இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை முற்றிலும் சிதைக்கிற வகையில் மத்திய பாஜக அரசு சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.643.83 கோடியைச் செலவழித்துள்ளது மத்திய அரசு என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழி திட்டத்தைத் திணிக்க முயன்றபோது, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரயில்வே, அஞ்சல் துறைப் பணியாளர் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு வந்தபோது மீண்டும் பாஜக அரசு பின்வாங்கியது. ஆனால், பாஜக அரசின் ஒரே நோக்கம் இந்தி மொழியைத் திணிப்பது மட்டுமல்ல, புழக்கத்திலே இல்லாத சமஸ்கிருத மொழியைத் திணிப்பதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
» மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்; ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: வைகோ கோரிக்கை
இந்திய அறிவியல் அமைப்பைப் போற்றும் விதமாக கரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் நேரு அறிவியல், தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் 2021-ம் ஆண்டின் நாட்காட்டி மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்கிற முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
சமஸ்கிருத மொழியின் சிறப்புகளை விளக்கும் வகையில் அறிவியல், அண்டவியல், வானியல், ஜோதிடம், ஆயுர்வேதம், கணிதம், வாஸ்து சாஸ்திரம், அர்த்தசாஸ்திரம், வேதியியல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளின் முன்னோடிகளான சப்த ரிஷிகள், விஞ்ஞானிகள் மற்றும் இதிகாசம், புராணம், வேதம், உபநிடதங்களின் சாராம்சங்களுடன் இந்த நாள்காட்டி தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆதிகால சப்த ரிஷிகளின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நாள்காட்டி மூலம் சமஸ்கிருத கலாச்சாரத்தைத் திணித்து இன்றைய மாணவர்களுக்கு அறிவியல் பார்வையை வழங்க மறுக்கிற போக்கில் பகுத்தறிவிற்கு எதிராக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் பண்டித நேரு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக கரக்பூர், சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மாணவர்கள் அறிவியல் அறிவையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டு இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
ஆனால், இந்தியத் தொழில்நுட்ப கழகங்கள் எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை முற்றிலும் சிதைக்கிற வகையில் மத்திய பாஜக அரசு சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.643.83 கோடியை பாஜக அரசு செலவழித்திருக்கிறது. செம்மொழி தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.29 கோடி மட்டும்தான்.
இதை ஒப்பிடும்போது 22 மடங்கு கூடுதலாகச் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக தலைநகர் டெல்லியில் ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்சதன் என்கிற அமைப்பை உருவாக்கி, அதன்மூலமாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 28,821 மட்டுமே. அதாவது, 121 கோடி மக்கள் தொகையில் 0.00198 சதவிகிதம்தான். இதற்குதான், மக்கள் வரிப் பணத்திலிருந்து மத்திய பாஜக அரசு பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழியை வளர்க்க பாரபட்சமாக நிதியை ஒதுக்கி வருகிறது.
அதேநேரத்தில் செம்மொழி தகுதிபெற்ற தமிழ் மொழிக்குக் கடந்த மூன்றாண்டுகளில் மொத்தம் ரூ.22.94 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மத்திய பாஜக அரசு தமிழ் உள்ளிட்ட மொழிகள் மீது எத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டு வருகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் புறக்கணித்து விட்டு சமஸ்கிருத மொழிக்கு மட்டும் நிதிகளை மத்திய பாஜக அரசு வழங்கி வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் திருக்குறளையும், மகாகவி பாரதியின் கவிதைகளையும் மேற்கோள் காட்டிவிட்டு, தமிழ் மொழியை வளர்க்க நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பதை விட ஓர் இரட்டை வேடம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இதன் மூலம் தமிழ் மொழி மீது பற்று இருப்பதைப் போலப் பிரதமர் மோடி கண்துடைப்பு நாடகம் நடத்தி வருகிறார். இதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை அப்பட்டமான தமிழ் விரோதப் போக்காகவே கருதுகிறோம்.
எனவே, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பையும், இதற்காக மத்திய அரசு நிதியை வாரி வழங்குவதையும், தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் புறக்கணிப்பதையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய போக்கு தொடருமேயானால் மத்திய பாஜக அரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன்''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago