், மறுபக்கம் மண் அரிப்பும் அதிகரிக்கும். பழவேற்காடு ஏரியையும் கடலையும் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பழவேற்காடு ஏரி, பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவை பாதிக்கப்படும். சுற்றியிருக்கும் விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவர்.

இத்திட்டத்திற்குத் தேவையான 6,110 ஏக்கர் நிலப்பரப்பில், 2,291 ஏக்கர் மக்களுக்குச் சொந்தமான நிலமும், 1515 ஏக்கர் TIDCO-க்குச் சொந்தமான தனியார் நிலமும் கையகப்படுத்த உள்ளன. அத்துடன் சுமார் 1,967 ஏக்கர் கடல் பரப்பையும் கைப்பற்ற உள்ளதால், கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ. நீளத்திற்கு 2,000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். இது கடுமையான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும். கடல் உணவுகள் அதிகம் கிடைக்கும் இந்தப் பகுதியில் இத்திட்டத்தால், மீன்வளம் வெகுவாகக் குறைந்திடும். இதனால், இப்பகுதியில் உள்ள பல மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

அரசு துறைமுகங்களை மூடவேண்டிய அபாயம்

பொருளாதார ரீதியாகப் பார்த்தால் அருகில் இருக்கும் காமராஜர் துறைமுகமும், சென்னை துறைமுகமும் அவற்றின் ஆற்றலில் 50 சதவீதம் கூடச் செயல்படவில்லை. எனவே, அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இரண்டு பொதுத்துறைத் துறைமுகங்களையும் மூடவேண்டிய அபாயம் ஏற்படும். இது அரசுக்கும், மக்களுக்கும் பேரிழப்பு.

இந்தத் திட்டத்தால் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கும் வழியில்லை. வெறும் 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதானி குழுமம் பெரும் லாப வேட்டை நடத்திட இந்தத் திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தும்.

இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணை போகக் கூடாது. எனவே, இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

கண்துடைப்பு போல் அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 22 மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. எக்காரணம் கொண்டும் இந்தப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக இந்தத் திட்டத்தை அதானி குழுமம் முன்னெடுக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்